Tuesday, September 17, 2013

வெள்ளிப் பிள்ளையாரை வீசியவர்களையும் கடலில் வீசினால் என்ன?




விடுதலைப் போரின்
வரலாறு சொல்கின்ற
கம்பீரக் கோட்டை,

தலைவர்கள் முதல்
தற்குறிகள் வரை
அடைபட்ட
வதைபட்ட 
சிறைச்சாலை,

உறவு இல்லாத
ஊரானாலும் 
நம்பிக்கையை
மனதிலேந்தி 
வந்து குவியும்
மருத்துவ மனை,

இவைதான் 
எங்கள் ஊரின்
அடையாளமாய்
கொண்டிருந்தோம்.

புதிதாய் முளைத்தது
தங்கத்தகடுகள் வேய்ந்த
கோயில் ஒன்று.
மனிதரே  கடவுளாய் 
மாறி நிற்கும்
அதிசயங்கள் 
இங்கும் உண்டு.

அங்கிருக்கும் அகழியில்
அன்றொரு நாள் பார்த்தேன்
ஆயிரம் ரூபாய் கட்டு
மிதக்கின்ற கொடுமைதனை.

ரூபாயின் மதிப்பு ஏன்
குறையாது?
அதை உணராத 
மாக்களிடம் புழங்கும்போது.

இன்றும் கூட 
ஒரு செய்தி.
பத்து லட்சத்தில்
வெள்ளிச் சிலை செய்து
ஆழ்கடலில் மூழ்க
வைத்த மூடர்கள் பற்றி.

வறுமையைப் புரியாத,
ஏழை மக்கள் 
ஏக்கத்தை அறியாத
அவர்களின் இதயம்
என்ன இரும்பால் செய்ததா?

தாலி வாங்கித் தந்திருந்தால்
சில பெண்களின் 
தவிப்பு தீர்ந்திருக்கும்

பால் வாங்கித் தந்திருந்தால்
பல குழந்தைகளின்
பசி அடங்கியிருக்கும்.

பாழும் கடலில்
வீசினீரே,
உம்மையும் அதிலே
வீசினால் என்ன?
 
 

 

1 comment:

  1. நீங்க சொன்னது ஒன்றை தவிர மிகுதி அவ்வளவும் சரி.
    பால் வாங்கித் தந்திருந்தால்
    பல குழந்தைகளின்
    பசி அடங்கியிருக்கும்.
    மிக மிக சரி ஆனால்
    நீங்க சொன்னது ஒன்றை தவிர
    தாலி வாங்கித் தந்திருந்தால்
    சில பெண்களின்
    தவிப்பு தீர்ந்திருக்கும்

    பணம் கொடுத்து தாலி வாங்கி கொடுக்காட்டி திருமணம் செய்யமாட்டாங்களோ?தாலியே இல்லாம திருமணம் செய்தவங்க நல்லவங்களை உள்ளுரிலும் வெளியிலேயும் நான் காணும் பாக்கியம் பெற்றிருக்கிறேன்.

    ReplyDelete