Saturday, February 8, 2014

இழிவு படுத்தாதீர்கள் – கோபத்தோடு ஒரு குரல்



அடர்ந்த அந்த
கானக வாழ் ஜீவராசிகள்
கோபமும் குமுறலுமாய்
குறைகளைக் கொட்டினார்கள்.

எங்களுக்குள் மதமும் இல்லை,
மத மோதலுமில்லை.
உங்கள் மத்தியில் வாழ்கிற போதுதான்
யானைக்குக் கூட மதம் பிடிக்கிறது.

நாற்காலி ஆசை
எங்களுக்கு இல்லை.
நாற்காலிக்காக  விலங்கு வேட்டை
நடத்தியதும் இல்லை.

சிங்கம், புலி, யானை, நரி
மான், மயிலென்று
விதம் விதமாய் நாங்கள்
இருந்தாலும்
மனிதர்களைப் போல்
தங்களுக்குள் மோதுவதில்லை.
பகைமைத் தீயை
மூட்டி விட்டு
அதிலே குளிர்
காய்வதுமில்லை.

பொய்கள் பழக்கமில்லை,
மனைவியை தள்ளி வைக்கும்
வழக்கமும் எங்களுக்கில்லை.

பின் ஏன்
வண்டலூர் வருபவரை
மிருகமெனச் சொல்லி
எங்களை ஏன்
இழிவு செய்கிறீர்?

No comments:

Post a Comment