Monday, June 11, 2012

தோழர் தா.பாண்டியன், நீங்கள் எம்.பி யாக இடதுசாரி ஒற்றுமையைக் குலைக்காதீர்கள்.




நேற்று ஜெயா தொலைக்காட்சி செய்திகளை ஒரு நிமிடம் பார்க்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. அதிலே சி.பி.ஐ மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன் மார்க்சிஸ்ட் கட்சியை தாக்கி பேசியதை  ஒளிபரப்பு செய்தார்கள். அது எந்த ஊர் பொதுக்கூட்டம் என்று தெரியவில்லை. ஆனால் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி தேமுதிக வை ஆதரிப்பதை அவர் விமர்சனம் செய்கின்றார். இப்போதுதான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். மண் குதிரைக்கு ஏன் ஆதரவு தருகின்றீர்கள் என்பது அவர் கேள்வி.

மார்க்சிஸ்ட் கட்சி என்றும் அரசியல் நிலைமைகளின் அடிப்படையில் முடிவு எடுக்கும், தாபா போல தனி நபர் சார்ந்து அல்ல. என்றென்றும் அவர் ஜெ ஆதரவாளர் என்பது ஊரறிந்த உண்மை. அதனால்தான் உள்ளாட்சித் தேர்தல்களில் அனைத்துக் கூட்டணிக்கட்சிகளையும் மதியாமல் ஜெ நடந்து கொண்ட போது கூட ஒரு அரசியல் கட்சிக்கு உள்ள பொறுப்பு இல்லாமல், அதிலும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்க வேண்டிய அரசியல் உறுதி இல்லாமல் சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் அவர் மவுனம் சாதித்தார்.

அவர் கட்சி எம்.எல்.ஏ இறந்து போனார். நியாயமாகப் பார்த்தால் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் சி.பி.ஐ போட்டியிட்டிருக்க வேண்டும். ஜெ வேட்பாளரை அறிவித்த பின்பு சி.பி.ஐ மீண்டும் மௌனமாகி விட்டது. சி.பி.ஐ வேட்பாளரை நிறுத்தினால் ஆதரவு தருவதாக சி.பி.எம் சொன்னது. ஆனாலும் ஜெ வுக்கு வழிவிட்டு விலகி நின்றார்கள்.

இந்த சமரசம் ஏன் என்பதற்கான காரணம் இப்போதுதான் புரிகின்றது. டி.ராஜாவின் மாநிலங்களவை பதவிக்காலம் முடிந்த பின் அந்த பதவியை தான் பெறுவதற்காக புதுக்கோட்டையில் நடத்த வேண்டிய அரசியல் கடமையிலிருந்து தவறியுள்ளார் என்பது இப்போதுதான் தெரிகின்றது.

சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெ முதலில் தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்த போது, மாற்று அணி அமைக்க விஜயகாந்தை வேகம் வேகமாக சந்தித்ததும் மற்ற கட்சித் தலைவர்களை பின்னுக்குத் தள்ளி தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்ததும் தோழர் தா.பா என்பது நினைவிற்கு வந்து தொலைக்கிறதே! அவர் ஒரு மண் குதிரை என்பது அப்போது உங்களுக்கு தெரியவில்லையா என்று கேட்கத் தோன்றுகின்றதே!

தோழர் தா.பா அவர்களே உங்களுடைய மாநிலங்களவைப் பதவிக்காக மார்க்சிஸ்ட் கட்சியை சாடி ஜெ அம்மையாருக்கு உங்களின் விசுவாசத்தை நிரூபிக்க வேண்டாம்.

மாநில அரசு மேற்கொள்ளும் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் ரத்ததின் ரத்தங்கள் போல பாராட்டி வேண்டுமானால் பேசுங்கள், போராட்டங்களில் இருந்து விலகி நில்லுங்கள். ஆனால் இது சரியல்ல, நியாயமும் அல்ல.

மத்தியிலே நான்கு இடதுசாரிக் கட்சிகளும் ஒன்றாக செயல்படுகையில் தமிழகத்தில் அந்த ஒற்றுமை சீர்குலைய உங்கள் பதவி ஆசை காரணமாக இருக்க வேண்டாமே!


No comments:

Post a Comment