Wednesday, July 27, 2011

ஊழல்களின் ஊர்வலம் - குடும்ப ஊழல்களால் பதவியிழந்த முதலமைச்சர்



தலைப்பைப் பார்த்து  அதற்குள்ளாக நிகழ்கால அரசியலுக்கு வந்ததாக நினைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. இந்த இதழில் நாம் பார்க்கப்போவது  இந்திய அரசியலில் அரசியல்வாதி மீது அமைக்கப்
பட்ட முதல்  விசாரணைக் கமிஷன் பற்றியும்  அந்த அறிக்கையினால்  பதவி விலகிய  ஒரு முதலமைச்சர் பற்றியும்.


பஞ்சாப் மாநிலத்தின்  முதலமைச்சராக 1952 முதல் 1964 வரை  இருந்தவர் திரு பிரதாப் சிங் கெய்ரான். நவீன பஞ்சாபை உருவாக்கியவர், பல நல்ல திட்டங்களை  அறிமுகம் செய்தவர்  என்றெல்லாம் நல்ல பெயர்  எடுத்தாலும், மறு புறத்தில்  அவரது வாரிசுகள்  முதலமைச்சர் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு  பணம் சம்பாதிக்கத் தொடங்கினர். அதிகார முறைகேடுகள், நில அபகரிப்பு, கையூட்டு பெறுவது  என  இன்று போலவே  அன்றும் நடந்தன.


ஆனால்  அவர் மீது நடவடிக்கை எடுக்க  அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தயங்கினார். தயக்கம்  என்பது பிரதமர்களின் தாயகம் போலும்! ஆனால்  ஒரு அரசு மருத்துவர் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு  தொடுக்க, நீதிமன்றமும்  கண்டிக்க, இப்போது போல அப்போதும்  மத்திய அரசிற்கு  வேறு வழியில்லை.

எஸ்.ஆர்.தாஸ்  என்ற முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதி  தலைமையில்  விசாரணைக் கமிஷன்  ஒன்றை  நேரு அமைத்தார். இந்தியாவில்  முதன் முதலில் ஒரு அரசியல்வாதி மீது அமைக்கப்பட்ட  விசாரணைக் கமிஷன்  இதுதான்.


கமிஷன் தனது அறிக்கையை  அளிக்கும் முன்னரே  நேரு இறந்து விட்டார். திரு லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் கமிஷன் தனது அறிக்கையை  அளித்தது. பிரதாப்  சிங் கெய்ரானுக்கு  தெரிந்தே  அவரது  வாரிசுகள் அத்தனை முறைகேடுகளையும் செய்ததாகவும் அவரால் அதனை தடுக்க முடியாததால்  அவரும் பொறுப்பேற்க வேண்டும்  என்று  அறிக்கை  கூறியது. இதனை  ஏற்க முடியாது, உன்னால்  முடிந்ததை செய்து பார் என்று கெய்ரான் சவால் விட, லால் பகதூர் சாஸ்திரி  அறிக்கையை  வெளியிட்டு விட, வேறு வழியின்றி பிரதாப் சிங் கெய்ரான்  பதவி விலகினார். ஊழல்  புகார் காரணமாக பதவியிழந்த  முதல் முதலமைச்சரும் அவர்தான்.


தனக்கு பதிலாக கிஷன்சிங் என்ற ஒரு தலையாட்டி பொம்மையை முதல்வராக்கிய  கெய்ரான் அடுத்த  ஆண்டே  கொல்லப்பட்டது ஒரு சோகமான முடிவு.


அவரது  இன்றைய வாரிசுகள் மீதும்  பல புகார்கள் இன்னும் அழுத்தமாக தொடர்வது, பிரதாப் சிங்  கெய்ரானுக்கு  2005 க்கு  2005 ம் ஆண்டு மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டது ஆகியவை  கூடுதல் தகவல்கள்.


எங்கள் வேலூர் கோட்டச் சங்கத்தின் மாத 
இதழான " சங்கசுடர் " ல்  புதிய பகுதியான
ஊழல்களின் ஊர்வலத்திற்காக 
எழுதியது
  

No comments:

Post a Comment