Sunday, February 12, 2012

பிப்ரவரி 28 வேலை நிறுத்தம் ஏன்?

எங்கள் சங்க மாத இதழிற்காக எழுதியது.

 
ஒரே குரலாய் ஒலிக்கும் உழைக்கும் மக்களின் கோரிக்கைகள்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மதங்கள், மொழிகள், தேசிய இனங்கள், மாநிலங்கள் கொண்ட நாடு இந்திய நாடு. பல்வேறு அரசியல் கட்சிகள், பல விதமான கருத்தோட்டங்களைக் கொண்டுள்ள நாடு இந்திய நாடு. இவை தவிர ஏராளமான அமைப்புக்கள் உள்ளன. அவைகளுக்கும் எண்ணற்ற லட்சியங்கள் உண்டு. கோரிக்கைகள் உண்டு.


ஒரு அமைப்பின் கோரிக்கை  மற்றொரு அமைப்பிற்கு உடன்பாடாக இருக்காது. ஒருவர் எடுக்கும் நிலைப்பாடு மற்றொருவருக்கு முரண்பாடாக காட்சியளிக்கும். ஒரு அமைப்பு ஒரு கோரிக்கை வைத்து அமுலாக்க வேண்டும் என்று போராடினால் அது கூடாது  என்று இன்னொரு அமைப்பு எதிர்ப்புக்குரல் அளிக்கும்.


ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தெலுங்கானாவைப் பிரிக்க வேண்டும் என்று தெலுங்கானா பகுதியின் சில அமைப்புக்கள் போராட்டம் நடத்தும் அதே நேரத்தில் மற்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்றும் குரல் எழுப்பியதைப் பார்த்தோம்.


கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் இயக்கங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சில போராட்டங்கள் இயல்பானதாக இருக்கும் வேளையில், சில ஆட்சியாளர்களால், அதிகார வர்க்கத்தால் தூண்டி விடப்பட்டதாகவும் இருக்கும். சில பிரச்சினைகளில் மாநிலங்களுக்கிடையில் கூட கடுமையான முரண்பாடுகள் காலம் காலமாக தொடர்ந்து கொண்டே இருக்கும்.


அதே போல கோரிக்கைகளின் தன்மையும் இடத்திற்கு இடம், நேரத்திற்கு நேரம் மாறுபடும். அமைப்பின் தன்மைக்கு ஏற்றார்போல மாறுபடும். பெரு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் முன்வைக்கிற கோரிக்கைகள் தங்களது லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் கொண்டவைதான். பொதுவாக மற்ற கோரிக்கைகளை புறக்கணிக்கிற ஆட்சியாளர்கள், முதலாளிகளின் கோரிக்கைகளை மட்டும் உடனடியாக கனிவோடு பரிசீலிப்பதையும் அதற்காக சட்டங்களை வளைப்பதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


 
இப்படி முரண்பட்ட நிலைகள் கொண்டவர்களின் களமாக இந்தியா திகழ்கின்ற சூழலில்தான் ஒட்டு மொத்த உழைக்கும் மக்களின் கோரிக்கைகளும் தேசம் முழுவதும் ஒரே குரலாய் ஒலிக்கிறது. இந்தியாவில் இருக்கிற எல்லா தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து 28.02.2012 ஒரு நாள் வேலை நிறுத்ததில்  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அவற்றிலே சுய நலன் கிடையாது, பிராந்திய நலன் கிடையாது, அனைத்து வளங்களும்  தனக்கே வேண்டும் என்ற பேராசை கிடையாது. ஆதிக்கம் செலுத்தும் நோக்கம் கிடையாது. தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வேட்கையும் கிடையாது. அனைத்துக் கோரிக்கைகளுமே இந்திய மக்கள் நலன் சார்ந்தது. இந்திய உழைக்கும் மக்களின் உரிமைகள் தொடர்பானது, இந்தியாவின் பொருளாதாரம்  பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டது. இந்திய உழைப்பாளி மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தால் அது இந்தியாவை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்லும் என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டது.


சாமானிய மக்கள் அன்றாடம் வாழ்வை எடுத்துச் செல்வது என்பதே இன்று மிகப் பெரிய போராட்டமாகி விட்டது. ஒவ்வொரு பொருளின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை வேறு மத்தியரசு அவ்வப்போது உயர்த்தி, எரிகிற தீயில் பெட்ரோல் விட்டு மேலும் கொழுந்து விட்டு எரியச் செய்கிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை மத்தியரசு எடுத்திட வேண்டும் என்பதே இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் முதன்மையான முழக்கம்.


 
கோடிக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் முறைசாரா தொழிலாளர்கள்தான். பணிப் பாதுகாப்பு இல்லாமல், முறையான ஊதியம் இல்லாமல் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகி  அவதிப்படும் தொழிலாளர்களுக்கு உதவக்கூடிய விதத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை அமுலாக்க வேண்டும் என்ற கோரிக்கை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சிக்காலத்திலேயே அரசு ஏற்றுக்கொண்டு அதனை கொள்கைப் பிரகடனமான தேசிய குறைந்தபட்ச செயல் திட்டத்திலும் வெளியிட்டது. ஆனால் அதனை முறையாக அமுலாக்க மட்டும் தயாராக இல்லை.


 
இந்திய நாடாளுமன்றம்தான் தொழிலாளர்கள் நலனுக்காக பல்வேறு சட்டங்களை நிறைவேற்றியது. உழைக்கும் மக்களின் போராட்டங்களாலும், தியாகங்களாலும், தொழிலாளர்களின் உரிமைகளை, தொழிற்சங்க உரிமைகளைப் பாதுகாக்க கொண்டுவரப்பட்ட சட்டங்கள் இவை. இப்போதுள்ள நிலையில் இந்த சட்டங்கள் போதுமானது அல்ல. ஆனால் அவற்றைக் கூட அமுலாக்க முடியாது என ஆணவத்துடன் பன்னாட்டு நிறுவனங்கள் மறுக்கின்றன. இந்திய ஜனநாயகத்தையே அவமதிக்கும் இந்த அராஜகத்தை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கின்றன. பல நேரங்களில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வால் பிடிக்கவும் செய்கின்றன.


 
இந்தியா சுதந்திரம் பெற்ற போது, அதன் தொழில் வளர்ச்சிக்கு உதவ எந்த ஒரு முதலாளித்துவ நாடும் முன் வராத போது, சோவியத் யூனியனும் மற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மட்டுமே உதவிக்கரம் நீட்டின. இந்தியாவின் கட்டமைப்பை வளமாக்க, அந்த நேச நாடுகளின் துணையோடு தோன்றிய பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள்தான் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றது. வேலை வாய்ப்புக்களை உருவாக்கவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டுக் கொள்கைகள் சென்றடையவும் உதவியவை பொதுத்துறை நிறுவனங்கள்தான். அன்று உதவிக்கு வராதவர்கள் கற்பக விருட்சமான பொதுத்துறை நிறுவனங்களை இன்று பலி கேட்கின்றார்கள். அடுக்குமா இந்தக் கொடுமை! அனுமதிக்க முடியுமா இந்த அநியாயத்தை!! பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்காதே என்று இந்திய தொழிற்சங்க இயக்கம் அழுத்தமாக வலியுறுத்துகின்றது.


 
ஒரு தொழிலாளி தனது வாழ்நாள் உழைப்பை தான் பணியாற்றும் நிறுவனத்திற்கு வழங்கி, வயது முதிர்ந்து ஓய்வு பெறுகையில் அவனுக்கு அப்போது துணை நிற்பது பென்ஷன்தான். பென்ஷன் நிதியில் திரண்டிருக்கிற கோடிக்கணக்கான ரூபாய் நிதியை கொத்திச் செல்ல சர்வதேச நிதி மூலதனம் துடிக்கிறது. அதற்கு வசதியாக புதிய பென்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது மத்தியரசு. நவீன கால சகுனிகளாக பங்குச்சந்தையில் சூதாடிக் கொண்டிருப்பவர்கள் தொழிலாளர்களின் எதிர்காலத்தை கொள்ளையடிக்க அனுமதிக்க முடியுமா? சர்வதேச பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல டிரில்லியன் டாலர்கள் கற்பூரமாய் மறைந்து போய், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வீதிக்கு வந்து நிற்பதைப் பார்த்த பிறகும் இந்தியத் தொழிலாளர்களின் பணம் பங்குச்சந்தைக்குப் போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?


 
இந்தியாவில் செல்வந்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அதிக சொத்துள்ளவர்கள் ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே போல் ஏழை – பணக்காரர்களுக்கிடையான இடைவெளியும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சூழலில்தான் குறைந்த பட்ச ஊதியச்சட்டம் மாற்றப்பட வேண்டும்,போனஸ் மற்றும் பணிக்கொடைக்கான வரம்புகள் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.


காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த கோரிக்கைகளை ஒரே குரலில் ஒலிக்கும் நாளாக 28.02.2012 அன்றைய ஒரு நாள் வேலை நிறுத்தம் அமையவுள்ளது. தொழிற்சங்க இயக்கங்கள் மக்கள் நலக் கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தும் போது அதனை ஆட்சியாளர்கள், அரசியல் நோக்கமுள்ளது என்று சொல்வார்கள்.


 
இடதுசாரி தொழிற்சங்கங்களோடு ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஐ.என்.டி.யு.சி, பாஜக வின் பி.எம்.எஸ், திமுக வின் தொமுச ஆகிய சங்கங்களும் பங்கேற்கிற இந்த வேலை நிறுத்தத்தை அரசியல் என்று ஒதுக்கி விட முடியுமா? தேச நலன், மக்கள் நலன், உழைப்பாளிகள் நலன் என்பதைத் தவிர இக்கோரிக்கைகளில் வேறு நோக்கம் உள்ளதா?


இக்கோரிக்கைகள் நிறைவேறுகையில் இந்தியாவின் நிலைமை முன்னேறும். அரசு தனது போக்கினை மாற்றிக் கொள்ளாவிட்டால்  ஆட்சியாளர்களையே மாற்றுவதற்கான நிலைமையை இந்த வேலை நிறுத்தம் உருவாக்கும். ஒட்டு மொத்த உழைப்பாளி மக்கள் போராட்ட களத்தில் அணி வகுக்கின்றபோது முன்னணியில் நிற்க வேண்டிய கடமை இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு உள்ளது. அதனால்தான் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இந்த போராட்டத்தில் பங்கேற்கிறது. மக்கள் நலன் காக்கும் இந்தப் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்போம். கோரிக்கைகள் நிறைவேற தொடர்ந்து போராடுவோம்.


1 comment:

  1. வலைச்சரத்தில் இன்று தங்கள் பதிவினை அறிமுகம் செய்துள்ளேன். நேரமிருப்பின் வந்து பாருங்கள். தங்களின் கருத்துக்களையும் தமிழ்மணத்தில் வாக்கினையும் பதிவு செய்யுங்கள்.
    http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_19.html

    ReplyDelete