Saturday, May 10, 2014

இவர்களையும் நீங்கள் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்



இன்றைய ஹிந்து நாளிதழ் பல்வேறு பள்ளிகளின் முழு பக்க, அரை பக்க, கால் பக்க விளம்பரங்களால் நிறைந்திருந்தது. மற்ற நாளிதழ்களும் அதே போன்ற விளம்பர வெள்ளத்தில்தான் மூழ்கியிருந்தன.

நூறு சதவிகித வெற்றி, மாநிலத்தில் இத்தனையாவது இத்தனையாவது இடம், இத்தனை பேர் இத்தனை பாடங்களில் இவ்வளவு மதிப்பெண் எடுத்தார்கள் என்ற விபரங்களையெல்லாம் போட்டு ஆகவே எங்கள் கஜானா மேலும் பெருக எங்கள் பள்ளியில் உங்கள் குழந்தைகளை சேருங்கள் என்று அழைத்திருந்தார்கள்.

விளம்பரங்களுக்கு அடுத்தபடியாக மாநிலத்தில், மாவட்டத்தில் முதல் இடங்களைப் பெற்ற மாணவிகள், மாணவர்களின் படங்கள், பேட்டிகள் பெருமளவு இடத்தை பிடித்திருந்தன. அவர்களுக்கெல்லாம் நேற்றைய தினம ஒரு பொன்னாளாகவே அமைந்திருக்கும். பல வருட உழைப்பு அல்லவா அது! அவர்களுக்கெல்லாம் என் பாராட்டுக்கள்.

நேற்று முகநூலில் பார்த்த பல நிலைத்தகவல்கள் வித்தியாசமான அணுகுமுறையோடு இருந்தது. தேர்வில் வெற்றி பெறாவிட்டாலோ அல்லது மதிப்பெண் குறைந்து போனாலோ கவலைப்படாதீர்கள், இவை மட்டுமல்ல வாழ்க்கை என்ற ரீதியில் உற்சாகமளிக்கும் வார்த்தைகளை நிறைய பேர் தங்களின் அனுபவங்களோடு எழுதியிருந்தார்கள். அதிலே இயக்குனர் வசந்தபாலன் எழுதியது மிகவுமே நன்றாக இருந்தது. அதை பிறகு பகிர்ந்து கொள்கிறேன்.

தேர்வு முடிவுகள் பற்றிய செய்திகளில் என்னை கவர்ந்தது இரண்டு பள்ளிகள், இரண்டு மாணவர்கள்.

வேலூர் மாவட்டத்தில் நூறு சதவிகித தேர்ச்சி பெற்றவை ஐம்பத்தி ஐந்து பள்ளிகள். இதிலே பெரும்பாலானவை தனியார் பிராய்லர் உற்பத்திக் கூடங்கள். வருடத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு சிறந்த மாணவர்களை மட்டுமே சேர்த்துக் கொண்டு நூறு சதவிகித தேர்ச்சி காண்பிப்பவர்கள். பத்தாவதில் 90 % மதிப்பெண் வாங்குபவர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு நூறு சதவிகித தேர்ச்சி என்று சொல்வதில் அவ்வளவு பெரிய சாதனை ஒன்றும் கிடையாது.

வேலூரை அடுத்த பெருமுகையில் உள்ள ஆதி திராவிடர் மேல்நிலைப் பள்ளியும் அரக்கோணத்தில் உள்ள ஆதி திராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் நூறு சதவிகித தேர்ச்சியைப் பெற்றுள்ளன. சமூகத்தின் அடித்தட்டில் உள்ளவர்கள் மட்டுமே இப்பள்ளிகளுக்கு வருவார்கள். இப்பள்ளிகள் பெற்றுள்ள நூறு சதவிகித வெற்றி என்பது உண்மையிலேயே மகத்தானது.

அதிலும் அரக்கோணம் பின் தங்கிய ஒரு பகுதி. அங்கே தேர்வெழுதிய மாணவிகளின் எண்ணிக்கையும் மிகவும் அதிகம். 232 பேர். அவர்கள் அனைவரும் வெற்றி பெற்றது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்குமே என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே போல விசைத்தறி தொழிலாளியாக 25,000 ரூபாய்க்கு கொத்தடிமையாக மாற்றப்பட்டு வேலை செய்து பிறகு அண்ணன் பனிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களுக்காக கிடைத்த பரிசால் மீட்கப் பட்ட நாமக்கல் மாணவன் ஆர்.கோபால் பெற்ற 1144 மதிப்பெண்களும் குழந்தைத் தொழிலாளியாக தீப்பெட்டி தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்த சிவகாசி மாணவி மகாலட்சுமி பெற்ற 1068 மதிப்பெண்களும் அற்புதமானது. மாநிலத்தின் முதலிடத்திற்கு சமமானது.

இவர்களையும் நெஞ்சாறப் பாராட்டுங்கள். அவர்கள் அதற்கு தகுதியானவர்கள்.



2 comments:

  1. Still many more students from govt schools are doing well.
    Congrats to those students and parents, but sincere thanks to those teachers who believed in the children and encouraged their hard work to study (while their families face hardship in sending them to school, especially girl children). If all the govt teachers take up teaching to their heart, every child will do well in life, even if not in exams. All the best children!!!

    ReplyDelete
  2. You are perfectly correct Com Santha . There are lot of students from the lower strata of the society performing excellently. There are dedicated teachers in government schools working hard to improve the poor students. They all deserve praise

    ReplyDelete