Tuesday, August 20, 2013

கவலையளிக்கும் கறுப்பு சிவப்பு – இது வேறு, உடன்பிறப்புக்கள் கவலைப்பட வேண்டாம்.


கறுப்பு வெள்ளிக்கிழமை – சிவப்புக் கம்பளம்

தேசம் தனது அறுபத்தி ஏழாவது சுதந்திர தினத்தை நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடிய மறுநாள் மிகப் பெரிய பொருளாதார சரிவைக் கண்டது.

ஏற்கனவே சரிந்து கொண்டிருக்கிற ரூபாயின் மதிப்பு அன்று மேலும் மோசமாக சரிந்து ஒரு டாலருக்கு இணையான இந்திய நாணயத்தின் மதிப்பு 62.17  ரூபாய் என்ற அளவிற்கு குறைந்தது. மும்பைப் பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸில்  எழுநூறு புள்ளிகள் வரை சரிந்தது. சமீப காலத்தில் மிக மோசமான அளவு வீழ்ச்சி 16.08.2013 அன்றுதான் ஏற்பட்டது. பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் பங்குச்சந்தை மூலமாக தேசத்தை விட்டு வெளியேறியது. சமீப காலமாக சரிந்து கொண்டிருந்த தங்கத்தின் விலை அன்று மிகக் கடுமையாக உயர்ந்து ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை மட்டும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்தது.

இத்தனை பாதிப்புக்கள் ஒரே நாளில் நிகழ்ந்ததால் ஊடகங்கள் அதனை கறுப்பு வெள்ளிக் கிழமை என்று வர்ணித்தார்கள். 

இதற்கு என்ன காரணம் சொல்லப்படுகிறது?

அன்னிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள், பங்குச்சந்தையிலிருந்து பணத்தை வெளியே எடுத்துச் செல்ல கட்டுப்பாடுகள் வரலாம் என்ற  வதந்திகளால் ஏற்பட்ட அச்ச உணர்வில், அப்படிப்பட்ட சூழல் வருவதற்கு முன்பாக அவர்கள் தங்கள் முதலீட்டை வெளியே கொண்டு வந்துதான் காரணம் என்று அரசு விளக்கம் அளிக்கிறது.

இதன் மூலம் இரண்டு விஷயங்கள் தெளிவாகி விட்டது.

எந்த ஒரு கட்டுப்பாட்டிற்கும் சர்வதேச நிதி மூலதனம் தன்னை உட்படுத்திக் கொள்ளாது. அப்படிப்பட்ட நிலையை எந்த அரசாவது உருவாக்க நினைத்தால் அந்த நாட்டிலிருந்து வெளியேறி விடும்.

ஒரு நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு அன்னிய மூலதனத்தை நம்ப முடியாது. அப்படி நம்பினால் அது எதிர்பாராத நேரத்தில் காலை வாரி விடும்.

இந்த சூழலில் மத்தியரசு என்ன செய்யப் போகிறது?

பங்குச்சந்தை சரிவை சமாளிக்க அரசிற்கு ஆபத்பாந்தவனாக, கை கொடுக்கும் காவலனாக எல்.ஐ.சி இருக்கும். எல்.ஐ.சி நிறுவனத்தின் தொடர்ச்சியான முதலீடுகள் மூலமாக பங்குச்சந்தை சரிவு என்பது சமாளிக்கப்படும்.

ஆனால், அரசு இந்த நிலையிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளதா?

இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சீர்திருத்தங்களை விரைவு படுத்தி நிலைமையை சரி செய்யப் போகிறோம் என்பதுதான் ஆட்சியாளர்களின் பதிலாக உள்ளது.

அரசு தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இன்சூரன்ஸ்துறையில் அன்னிய மூலதன அளவை 26 % லிருந்து 49 % ஆக உயர்த்த வழி வகுக்கும் இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவையும் பென்ஷன் நிதியை அன்னிய மூலதனத்தின் ஆதிக்கத்திற்கு உட்படுத்த வழி வகுக்கும் பென்ஷன் வளர்ச்சி மற்றும் ஒழுங்காற்று ஆணைய மசோதாவையும் நிறைவேற்றத் துடிக்கிறது. அன்னிய மூலதனம் உள்ளே வந்தால்தான் இந்தியப் பொருளாதாரம் நிமிரும் என்ற பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்துள்ளது.

சர்வதேச பொருளாதார நெருக்கடி உலகை குலுக்கிய நேரத்தில் அது பற்றி ஆய்வு செய்ய உலகின் மிகச்சிறந்த பொருளாதார வல்லுனர்களைக் கொண்டு உலக வங்கியால் அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரையில்  “எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் உள்நாட்டு சேமிப்பிற்கு மாற்றாக அன்னிய மூலதனம் ஒருபோதும் இருக்க முடியாது” என்று பரிந்துரைத்தது.

ஆனால் எந்தேரமும் காற்றில் கற்பூரமாய் காணாமல் போகிற அன்னிய நிதி மூலதனத்தின் மீது கொண்டுள்ள மோகத்தில் உள்நாட்டு சேமிப்பை ஊக்குவிக்க மறுக்கிறார்கள். உள்நாட்டு சேமிப்பை திரட்ட அடிப்படையாக திகழும் எல்.ஐ.சி போன்ற பொதுத்துறை நிறுவனங்களை சீரழித்து விட்டு அன்னிய நிதி மூலதனத்திற்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது மத்தியரசு.

காங்கிரஸ் கட்சிக்கு எந்த விதத்திலும் சளைக்காத பாரதீய ஜனதா கட்சியும் இந்த சீர்திருத்தங்களை அமுலாக்க கரம் கோர்க்க தயாராகவே உள்ளது. நெருக்கடிகளிலிருந்து இவர்களை காப்பாற்ற கை கொடுக்கும் எல்.ஐ.சி நிறுவனத்தை சீரழிக்கும் முயற்சிகளை எந்நாளும் அனுமதியோம் என்ற உறுதியோடு மக்களிடம் நாங்கள் தொடர்ந்து  செல்வோம். மாற்றுக் கொள்கைகளை முன்வைப்போம். 


இன்சூரன்ஸ்துறையில் அன்னிய மூலதன அளவு உயர்த்தப்பட்டால் உடனடியாக ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்வது என்று எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஏற்கனவே எடுத்த முடிவை  நிறைவேற்ற தயாராக இருக்கிறோம்.. எங்களோடு நீங்களும் வாருங்கள்.

3 comments:

  1. இந்தியப்பொருளாதாரம் கடந்த 2008ம் ஆண்டில் ஏற்பட்ட உலகப்பொருளாதார பாதிப்பில் சிக்காமல் இருந்ததற்கு வங்கியும், காப்பீட்டுத்துறையும் அரசிடம் இருந்ததுதான் என்பதை அறிந்தும் சீரழிக்க துணிகிறார்களே!

    ReplyDelete
  2. அன்பின் ராமன் - இன்றைய வலைச்சரம் மூலமாக வந்து படித்தேன் - டாலர் 65ஐ தொட்டு விட்டது - என்ன செய்கிறார்கள் ஆர் பி ஐயும் ஃபினான்ஸ் மினிஸ்ட்ரியும் .... பதிவு அருமை - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete