Tuesday, October 4, 2011

முறைகேட்டில் முளைத்த மாருதி

ஊழல்களின்  ஊர்வலம் - நான்காம்  பகுதி

                                        
இந்தியாவினுடைய  முதன்மையான  கார்  தயாரிப்பு  நிறுவனமாக
மாருதி உத்யோக் நிறுவனம்  உள்ளது  என்பது  நமக்கெல்லாம்
தெரிந்ததுதான்.  ஜப்பான் நிறுவனம்  சுசுகியோடு  கூட்டு  நிறுவனமாக
 மாருதி  உள்ளது  என்பதும் அனைவருக்கும்  தெரிந்ததுதான்.
 பொதுத்துறை  நிறுவனம்  என்று  மாருதி நிறுவனம்
சொல்லப்பட்டாலும், அதன்  பெரும்பான்மை  பங்குகள்
சுசுகி நிறுவனத்தின்  கைவசமே  உள்ளது என்பதும்
நிர்வாகத்தின்  கட்டுப்பாடு  அதன் கைகளில்தான்  உள்ளது
என்பது  சிலர்  மட்டுமே  அறிந்தது.


மாருதி நிறுவனத்தின்  தோற்றத்தை  ஆராய்ந்தால்  அது
 ஊழல்  முடை நாற்றம்  அடிப்பதாகவே  இருக்கும்,
அதிகாரத்தை  இப்படியெல்லாம் கூட  தவறாகப்
பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்ற ஆத்திரம் கூட
வரும். அந்தக்கதையை  இந்த மாதம்  பார்ப்போம். 


புதிய நிறுவனங்களுக்கு அனுமதி கொடுப்பதற்கு மிகக் கடுமையான
வழிமுறைகள் இருந்த காலம்  அது. இந்திரா காந்தி அரசு குறைவான
விலையில் நடுத்தரப் பிரிவினரும் பயன்படுத்த  "மக்கள் கார்"
தயாரிக்கப்போவதாக  அறிவித்தது.


மக்கள் கார் தயாரிப்பதற்கான அனுமதி இந்திரா காந்தியின் இளைய
மகன் சஞ்சய் காந்திக்கு வழங்கப்பட்டது. மாருதி கார் நிறுவனம்
துவக்கப்பட்டது. அதன் மேலாண்மை இயக்குனரும் சஞ்சய் காந்திதான்.
ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனத்தில் சில மாதங்கள்  அப்ரெண்டிஸாக
பணியாற்றியதைத் தவிர சஞ்சய் காந்திக்கு வேறு எந்த அனுபவமோ
தொழில் நுட்ப அறிவோ  கிடையாது.


இதே போல் இன்னொரு நிறுவனமும் துவக்கப்பட்டது. அதிலே
சஞ்சய் காந்தியும் சோனியா காந்தியும் மட்டுமே  பங்குதாரர்கள்,
இயக்குனர்கள், சோனியா காந்தி மேலாண்மை இயக்குனர். இந்த
மாருதி தொழில் நுட்ப சேவை நிறுவனம், மாருதி கார் தயாரிக்க
அனைத்து ஆலோசனைகளையும் தரும். இதற்காக மாருதி கார்
நிறுவனம் சஞ்சய் காந்திக்கு வருடத்திற்கு ஐந்து லட்ச ரூபாய்
தரும். இவையெல்லாம் 1970 களில், முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு
முன்பு.


ஆனாலும் நடுத்தர மக்களை பணக்காரர்களுக்கு இணையான வசதியினை
அனுபவிக்க வைக்கப் போகும் மேதை  என காங்கிரஸ்காரர்கள்
புகழ்ந்து  தள்ளினார்கள். மாருதி காருக்கு பணம் வந்ததே தவிர
தொழிற்சாலையும் வரவில்லை, அதனால் காரும் வரவில்லை.
மாருதி நிறுவனம் நொடித்தும் போய் விட்டது. 


மாருதி கார் மோசடி பற்றி ஜனதா கட்சி ஆட்சியில் போடப்பட்ட
நீதிபதி ஏ.சி. குப்தா கமிஷன், தனது அறிக்கையில் அனைத்து
முறைகேடுகள் பற்றியும் தெரிவித்திருந்தாலும் எவ்வித நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை. ஏனென்றால் 1980 ல் ஜனதா ஆட்சி கவிழ்ந்து
போய் இந்திரா காந்தி மீண்டும் பிரதமராகி விட்டார்.


சஞ்சய் காந்தியின் மரணத்திற்குப் பிறகு மத்தியரசு மாருதி
கார் நிறுவனத்தை எடுத்துக் கொண்டது. பொதுத்துறை நிறுவனமாக
மாற்றி ஜப்பானின் சுசுகி நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டது.
மாருதி கார்களின் உற்பத்தியும் தொடங்கியது.

1 comment:

  1. மாருதி நிறுவனத்தின் தோற்றத்தை ஆராய்ந்தால் அது
    ஊழல் முடை நாற்றம் அடிப்பதாகவே இருக்கும்,
    அதிகாரத்தை இப்படியெல்லாம் கூட தவறாகப்
    பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்ற ஆத்திரம் கூட
    வரும்.
    அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    படிப்பவர்கள் படிக்கட்டும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete