Thursday, December 30, 2010

பாவம் அவர்கள்! வேறு வழியில்லை போலும்!

ஆனந்த விகடன்  வார இதழ் 2010 ம் ஆண்டின் டாப் பத்து மனிதர்கள்
என்று பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.  அதிலே இடம் பெற்றுள்ள
இருவர் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்
தோழர் பி.சம்பத், மற்றும் குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர்
தோழர் ஜி.லதா. மார்க்சிஸ்ட் கட்சியின் இருவர் இந்த பட்டியலில்
இடம் பெறுவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. தேவைப்படும்
போது கலைஞர்  சொல்வாரே, ஹிந்துவே சொல்லி விட்டது என்று, 
அது போல அல்ல. விகடன் அளிக்கும்   சான்றிதழ் முக்கியம், 
சிறப்பானது  என்ற  அர்த்தத்தில் எழுதவில்லை.  விகடன் போன்ற
முதலாளித்துவ ஊடகங்களாலும் புறக்கணிக்க முடியாத பணி
என்பதுதான்.

இன்று தீண்டாமை ஒழிப்பிற்கான போராட்டத்தில் மார்க்சிஸ்ட்
கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தொடர்ந்து நடத்தி
வரும் போராட்டங்களும் இயக்கங்களும் தீண்டாமை ஒழிப்பிற்கு
எதிரான போராட்ட களத்திற்கு, இன்று புதிய பரிமாணத்தை,
வேகத்தை அளித்துள்ளது. பல காலமாக தங்களின் பிரச்சினைகளை 
யாரிடம் சொல்வது என்று அடங்கிக் கிடந்தவர்களுக்கு  புதிய 
நம்பிக்கை பிறந்துள்ளது. 

அதனால்தான் விகடன் போன்ற முதலாளித்துவ ஊடகங்களால்
இப்பணியை புறக்கணிக்க இயலவில்லை.  விகடன் சொன்னது
இருவர். இன்னும் இருப்பவர்கள்  ஏராளம்.  மக்கள்தான் அவர்களின்
உண்மையான நேச சக்தி யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பட்டியல் நிச்சயம் தமிழக முதல்வருக்கு நிச்சயம்
எரிச்சலூட்டும். அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்கு நானே கோரிக்கை
வைத்து நானே நிறைவேற்றிக் கொண்டேன் என்ற அவரது
பொய்யான தற்புகழ்ச்சிக்கு மாறாக மார்க்சிஸ்ட் கட்சியின் ,
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தொடர் போராட்டம்தான்
காரணம் என்பதை சரியாக சுட்டிக்காட்டியுள்ளது.  அதே போல
குடியாத்தம் பிரச்சினையில் பேச்சுவார்த்தை முறிந்து கைது
செய்யப்பட்டதற்கு முதல்வரின் நேரடி தலையீடுதான் காரணம்
என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தோழர்
ஜி.ராமகிருஷ்ணன் வெளிப்படையாக குற்றம் சாட்டினார். தானே
கேள்வி எழுப்பி தானே பதில் சொல்கிற, நெருப்பு கலைஞர்
இதற்கு மட்டும் இன்னும் வாய் திறக்கவில்லை.

விகடன் பார்த்ததும் இரண்டு தோழர்களோடும் தொலைபேசியில் 
பேசினேன். அது தங்களுக்கான தனிப்பட்ட பெருமை என்ற 
உணர்வு இருவரிடமும் இல்லை.  எல்லாம் கட்சிதான் என்றார்கள்,
கம்யூனிஸ்டாக. 

No comments:

Post a Comment