Friday, July 1, 2011

நெஞ்சமெல்லாம் நிறைவாக

மனதெல்லாம்  மகிழ்ச்சியாக உள்ளது. இன்று  எங்களது அகில இந்திய 
இன்சூரன்ஸ்  ஊழியர்  சங்கத்தின் வைர விழா ஆண்டு நிறைவு நாள். 
அறுபது ஆண்டுகள் கடந்த பின்பும் அதே துடிப்போடும் உயிர்ப்போடும் 
ஒரு அமைப்பிலே  உறுப்பினராக, கோட்ட  அளவில் பொறுப்பாளராகவும் பணியாற்ற கிடைத்த  வாய்ப்பு வாழ்நாளின் அறிய வாய்ப்பு. 


வைர விழா நிறைவு நாளை ஒட்டி  இன்று நாடு முழுதும் சங்கத்தின் 
செங்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அனைத்து இடங்களிலும் மிகுந்த
உற்சாகத்தோடு  தோழர்கள்  பங்கேற்ற செய்தி, தங்களது அமைப்பின் 
மீது உறுப்பினர்கள்  கொண்ட நேசத்தின்  வெளிப்பாடு, நம்பிக்கையின்
அடையாளம். 

இந்த வாரமும் அடுத்த வாரமும்  முழுதும் கிளை வாரியான  சிறப்புக் கூட்டங்கள். நிறைவாக வரும் எட்டாம் தேதி  கோட்ட அளவிலான 
சிறப்பு விழா, அதிலே எங்கள் சங்கத்தின் அறுபது ஆண்டு நிகழ்வுகள்
குறித்து நான் தொகுத்த ஒரு புத்தக வெளியீடு, கடந்த மாதத்தில் 
சிறந்த வணிகம் புரிந்த முகவர்களுக்கு பரிசளிப்பு  என சில 
நிகழ்வுகள் உள்ளது. 



இன்று வேலூர் மையத்தில்  உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் 
சென்று தோழர்களை  சந்தித்து  வாழ்த்து சொல்லி விட்டு வந்தோம். 
அனைத்து அலுவலகங்களிலும்  தோழர்கள் அளித்த உற்சாக வரவேற்பு
மிகவும் மகிழ்ச்சியளித்தது. எதிர்கால போராட்டங்களுக்கு நாங்கள் 
தயார் என்று சொல்லாமல் சொன்னதாக எனக்கு தோன்றியது. 


போராட்டங்களுக்கு தோழர்கள் தயாராக இருப்பதை விட ஒரு 
தொழிற்சங்கத்திற்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்கப் போகின்றது? 
இந்த வருடம் எங்கள் அகில இந்திய சங்கத்தின் வைர விழா நிறைவடைந்தது.  அடுத்த ஆண்டு  எங்கள் கோட்டம் வெள்ளி விழா 
காணப்போகின்றது. நெஞ்சமெல்லாம் இனிக்கிறது... 
 

1 comment:

  1. உங்கள் சங்கத்தின் அறுபது ஆண்டுகள் நிறைவு விழாவிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete