Friday, April 20, 2012

ஜெயலலிதா ஆட்சியில் ஜெயலலிதா கட்சித் தலைவருக்கு ஒரு தாக்குதல்.

 இது முன்பே போட்ட பதிவுதான். இருப்பினும்
வேறு புதிய தலைப்பும், இறுதியில் ஒரு புதிய
பத்தியும் அவசியம் என்பதால் மீண்டும் 
பதிவிட்டுள்ளேன்.

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுக்காவில் செஞ்சி என்று
ஒரு கிராமம். அந்த கிராமத்து பஞ்சாயத்து தலைவர் முருகன்
என்பவர் ஆளும் அதிமுக கட்சிக்காரர். தலித் இனத்தைச்
சேர்ந்தவர். அவரை செயல்பட விடாமல் அதே கிராமத்தைச்
சேர்ந்த ஆளும்கட்சி பிரமுகர், ஆதிக்க சாதியைச் சேர்ந்த
வெங்கடேசன் என்பவர் தடுத்து வருகிறார். எல்லா பணிகளிலும்
லஞ்சம் தர வேண்டும். இவர் சொல்லும் வேலையைத்தான்
செய்ய வேண்டும் என்று மிரட்டுகின்றார்.

மறுத்த போது ஜாதியைச் சொல்லி, ஆபாசமாக திட்டுகின்றார்.
உன்னை கொலை செய்வேன், உன் மனைவியை பாலியல்
வன் கொடுமை செய்வேன் என்றெல்லாம் பேசுகின்றார்.
அரசியல் தரகரான இந்த வெங்கடேசன் ஜெயலலிதா பேரவையின்
மாவட்ட துணைச்செயலாளர். அந்த ஹோதாவில்தான் இந்த
ஆட்டம்.

காவல்துறையில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதற்குப்
பதிலாக கட்டப் பஞ்சாயத்து செய்கின்றது. முதல் தகவல் அறிக்கை
பதிவு செய்யவே தயாராக இல்லை.

பிரச்சினை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கவனத்திற்கு வர
அந்த கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள லத்தேரி என்ற ஊரில்
ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்படுகின்றது. ஆனால்
அனுமதி வழங்க காவல்துறை மறுத்து விட்டது.

அந்த வெங்கடேசன் அயோக்கியன்தான், ஆனாலும் அனுமதி
கிடையாது என்று மறுக்கிறார் காட்பாடி டி.எஸ்.பி.

ஆனாலும் தோழர்கள் குழுமினர். உறுதியாய் ஆர்ப்பாட்டம்
நடந்தது. காவல்துறை அனுமதி இல்லாததால் ஒலி பெருக்கி
பயன்படுத்த முடியவில்லை.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டால் கைது செய்யப்படுவார்கள்
என்று அந்த ஊர் மக்களை வேறு மிரட்டி அந்த கிராமத்தை விட்டே
வெளியேற்றி விட்டது. கைது மிரட்டலுக்கு அஞ்சாமல் இன்று
ஆர்ப்பாட்டத்தை துவக்கிய போது காவல்துறை படையாக
அணி திரண்டிருந்த போதும் அப்போது எந்த மிரட்டலும்
செய்யவில்லை.

ஒரு தலித் ஊராட்சி தலைவர் செயல்பட முடியாமல் தடை
வருகிற போது அவருக்கு பாதுகாப்பாக செயல்பட வேண்டிய
அரசு நிர்வாகம், தரகனுக்கு துணையாய் நிற்பதன் மர்மம்
என்ன?

பிரதமருக்கு எதிராகவோ, முதல்வருக்கு எதிராகவோ
ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்காத காவல்துறை
ஒரு மூன்றாம்தர மனிதனுக்கு ஆதரவாக நிற்கிறது.

அனுமதி மறுப்பது என்பது ஜனநாயகத்தின் குரல்வளையை
நெறிக்கும் ஈனச்செயல். ஆனாலும் அஞ்சாமல் தீண்டாமை
ஒழிப்பு முன்னணியின் குரல் ஒலித்தது.

அனுமதி அளித்திருந்தால் பிரச்சினை பற்றி மட்டும்
பேசியிருப்போம். தங்களை தோலுரிக்க காவல்துறையே
வழி ஏற்படுத்திக் கொடுத்தது என்பது ஒரு யதார்த்தமான
உண்மை. 


ஜெயலலிதா ஆட்சியில் அவர் கட்சித் தலைவருக்கே
அவரது கட்சிக்காரர்களால் இந்த மோசமான நிலை 
என்றால், மற்ற பஞ்சாயத்து தலைவர்களின் கதி
என்ன ஆகும்?

No comments:

Post a Comment