Saturday, September 25, 2010

எந்தக் கொம்பனும் எதுவும் செய்ய முடியாது.

சத்துணவு ஊழியர் சங்கத்தின் வேலூர் மாவட்ட மாநாடு
நேற்றும் இன்றும். இன்று மதியம் பேரணியும், பொதுகூட்டமும்
என்று முடிவு செய்திருந்தார்கள். பேரணியை துவக்கி வைக்க
என்னை அழைத்திருந்தார்கள். ஆனால் சத்துணவு ஊழியர்கள் 
கையில் துப்பாக்கியும் பீரங்கியும் எடுத்து வருவார்கள்
என்பதற்காக, சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக காவல்துறை
பேரணிக்கான அனுமதியை மறுத்து விட்டது. ஆனால் சில
தினங்கள் முன்பாகத்தான் டாஸ்மாக் மணம் வீச விநாயகர்
ஊர்வலம் நடத்த அனுமதித்தார்கள் என்பது கவனத்திற்குரியது.
பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று சொல்லவில்லை.

பேரணியை துவக்கி வைக்கிற வேலை இல்லாததால் வேறு சில
பணிகளை முடித்து விட்டு தாமதமாகத்தான் சென்றேன். அங்கே
நான் கண்ட சில காட்சிகள் உண்மையிலேயே அற்புதமானது.
கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட தோழர்கள், அதிலே
கிட்டத்தட்ட 85 %  பெண் தோழர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஒரு மிகப் பெரிய அடக்குமுறையை சந்தித்து அதன் காயம்
இன்னமும் வலித்துக் கொண்டிருக்கிறபோது, தலைமை
முழுவதுமே அரசின் பழிவாங்கல் நடவடிக்கையால் பணி நீக்கம்
இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள போது, மோசமான ஒரு
பொய்ப்பிரச்சாரத்தை  முதலமைச்சரே முன் நின்று செய்யும்
வேளையில்  இந்த அளவு தோழர்கள் பங்கேற்றது என்பது
உண்மையிலேயே மகத்தானது. மெய் சிலிர்க்க வைத்த
அத்துணைத் தோழர்களுக்கும் செவ்வணக்கம்.

கூட்டத்திற்கு அனுமதிக்கடிதம் வழங்கவில்லை என்ற
ஞானோதயம்  திடீரென காவல்துறைக்கு வர மேடைக்கு
அருகே வந்து சலம்பல் செய்தார் ஒரு அதிகாரி. கூட்டம்
முடியும் நேரம் என்றதும் சற்று அமைதியாய் போனார்.
அப்போது மேடையில் பேசிய அரசு ஊழியர் சங்கப்
பொறுப்பாளர் காவல்துறையின் அணுகுமுறையை
விமர்சனம் செய்ய, வேதாளம் மீண்டும் முருங்கை
மரத்தில் ஏறி விட்டது. மீண்டும் சலம்பல், குழப்பம்,
அதிகார அதட்டல், மிரட்டல், உருட்டல் என எல்லாமே
நடந்தது. மேடையையும் கூட்டத்தையும் ஒரு காவலர்
வீடியோ வேறு எடுக்கத்தொடங்கி விட்டனர்.

இத்தனை களேபரம் நடந்தும் ஒரு தோழர் கூட
இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. அங்கிருந்து
தப்பிக்கலாம் என்ற சிந்தனையே இல்லாமல் நடப்பதை
மட்டும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். மன உறுதியும்
போராட்ட உணர்வும் இல்லாவிடில் இது சாத்தியமில்லை.
இந்தத் தோழர்களைத்தான்  சுற்றுலா என்று சொல்லி
ஏமாந்து வந்தவர்கள் என கொச்சைப்படுத்தினார் கலைஞர்.

இன்று அவர்கள் காண்பித்த நெஞ்சுரம் கண்டு வியந்து
சொல்கிறேன்.

எந்தக் கொம்பனும் அவர்களை எதுவும் செய்திட முடியாது.

1 comment: