Sunday, December 8, 2013

மனம் போன போக்கில் ஒரு குருமா







இது வியாழக்கிழமை கதை. ஆனால் எழுத என்னமோ இன்றுதான் நேரம் கிடைத்தது. அன்று காலையிலேயே வாங்கி வந்த கறிகாய்களில் எஞ்சியிருந்த காலி ஃபளவரைப் பார்த்து  இதை நானே இரவு குருமா செய்து விடுகிறேன் என்று ஜம்பமாக கூறி விட்டேன்.

என் மகனும் சொன்ன வார்த்தையை நீ கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும் என்று மிரட்டலாக வேறு சொன்னான்.

மாலையில் மனைவியை வீட்டில் விட்டு விட்டு மீண்டும் அலுவலகம் வந்தேன். அப்போதும் என் மகன் சீக்கிரம் வா, குருமா செய்ய வேண்டும் என்று நினைவு படுத்தி அனுப்பினான். நீண்ட நாட்கள் பார்க்காத ஒரு தோழர் அலுவலகத்திற்கு வர அவரோடு பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

எட்டரை மணிக்கு மேல் வீட்டிற்கு போன் செய்து அலுவலகத்திலிருந்து புறப்பட்டு விட்டேன், ஏ.டி.எம் போய் விட்டு கறிகாய் வாங்கிக் கொண்டு வந்து விடுகிறேன் என்று சொன்னால் இல்லையில்லை நீங்கள் வந்துதான் குருமா செய்ய வேண்டும், வீட்டிற்கே வந்து விடுங்கள் என்றதும் நிலைமை சிக்கலானது ஏனென்றால் குருமா செய்ய தெரியாது. ஏதாவது புத்தகத்தை பார்த்து சமாளிக்கலாம் என்றால் அதற்கும் அவகாசம் கிடையாது.

வீட்டிற்கு ஒன்பது மணியாவது பத்து நிமிஷம் முன்பு சென்றால் என் பையன் நேரே கிச்சனுக்கு அனுப்பி விட்டான்.

இனி வேறு வழியே இல்லை.

தக்காளி, வெங்காயம்  எல்லாம் வெட்டி வைக்கப் பட்டிருந்தது. காலி ஃப்ளவரை கொதிக்கும் தண்ணீரில் ஒரு பத்து நிமிடம் ஊற வைத்தேன். தக்காளி, வெங்காயம், தேங்காய் துறுவல், கொஞ்சம் பட்டை, பெருஞ்சீரகம், இரண்டு லவங்கம், கசகசா எல்லாவற்றையும் மிக்ஸியில்  போட்டு அறைத்து வைத்துக் கொண்டேன்.

பிறகு அடுப்பில் கொஞ்சமாக எண்ணெய் வைத்து கடுகு வெடிக்க வைத்து அதன் பின்பு கொஞ்சம் சீரகத்தைப் போட்டு வறுத்து அதன் பின்பு கடலைப் பருப்பையும் பொன் நிறமாக வறுத்த பின்பு வெங்காயம், தக்காளி, குட மிளகாய் என ஒவ்வொன்றாய் நன்றாக வதக்கிக் கொண்ட பின் காலி ஃப்ளவரையும் நன்றாக வதக்கி கொண்ட பின் அறைத்து  வைத்த கலவையையும் கலந்து கொதிக்க வைத்தேன். நன்றாக வாசம் வந்த போதுதான் காரத்திற்கு எதுவுமே சேர்க்கவில்லையே என்று ஞாபகம் வந்து அவசரமாக காரப் பொடியை கலந்தேன். நல்ல வேளையாக உப்பு சேர்க்க வில்லை என்பதும் அப்போது ஞாபகத்திற்கு வந்தது.

எல்லாம் நன்றாக வந்தாலும் குருமாவாக சேர்ந்து வரவில்லை. உடனே கடலை மாவை கறைத்து ஊற்றி கொதி வந்ததும் கொத்த மல்லி தூவி மறக்காமல் போட்டோவும் எடுத்து இறக்கி வைத்து விட்டேன்.

என் மகனும் மனைவியும் சப்பாத்திக்கு குருமா எடுத்துக் கொண்டு ஹாலுக்கு சென்றார்கள். நான் கடைசியாக சென்றேன். குருமா எப்படி இருக்கிறது என்று கேட்டால்  இவர்கள் இருவரும் விழுந்து சிரிக்கிறார்கள். அதிர்ச்சியோடு பார்த்தால் சரியாக அந்த நேரத்தில்தான் தொலைக்காட்சியில் ஒரு நகைச்சுவைக் காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது.

வேலாயுதம் சினிமாவில் விஜயின் தங்கை சரண்யா மோகன் செய்த உப்புமாவை சாப்பிட்ட பிச்சைக்காரன் “ வாழ்க்கையில் இப்படி சாப்பாட்டை குடுத்து கொலை பண்ண பாக்கிறீங்களே “ என்று திட்டுகிற காட்சி அது.

நல்ல வேளை குருமாவை சாப்பிட்ட யாருக்கும் எதுவும் ஆகவில்லை. நன்றாக இருந்தது என்று நானே சொன்னால் சுய தம்பட்டம் என்று அனானி யாராவது பின்னூட்டம் எழுதுவார்கள். ஆனால் இனி நீங்களே
குருமா செய்யலாம் என்று மனைவி சொன்னது இந்த டி.வி போட்டிகளில் வரும் சூப்பர் செப் பட்டத்திற்கு இணையானது என்று கருதுகிறேன்.

ப்ளான் பண்ணி செஞ்சிருந்தா கொஞ்சம் சொதப்பியிருக்குமோ?


3 comments:

  1. நீங்க கிச்சனில் ஏதாவது செய்தால் மணந்தே வந்திடுவோம். உங்க குருமா பார்க்கவே தெரிகிறது அந்த மாதிரி தான் சுவையா இருக்கும் என்று.

    ReplyDelete
  2. அதானே பார்த்தேன். இந்த மாதத்திற்கான சமையல் குறிப்பு ஏதும் வரவில்லையே என்று ! இதோ வந்தே விட்டது எங்கள் நளனின் நளபாகம். நானும் முயற்சித்து பார்க்க போகிறேன் !

    ReplyDelete
  3. PHOTO IS VERY INVITING TO TASTE THE FOOD. REALLY LOOKING SO NICE. aana, veli thotratha vachi edhuvum sollamudiyaathu....so, one day i will come and taste the food(and take the risk)

    ReplyDelete