Thursday, April 27, 2017

இதெல்லாம் ஒரு பிழைப்பா சங்கிகளே?


மோசடி டவுசர் பாய்ஸ் எப்பவுமே பொய் மட்டும்தான் பேசுவாங்க. அவங்க வாயிலேயிருந்து என்னிக்குமே உண்மை மட்டும் வரவே வராது. இவங்க டுபாக்கூர், ஃபிராடு என்று மீண்டும் மீண்டும் புரட்டி அடிச்சாலும் கொஞ்சம் கூட சூடு, சொரணை இல்லாமல் மறுபடியும் மறுபடியும் கதை விட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

இப்பவும் ஒரு மூன்று கற்பனைக்கதைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். அதெல்லாம் தவறு என்று ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை. இடதுசாரிகள் மீதான பொய் என்றால் சில நடுநிலை நல்லவர்களுக்கு திடிரென நீதி, நியாயம், நேர்மை எல்லாம் வந்து விடும். பொய்க்கதைகளை நம்பி உபதேசம் சொல்ல புறப்பட்டு விடுவார்கள்.

தற்போது உலவும் மூன்று பொய்களும் உண்மை நிலவரங்களும் பற்றி பார்ப்போம்.

கேரள மின்சார அமைச்சர் தோழர் எம்.எம்.மணி பற்றியது.

தோழர் சதன் தக்கலை எழுதிய பதிவு நடந்தது என்ன என்பதை முழுமையாக விளக்கும். அதை படியுங்கள்.கேரளாவில் சில தினங்களாக, கேரள மின்துறை அமைச்சர் பெண்களைப்பற்றி தரக்குறைவாக பேசிவிட்டார் என்று எதிர் கட்சிகளும் வலதுசாரி கார்ப்பரேட் ஊடகங்களும் தொடர்ந்து ஊளையிட்டு வருகின்றன...

கேரளத்தின் மூணார் பகுதி இயற்கை எழில் கொஞ்சும் மலயோர சிறு நகரம்...சுற்றுலாத்தலம், தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதி, டாடா போன்ற பெரும் கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் தேயிலைத்தோட்டங்களும் இங்கு இருக்கின்றன...

இங்கு எராளமான தொழிலாளர்கள் அதிலும் குறிப்பாக பெண் தொழிலாளர்கள் தேயிலைத்தோட்டங்களில் பணியாற்றி வருகிறார்கள்...


இத்தகைய வளம் மிகுந்த பகுதியில் தங்கள் உடமைகளைப் பெருக்க, வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிக்க, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் முயன்று வருகின்றன...அந்த நிலங்களில் பெரிய ரிசார்ட்டுகள் ஹோட்டல்கள், பொழுதுபோக்கு மையங்கள் அமைக்க முயன்று வருகின்றன... 

அந்தப் பகுதியிலும் இடுக்கி மாவட்டத்தின் பிற மலைப் பிரதேசங்களிலும் இது போன்ற ஆக்கிரமிப்புகளை எதிர்த்து CPIM-மும் இடதுமுன்னணி அரசும் போராடி வருகின்றன...ஒவ்வொரு காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் தனியாருக்கு சட்டவிரோதமாக பட்டா போட்டு கொடுத்த நிலங்களை அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை, அதற்கடுத்து வரும் இடதுமுன்னணி அரசுகள் மீட்பது தொடர்கதையாகி வருகின்றன...ஆனாலும் ஆக்கிரமிப்புகள், பலவித தந்திரங்களைப் பயன்படுத்தி நடந்து வருகின்றன...வழிபாட்டுத்தலங்கள் அமைக்க என்ற பெயரில் ஏக்கர் கணக்கில் நிலத்தை அபகரிப்பதும் அதன் ஒரு பகுதியாகும்...

அதோடு வழிபாட்டுத்தலங்களை கேடயமாகப் பயன்படுத்தி ஆக்கிரமிப்புகளை தொடரலாம் என்ற குதர்க்க தந்திரமும் அதில் மறைந்துள்ளது....


அத்தகைய முறையில் ஒரு கிறிஸ்தவ தேவாலயமும் அமைக்கப்பட்டிருந்தது...அதனை அகற்றுவதற்கு சில அதிகாரிகள் முயன்றனர்...அதிகாரிகளில் சிலர் மறைமுகமாகவும் சிலர் நேரடியாகவும் இந்த ஆக்கிரமிப்புகளுக்கு துணை போகிறார்கள்...அதில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தீவிரமாக ஈடுபடுவது போல் நாடகமாடி சில அதிகாரிகள் இந்த வழிபாட்டுத் தலங்களை முதலில் அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்கி, அதன் மூலம் சாதாரண மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு ஆக்கிரமிப்பை அகற்றும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக மக்களின் கோபத்தைத் திருப்ப முயன்றுள்ளனர்...அத்தகைய முயற்சியாக மூணார் பகுதியிலுள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தைத் தேர்ந்தெடுத்து அதை அகற்ற முயன்றனர்...அந்த தேவாலயத்தின் முகப்பில் இருந்த பிரம்மாண்ட சிலுவையை நம்பிக்கையாளர்கள் மனம் புண்படும்படி ஆக்ரோஷத்துடன் உடைத்தனர்... இதனை ஊடகங்கள் கேரள இடதுமுன்னணி அரசுக்கு எதிராக பயன்படுத்த முயன்றனர்...

ஆனால கேரள முதல்வர் உடனடியாகத் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டியது அத்தியாவசியம் ஆனால் யாருடைய நம்பிக்கையிலும் இந்த அரசு தேவையில்லாமல் தலையிட்டு நம்பிக்கையாளர்களை வேதனைப் படுத்தாது...அங்கு அந்த ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற அதிகாரிகள் மறைமுகமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தடுக்கவே, இத்தகைய செயல்களை செய்கின்றனர் என்று கூறியதோடு ஆக்கிரமிப்பு அகற்றம் முறைப்படுத்தப் பட்டு மீண்டும் முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என்றும்...ஆக்கிரமிப்பும் வாழ்க்கைக்காக குடியேறுவதும் இரண்டும் வெவ்வேறு என்றும்...வாழ்வாதரத்திற்காக குடியேறிய மக்களுக்கு குடிமனைகளுக்குத் தேவையான அளவு நிலத்திற்கான பட்டாவும் வழங்கப்படும் என்றும்...மே மாதம் முதல் இந்தப் பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவித்தார். இதற்காக ஒரு அரசு உயர்மட்டக்குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது...
இது நில மாபியாக்களுக்கும் கார்பரேட்டுகளுக்கும் பெரும் பின்னடைவானது...

இந்தப் பின்னணியில் நில மாபியாக்களின் இத்தகைய நரிதந்திரங்களை அம்பலப்படுத்திப், CPIM சார்பில் தோழர் M.M.மணி ஒரு கூட்டத்தில் பேசினார்...அதில் கார்ப்பரேட் ஊடகங்களின் ஊழியர்களும், நில மாபியா கைக்கூலிகளும், சில அரசு அதிகாரிகளும் யாரால் வழி நடத்தப்படுகிறார்கள் என்று அம்பலப்படுத்தினார்...அதோடு அவர்கள் அனைத்துவிதமான கேளிக்கைகளிலும் ஈடுபட்டுவருவதையும் வெட்டவெளிச்சமாக்கினார்...சில ரிசார்டுகளும் கேளிக்கை விடுதிகளும் இவர்களுக்கு அத்தகைய வசதிகளை செய்து கொடுத்ததையும், இவர்கள் அத்தகைய கேளிக்கைகளில் பங்கேற்றதையும் கோடிட்டு காட்டினார்...அப்போது ஏற்கனவே மூணார் கண்ணன்தேவன் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் “பொம்பிளை ஒருமை” என்ற அமைப்பின் கீழ் போராட்டத்தில் ஈடுபட்ட காலகட்டத்திலும், கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக பிரச்சனையைத் திசைதிருப்பும் நோக்கத்தோடு மூணாறில் முகாமிட்டு, நில மாபியா, கார்பரேட் ஆதரவு கும்பல் இதே கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள்... அப்போது அவர்கள் ரிசார்ட்டுகளுக்கு பதிலாக காட்டிற்குள் அவற்றை செய்து கொண்டிருந்தார்கள் என்று அந்த நில அபகரிப்புக் கும்பலையே தாக்கிப்பேசினார்...


இந்த விடியோ காட்சியை மலையாள மனோரமா நியுஸ் தொலைக்காட்சி திரித்து “பொம்பளை ஒருமை” பெண்களை தான் தோழர் மணி குறிப்பிட்டதாக செய்தி பரப்பியது...”பொம்பிளை ஒருமை போராட்டக்காலத்திலும்” என்று குறிப்பிடுவதற்கு பதிலாக “பொம்பிளை ஒருமை நடந்த காலத்திலும்” என்று குறிப்பிட்டிருப்பார்... அவ்வளவு தான்...


இதை அவரது பேச்சை முழுமையாக கேட்கும் யாரும் புரிந்து கொள்ள முடியும்...ஆனால் குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் எடுத்து விபச்சார ஊடகங்கள் தங்கள் தேவையை நிறைவேற்றின...தோழர்.M.M.மணி ஒரு எளிமையான கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் என்பதும் அவரது இயல்பான கிராமப்புற மொழிநடை பற்றியும், அலங்காரமற்ற உரைகள் பற்றியும் அறிந்தவர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதோடு அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் செய்தார்கள்...

அதோடு எதிர்கட்சிகள் குறிப்பாக காங்கிரசும் பாஜகவும் இதை பெரிதாக்கி அரசியல் ஆதாயம் தேட முயன்றனர்...சிலர் அவரது உருவத்தையும் நிறத்தையும் ஆதாரமாக வைத்து சமூக ஊடகங்களில் கேலிச்சித்திரங்களை உலாவ விட்டார்கள்...தமிழகத்தில் இதை கேரள-தமிழ்நாடு மாநிலப் பிரச்சனையாக்க சிலர் முயன்று வருகிறார்கள்...தோழர். M.M.மணி தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்று கூடத் தெரியாமல் மலையாளி என்று கருதி எதிர்ப்பது நகைப்புக்குரியது...

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் பல பொது இடங்களிலும் பெண்களை அவமானப்படுத்தியும் மானபங்கப் படுத்தியும் சர்ச்சைகளில் மாட்டிய, ராஜ்மோகன் உண்ணித்தான், பீதம்பரப் குறுப்பு, குஞ்ஞாலிக் குட்டி, அப்துல்லாக் குட்டி மற்றும் சரிதா நாயர் பிரச்சனையில் சிக்கியவர்கள் போன்ற உத்தமர்களே அதிகமாக வாய் கிழிய பேசி வருகிறார்கள்...

எல்லாவற்றுக்கும் மேலாக, ஷோபா சுரேந்திரன் என்ற BJP பெண் தலைவர், எம் எம் மணியை உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமென்றால் அவரை "வைத்துக்கொள்ளுங்கள்" என்று என்று அதரவு தெரிவித்துப் பேசிய பெண் தொழிலாளர்களைப் பார்த்து எரிச்சலைடைந்து தரக்குறைவாக கூறியுள்ளார்... ஆனால் இதை எந்த ஊடகமும் கண்டுகொள்ளவில்லை என்பதும் இப்பிரச்சனையிலுள்ள உள்நோக்கத்தை தெளிவாக உணர்த்துகிறது.


எனினும் இப்பொழுது உண்மை வெளியான பின்னர் தோழர் M.M.மணியை பலரும் ஆதரிக்கிறார்கள்...ஆதரவு இயக்கங்கள் பெருகி வருகின்றன...

கேரள இடதுமுன்னணி ஏராளமான மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவது எதிரிகளுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது...அதில் குறிப்பாக தோழர்.M.M மணியின் பொறுப்பிலுள்ள, மின்சாரத் துறை ஒரு முக்கிய சாதனையயை நிகழ்த்தப் போகிறது...கேரளம் நாட்டிலேயே முழுமையாக மின்சார வசதி பெற்ற மாநிலமாக மாற இருக்கிறது.... 

தோழர். பிணராயி விஜயன் பாசிசத்திற்கு எதிரான நாடு தழுவிய போராட்டங்களில் முக்கிய அடையாளமாக பலராலும் முன் நிறுத்தப்படுகிறார்... எதிர்காலத்தில் நாடு, பாசிச சக்திகளால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இருந்து இந்நாட்டையும் மக்களையும் மீட்கும் போராட்டங்களை வலுவாக நடத்தும் வல்லமை கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே உள்ளது என்ற அபாயமணி எதிரிகளின் காதுகளுக்கு கேட்கத் தொடங்கிவிட்டது என்பதன் அறிகுறியே இத்தகைய பொய்ப் பிரசாரங்கள் என்பதில் ஐயமில்லை...

CPIM இத்தகைய சதிகளை முறியடித்து முன்னேறும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்...!


அதிகாரிகளின் அராஜகத்தை அம்பலப்படுத்தினால் அது பெண்களுக்கு எதிரானது என்று திசை திருப்பிய சதிக்கு இரையாகி உபதேசம் செய்த நடுநிலை நல்லவர் யாரும் தங்களின் தவறை ஒப்புக் கொள்ள தயாராக இல்லை. உங்கள் பேச்சு நடை சரியில்லை. மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவரை கட்சி நிச்சயம் எச்சரிக்கும். தவறுகளை கண்டிக்கவோ, திருத்திக் கொள்ளவோ மார்க்சிஸ்ட் கட்சி தயங்காது. அது பற்றி இந்த நல்லவர்கள் கவலைப்பட அவசியமில்லை.

காவிகளின் கட்டுக்கதையை நம்பி இப்போது உணர்ச்சிவசப்படுகிற உத்தமர்கள் எல்லாம் எப்போதுமே இப்படி நியாயம் பேசுபவர்கள்தானா என்று கொஞ்சம் அவர்களின் பதிவுகளைப் பார்த்தால் அப்படி எல்லாம் பெண்களின் பிரச்சினைக்காக பரிதவிப்பவர்களாகத் தெரியவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி மீது மனதுக்குள் ஒளிந்திருக்கிற ஏதோ ஒரு உணர்வு (அது என்ன எழவு என்று அவர்களுக்குத்தான் தெரியும்) போட்டுத்தாக்க கிடைத்தது ஒரு வாய்ப்பு என்று புறப்பட வைத்து விட்டது.

இரண்டாவது பொய்

டெல்லி மாநகராட்சி தேர்தலில் முப்பத்தி ஓரு தொகுதிகளில் போட்டியிட்ட இடதுசாரிகள் மொத்தமாகவே 51 வாக்குகளைத்தான் பெற்றார்கள் என்பது இக்கதை. மோசடிப் பேர்வழி என்று சக சங்கியான எஸ்.வி.சேகரால் குற்றம் சுமத்தப்பட்ட பாஜக மாநிலச் செயலாளர் கேடி ராகவன் கட்டிய கதை இது. ஒரு வார்டில் மட்டுமே சிபிஎம் நான்காயிரத்துக்கு மேல் வாக்குகள் பெற்ற விபரத்தைச் சொல்லி காரித்துப்பியதும் அதை அவர் டெலிட் செய்து விட்டார். கேடி ராகவனை நம்பி நக்கல் செய்த எல்லோரும் எங்கோ காணாமல் போய் விட்டார்கள்.

மூன்றாவது பொய் ரொம்பவே அபாயகரமானது. விஷத்தை பரப்பும் விபரீத வேலை.

சத்திஸ்கரில் மாவோயிஸ்டுகளோடு நடந்த மோதலில் சிஆர்பிஃஎப் வீரர்கள் கொல்லப்பட்டதை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மானவர் சங்கத் தோழர்கள் கொண்டாடினார்கள் என்று புகைப்படங்களை வெளியிட்டு வழக்கமான தேச துரோகி டயலாக்கையும் பயன்படுத்தினார்கள், அந்த புகைப்படங்கள் எல்லாம் மாணவர்  சங்கத் தேர்தல் வெற்றியைக் கொண்டாட (ஏ.பி.வி.பி தோல்வியடைந்த தேர்தலும் கூட). நடந்த நிகழ்வின் புகைப்படங்களை ஏதோ இப்போது எடுத்த படங்கள் என்று புலம்பியுள்ளனர்.

ஜேஎன்யு மாணவர்கள் மீது பொதுப்புத்தியில் ஒரு வெறுப்பை உருவாக்க காவிக் கேடிகள் தொடர்ந்து செய்யும் முயற்சியில் இதுவும் ஒன்று.

மூன்று சம்பவங்களிலும் பாஜககாரர்கள் அப்பட்டமான பொய்யர்கள் என்பது மீண்டும் அம்பலமாகி உள்ளது. நிமிர்த்த முடியாத நாய் வால், நஞ்சுள்ள நாகம் என்பது போல பாஜகவும் பொய்யும் பிரிக்க முடியாதது. உண்மை பேச வேண்டும் என்பதை விட தற்கொலை செய்து கொண்டு செத்துப் போவது அவர்களுக்கு எளிதானது. இந்த கேடு கெட்ட பிழைப்பிற்கு அவர்கள் பிச்சை எடுக்கப் போகலாம்.பின் குறிப்பு 

கேடி ராகவனின் கட்டுக்கதையை நம்பி “நாராயணசாமி நடராஜன்” என்று முதியவர் என் வலைப்பக்கத்தில் பின்னூட்டம் போட்டு மகிழ்ச்சியடைந்தார். நேர்மை சிறிதும் இல்லாத, வன்மம் மட்டுமே கொண்ட அவரது பின்னூட்டங்கள் எதையும் பிரசுரிக்க மாட்டேன் என்று வெளிப்படையாகவே அறிவித்த போதிலும் தனது வெறியை தணித்துக் கொள்ள அவர் அவ்வப்போது பின்னூட்டமிடுவதும் அதை நான் அகற்றுவதும் நடந்து கொண்டே இருப்பது வேறு விஷயம். அவர் என்னை பாராட்டி போட்ட இரண்டு பின்னூட்டங்களையும் கூட நான் அகற்றத்தான் செய்தேன்.
ஒரு துப்பறியும் நாவலுக்கு இணையான . . . .
நூல்                 “முகிலினி”
ஆசிரியர்             இரா.முருகவேள்
வெளியீடு            பொன்னுலகம் புத்தக நிலையம்
                     திருப்பூர்
விலை               ரூபாய் 375.00

முதலாளித்துவ தொழில் வளர்ச்சி காவு வாங்கும் சுற்றுச் சூழல் பற்றிய உண்மைகள், நாவல் வடிவத்தில் சொல்லப்பட்டுள்ள நூல்.

முதலாளிகள் தங்களின் லாபத்தை அதிகரிப்பதற்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள், ஆட்சியாளர்களும் அவர்களின் இயந்திரமான காவல்துறையும் முதலாளிகளுக்கு சேவகம் செய்வதையே கடமையாகக் கொண்டுள்ளது, ஆனால் சக்தி மிக்க போராட்டத்தின் முன்னே யாராக இருந்தாலும் மண்டியிட்டுத்தான் தீர வேண்டும் என்பதுதான் இந்த நூலின் அடிநாதம்.

கோவை மாவட்ட பஞ்சாலைகளின் துவக்க காலம், கொத்தடிமைகள் போல நடத்தப்பட்ட தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொழிறசங்கங்கள் நடத்திய போராட்டங்கள், அதற்கெதிரான அடக்குமுறை, அவற்றை முறியடித்த உறுதி, பஞ்சாலை முதலாளி தன் தொழிலை விரிவாக்க செயற்கை நூலிழை உற்பத்தியை அன்னிய நாட்டுக் கம்பெனியோடு துவக்குவது, அதற்காக இயற்கை தந்த கொடையான நதியை மாசுபடுத்துவது, அன்னியச் செலாவணி நெருக்கடி காரணமாக மூலப்பொருளையும் இங்கேயே தயாரிக்க ஆலோசனை தரும் அரசு அதற்காக காடுகளை அழிக்க துணை போவது. உள்ளூர் முதலாளியின் தொழிலை பெரு முதலாளி கைப்பற்ற முயல்கையில் அதை கொடுத்து விட்டு வேறு தொழிலுக்குப் போவது, மாசு படுதல் காரணமாக அரசும் நீதிமன்றமும் அளிக்கும் உத்தரவுகளை தொடர்ந்து உதாசீனம் செய்வது என்று நாம் பார்த்த காட்சிகளை, நடந்த சம்பவத்தை பெயரை மட்டும் மாற்றி அளித்துள்ளார் ஆசிரியர்.

சிறுமுகையில் உருவாகும் டெக்கான் ரேயான்ஸ் ஆலையால் பவானி ஆறு மாசுபடுகிறது. விவசாயம் பாதிக்கப்படுகிறது. குடிநீருக்குக் கூட அலைய வேண்டியுள்ளது. தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் வீதியிலும் நீதிமன்றத்திலும் போராட இறுதியில் ஆலை மூடப்படுகிறது. மூடப்பட்ட ஆலையின் இயந்திரங்களை கொள்ளையடிப்பதையே தொழிலாக கொண்டு செயல்படுபவர்கள், அவர்களுக்குள் போட்டி, கொலை, வழக்கு என்று ஒரு புறமும், டெக்கான் ரேயான்ஸ், உரக்கம்பெனி தொடங்கிய குடும்பமே பிறகு இயற்கை விவசாயம், அப்பொருட்களை விற்பது என்று அதிலும் காசு பார்ப்பது என்பது மறு புறம். புதிதாய் முளைக்கும் சாமியார்களும் வந்து போகிறார்கள்.

மனித மனதின் முரண்களை கச்சிதமாய் வெளிப்படுத்தும் எண்ணற்ற பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளனர். காதலுக்கும் கதையில் இடமுண்டு. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள்தான் நாவலின் களம் என்றாலும் ஒரு துப்பறியும் நூலைப் போல விறுவிறுப்பாக நூலின் பக்கங்கள் வேகமாய்ச் செல்கிறது.

அதென்ன முகிலினி என்று தலைப்பு?

சதர்ன் விஸ்கோஸ் ஆலை நாவலில் டெக்கான் ரேயானாக மாறியது போல, ஒரு பாத்திரத்தின் வழியே பவானி ஆறுக்கு முகிலினி என்று பெயர் சூட்டுகிறார். அந்த குடும்பத்தின் உறுப்பினராகவே முகிலினி திகழ்கிறது.

சமகாலப் பிரச்சினையை பேசிய முக்கிய நூல்கள் பட்டியலில் “முகிலினி” க்கு முக்கிய இடம் உண்டு. நூலாசிரியர் இரா.முருகவேள் தமிழாக்கம் செய்த “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” படித்துள்ளேன். இதர நூல்களையும் தேடிப் பிடித்து வாசிக்க வேண்டும் என்ற உந்துதலை முகிலினி உருவாக்கியுள்ளது.

Wednesday, April 26, 2017

நெல்லிக்காய் ஜூஸ் தடையும் மரண வதந்தியும்கீழே உள்ள பதிவை எழுதி விட்டு அதற்கு பொருத்தமாக போலிச்சாமியாரின் படம் ஒன்றை போடலாம் என்று இணையத்திற்கு இப்போது சென்ற போதுதான் பாபா ராம்தேவ் விபத்தில் மரணம் என்று ஒரு வதந்தி பரவியதாக அறிந்து கொண்டேன்.

நெல்லிக்காய் ஜூஸ் மேட்டரிலிருந்து கவனத்தை திசை திருப்ப டுபாக்கூர் சாமியாரே, இந்த வதந்தியை கிளப்பி விட்டிருப்பாரோ என்று ஒரு சந்தேகம் வருகிறது.

ஏனென்றால் இந்த கேடிகள் எதையும் செய்வார்கள்

 
 மிலிட்டரி காண்டீனோடு நிறுத்தாதே

போலிச்சாமியார் ராம்தேவின் பதஞ்சலி கம்பெனி தயாரிக்கும் நெல்லிக்காய் ஜூஸ் அதாங்க ஆம்லா ஜூஸ், நுகர்வதற்கு தகுதியானது அல்ல என்று ஆய்வக அறிக்கைகளின் அடிப்படையில் இந்திய ராணுவ வீரர்களுக்கான, முன்னாள் ராணுவ வீரர்களுக்காக நடத்தப்படும் மிலிட்டரி காண்டீன்களிலிருந்து  அகற்றப்பட்டுள்ளது.

ஆயுர்வேத மருந்துகள் என்று போலிச்சாமியார் விற்கும் பொருட்களில் விலங்குகளின் எலும்புகளும் கொழுப்புக்களும் கலக்கப்பட்டுள்ளது என்று பல ஆய்வகங்களின் அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் நாடாளுமன்ற மாநிலங்களவையில் சமர்ப்பித்ததையும் அதனால் கடுப்பான பிராடு சாமியார், தனது குண்டர்கள் மூலம் புதுடெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏ,கே,ஜி. பவன் மீது தாக்குதல் நடத்தி பொறுக்கித்தனம் செய்ததையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

பதஞ்சலி பொருட்கள் மீது குற்றச்சாட்டுக்கள் வருவது என்பது புதிதல்ல. பாஜக ஆட்சியில் உள்ள போதே ஒரு பொருள் தடை செய்யப்படும் நிலை வந்துள்ளது என்றால் அதன் தரம் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல பதஞ்சலி பொருட்களின் தரத்திற்கு ஒரு சோற்றுப் பதமாக நெல்லிக்காய் ஜூஸை பார்க்க வேண்டும். அந்த டுபாக்கூர் சாமியார் தயாரிக்கும் அனைத்து பொருட்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். நாடி, நரம்பு, ரத்தம், புத்தி அனைத்திலும் மோசடித்தனம் ஊறியிருக்கும் அந்த சாமியார் தயாரிக்கும் இதர பொருட்கள் எல்லாம் மட்டும் வேறெப்படி இருக்கும்?

மிலிட்டரி காண்டீனோடு நிறுத்திக் கொள்ளாமல், நெல்லிக்காய் ஜூஸோடு நிறுத்திக் கொள்ளாமல், நாடெங்கிலும் பதஞ்சலி பொருட்களின் விற்பனையை தடை செய்யப்பட வேண்டும்.

மக்களின் உயிரோடு விளையாடுது பதஞ்சலி கம்பெனி.

பதஞ்சலி ஒரு உள்நாட்டு கம்பெனி, அதன் வளர்ச்சி பொறுக்காத பன்னாட்டுக் கம்பெனிகளின் சதி இந்த குற்றச்சாட்டு, ஆய்வறிக்கை என்று யாரும் காமெடி செய்ய வேண்டாம் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

இருப்பினும் சிலர் பிடிவாதமாக காமெடி செய்ய விரும்பினால், பின் வரும் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டும்.

ராம்தேவின் எடுபிடியாக மோடி இருக்கையில் பன்னாட்டுக் கம்பெனிகளின் சதி என்பதெல்லாம் இந்த அரசில் செல்லுபடியாகுமா?