Tuesday, November 1, 2011

அடியாட்களால் நான் தாக்கப்பட்ட அந்த நாள்



பழைய புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த  போது
மேலே  உள்ள புகைப்படம் கிடைத்தது. 




19  ஜூலை  1989  அன்று அலுவலகம்  செல்லும் வழியில் 
நான் அடியாட்களால்  தாக்கப்பட்டேன். 




முதல் நாளன்று  ஒரு முகவர்  ஒரு ஊழியரிடம் தரக்குறைவாக
நடந்து கொண்டார். சங்கத்தில் கிளை நிர்வாகத்திடம் 
பேசினோம். நடவடிக்கை எடுக்க நிர்வாகம் ஒப்புக்கொண்டது.




மறு நாள் காலை அலுவலகம் வர வீட்டிலிருந்து புறப்பட்டால்
சாலையில் சில ரௌடிகள்  நிற்பதைப் பார்த்தேன். முதல் நாள்
எந்த ஊழியரோடு தகராறு  நடந்ததோ அந்த ஊழியரை தாக்க
வந்திருக்கிறார்கள்  என நினைத்து அலுவலகம் சென்று 
மற்றவர்களை  எச்சரிக்கலாம்  என வேகமாக நடந்தேன்.
அக்காலகட்டத்தில்  எந்த ஊழியர் வீட்டிலும் தொலைபேசி 
கிடையாது. 




அவர்கள் என்னைத்தான் குறி வைத்துள்ளார்கள்  என்பதை 
என்னால் யூகிக்க முடியவில்லை. அந்த முகவருக்கு விளக்கம்
தரச் சொல்லி கடிதம் அளித்த நிர்வாகம், ராமன் வற்புறுத்திய 
காரணத்தாலாயே  கடிதம் அளிக்கிறோம்  என்று சொன்னது 
அப்போது  எனக்கு தெரியாது.




அந்த அடியாட்கள்  தாக்கியதில் ஒரு பல் உடைந்தது. உதடு
கிழிந்து  ஆறு தையல்கள் போடப்பட்டது. காவல்துறைக்கு 
புகார் அளிக்கப்பட்டது. அப்போது சாட்சியத்திற்கு  எடுக்கப்பட்ட
புகைப்படம் அது. 


ஆறு நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருந்தது. 
என்.எல்.சி  சி.ஐ.டி.யு  சங்கத்தின்  அன்றைய பொதுச் செயலாளர்
மருத்துவமனை நிர்வாகத்தில் பேசியதால்  ஏ ஸ்பெஷல் அறை
ஒதுக்கப்பட்டு  சிறப்பான கவனிப்பும் கிடைத்தது.  அவர் தலையீடு 
இருந்ததால் காவல்துறையும்  கறாராக வழக்கு பதிவு செய்து அந்த அடியாட்களையும் கைது செய்தது.


முட்டை, பழங்கள், ப்ரெட் என வேளா வேளைக்கு சரியாக 
வந்து விடும். என்ன உதட்டில் காயம் என்பதால்  என்னால்தான்
சாப்பிட முடியாது.  


என்னை தாக்கியவர்களின் நோக்கம்  அச்சுறுத்தி, மிரட்டி, 
தொழிற்சங்கப் பணியிலிருந்து  விலக வைப்பது. ஆனால் 
அந்த தாக்குதல்தான்  எனக்கு உரமூட்டியது. உறுதி தந்தது.
கிளை அளவில் செயல்பட்டவனை  கோட்ட அளவில் 
செயல்பட வைத்தது. இதோ நேற்று வேலூர் கோட்டத்தின்
பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.
அதே போல் மனரீதியிலான  தாக்குதல்களும் சோர்வு 
அளிப்பதில்லை. வேகம் அளிக்கிறது. சவால்களை சந்திக்கும்
தைரியம் அளிக்கிறது.


என்னை தாக்கியவர்களின், பணம் கொடுத்து அனுப்பியவர்களின்
நோக்கம் பரிதாபமாக தோற்றுப்போனது.


வழக்கு என்ன ஆனது? அது அடுத்த பதிவிலே. . .


எனக்கு உதவி செய்த அந்த சி.ஐ.டி.யு  தலைவர் யார் என்று
சொல்லவில்லையே !


அவர் வேறு யாருமில்லை.


மார்க்சிஸ்ட் கட்சியின் இன்றைய தமிழ் மாநிலச் செயலாளர்
தோழர் ஜி.ராமகிருஷ்ணன்தான்.  


4 comments:

  1. தொழிற் சங்க அனுபவங்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வணக்கம்!தங்கள் பதிவைப் படித்ததும்
    ”சித்திரச் சோலைகளே! உமை நன்கு திருத்த இப் பாரினிலே! முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே”
    எனற பாரதிதாசன் கவிதை வரிகள்தான் ஞாபகம் வந்தன.தொடரட்டும் உமது பணி.

    ReplyDelete
  4. Sir my hearty congratulations for your selection as gen.sec. You are the right person to lead. It is very much interesting to read the matter you have published.

    SAMINATHAN JAYARAJ

    ReplyDelete