Thursday, October 3, 2013

வேலூரில் சென்னை சில்க்ஸ் – அதிர்ந்தது வேலூர், அதிர்ச்சியில் ???



சென்னையின் பிரபல துணிக்கடை சென்னை சில்க்ஸ் மூன்று தினங்கள் முன்பாக வேலூரில் தனது கிளையை திறந்துள்ளது. பிரபல நகைக்கடைகளான ஜோஸ் ஆலுக்காஸ், ஜாய் ஆலுக்காஸ், கல்யாண், நாதெல்லா, கஸானா ஆகியோர் ஏற்கனவே வேலூரில் கிளைகள் திறந்துள்ளனர். ஆனால் இவைகள் எல்லாவற்றையும் விட சென்னை சில்க்ஸ் க்கு கிடைத்துள்ள வரவேற்பு மிகவும் பெரியது.

ஊரெல்லாம் இதே பேச்சு என்று பொதுவாக சொல்வார்களே, அது இந்த விஷயத்திற்கு மிகவும் பொருத்தம். வீடு, அலுவலகம், கடை வீதி, டீக்கடைகள் என்று சென்னை சில்க்ஸ் பற்றி பேசுபவர்கள் எண்ணிக்கை அதிகம். இயல்பாகவே பெண்கள் மத்தியில் கொஞ்சம் கூடுதல்தான்.

பொதுவாக வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் கண்காட்சிகளுக்கு அதிகமான அளவில் மக்கள் திரள்வார்கள். அந்த அளவிற்கு மக்கள் திரள் சென்னை சில்க்ஸ் கடையிலும் ஒவ்வொரு நாளும் பார்க்க முடிந்தது. என் மகனின் பிறந்த நாளுக்கு சட்டை வாங்கலாம் என்று நாங்களும் சென்றிருந்தோம்.

வேலூரில் ஒரு கடைக்கு அவ்வளவு கூட்டம் என்பது இதுவரை நான் பார்த்ததே கிடையாது. பிரம்மாண்டமான அந்த கடையில் நிற்க இடமில்லை என்று சொன்னால் அது மிகையான வார்த்தை இல்லை. கிட்டத்தட்ட முக்கால் கிலோ மீட்டர் தூரத்திலிருந்தே கார்கள் நிறுத்தப் பட்டிருந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் என்பது தொடங்கி விட்டது.

ஒரு புதிய கடை என்பதால் துவக்கத்தில் ஒரு மோகம் இருக்கும் என்று பார்த்தாலும் கூட நகைக்கடைகளுக்கு இல்லாத பரபரப்பு ஏன் துணிக்கடைக்கு?

நான் யோசித்தவரை சில காரணங்கள்.

முதல் காரணம் விருப்பம் . நகைகளைக் காட்டிலும் பெண்களை அதிகம் ஈர்க்கும் சக்தி உடைகளுக்குத்தான் உண்டு. ஆக இது முக்கியக் காரணம்.

இரண்டாவது காரணம் விலை. நகைக்காக செலவிடுவதில் பத்தில் ஒரு பங்கு செலவு செய்தாலே நல்ல தரமான உடைகளை வாங்க முடியும். நகைக்காக செலவழிப்பதற்கு சேமிப்பு இருந்தால் மட்டுமே முடியும். உடை என்றால் சேமிப்பு அவசியமில்லை. மாத சம்பளத்திலிருந்தே வாங்க முடியும். ஆக நிதி என்பது இரண்டாவது காரணம்.

மூன்றாவது ; சாய்ஸ் மற்றும் வெரைட்டி ; ஆடைகளில் கிடைக்கிற சாய்ஸ் மற்றும் வெரைட்டி நிச்சயமாக நகைகளில் கிடையாது.

ஆடைகளை நினைத்த போது வாங்குவது போல நகைகள் வாங்க முடியாது. வாங்கிய நகையை மாற்றுவதில் இழப்பும் அதிகம்.

சென்னை சில்க்ஸ் போல மற்ற பெரிய கடைகள் வந்தாலும் அவைகளுக்கும் நிச்சயம் வரவேற்பு இருக்கும் என்றே தோன்றுகிறது. இருப்பினும் இப்போது அதிர்ச்சியில் உள்ளது வேலூரில் உள்ள துணிக்கடைகள்தான்.. துணிக்கடைகள் அதிகம் உள்ள லாங் பஜார், ஆபிஸர்ஸ் லைன், பர்மா பஜார் ஆகிய பகுதிகளுக்கு மாலை சென்று வந்தேன். பெரும்பாலான கடைகள் வாடிக்கையாளர்கள் கடைகள் வெறிச்சோடிக் கிடந்தன. இந்த வருடம் தீபாவளிக்கு அவைகளின் விற்பனையில் கண்டிப்பாக பாதிப்பு இருக்கும்.

அதே போல பெரிய நகைக்கடைகள் வந்ததால் வேலூரில் உள்ள சிறிய நகைக்கடைகள் பாதிப்பு அடைந்துள்ளன என்பதும் யதார்த்தம்.


சென்னை சில்க்ஸாலேயே இந்தளவு பாதிப்பை சிறிய வணிகர்களுக்கு ஏற்படுத்த முடியும் என்றால் வால் மார்ட் வந்தால் என்ன ஆகும்? 

1 comment:

  1. பாண்டிச்சேரில போன வருஷம் போத்தீஸ் ஓப்பன் பண்ணும் போதும் இப்படிதான் கூட்டம். இப்போ அதுல பாதிக்கூட்டம் கூட இல்லை

    ReplyDelete