Friday, August 22, 2014

சென்னை வந்து நொந்த கதை



http://upload.wikimedia.org/wikipedia/commons/1/1e/LIC_building,_Chennai.jpg
 https://c1.staticflickr.com/5/4130/5064295638_5b8c7fe699_z.jpg

இன்று சென்னையின் 375 வது பிறந்த தினம் என்பதால் ஒவ்வொருவரும் தாங்கள் சென்னைக்கு முதன் முதலாக போன அனுபவத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கையில் நான் மட்டும் எனது நொந்த கதையை சொல்லாமல் விட்டால் சரியாக இருக்குமா என்ன?

சிறு வயது முதலே சென்னை செல்ல வேண்டும், பதினாலு மாடி எல்.ஐ.சி கட்டிடம் பார்க்க வேண்டும், பீச்சுக்கு போக வேண்டும் என்ற கனவெல்லாம் நிறையவே உண்டு. ஆனால் அது நிறைவேறுவதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை.

ஒன்பதாவது படிக்கும்போது ஒரு வாய்ப்பு கிடைத்து அதுவும் கடைசியில் பறிபோய் தனியாக ஒரு மூலையில் அமர்ந்து கண்ணீர் வடித்தது ஒரு சோகக்கதை. 

கல்லூரி இறுதி ஆண்டில்தான் சென்னை என்னை வரவேற்றது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் எம்.பி.ஏ நுழைவுத் தேர்வுக்கான தேர்வு மையம் சென்னை லயோலா கல்லூரி.மெட்ராஸ் போறேன் என்று தம்பட்டம் அடித்து போஸ்டர் ஒட்டவில்லை. அவ்வளவுதான் மற்றபடி மனதிற்குள் அவ்வளவு மகிழ்ச்சி. 

ஒரு பத்து நண்பர்கள் ஒன்றாகச் சென்றோம். வைகை எக்ஸ்பிரசில் ரிசர்வ் செய்த நாள் முதல் கொண்டே சென்னையில் என்ன செய்வது என்ற திட்டம்தான். எம்.பி.ஏ தேர்விற்கு படிக்கவில்லையா என்று கேட்பது காதில் விழுகிறது. அது கிடக்குது கழுதை. அதை விடுங்க சார்.

அந்த பொன்னாள் இறுதியில் வந்தே விட்டது. ஆறு மணி டிரெயினுக்கு ஐந்து மணிக்கெல்லாம் ஸ்டேஷன் வந்து விட்டோம். வெஸ்டிப்யூல் வசதியுள்ள ட்ரெயினில் பயணம் செய்ததும் அதுதான் முதல் முறை. வைகை எக்ஸ்பிரசில் உட்கார்ந்து பயணம் செய்ததை விட அங்கும் இங்கும் போய் வந்ததுதான் அதிகம்.

மிகுந்த உற்சாகத்தோடு எக்மோரில் கால் வைத்த அந்த நொடியே அந்த உற்சாகம் பறிபோகும் என்று சத்தியமாக நினைக்கவில்லை. என் அப்பா செய்த உள்குத்து தெரியவேயில்லை. எனது பெரியப்பா மகனுக்கு எனது கோச் நம்பர் வரை தகவல் சொல்லி அவர் சரியாக வாசலில் நின்று "ராமா" என்றழைத்து கையைப் பிடித்து அவரது வீட்டிற்கு கூப்பிட்டுக் கொண்டு போய்விட்டார்.

காதலனிடமிருந்து பிரித்து தந்தையால் கூட்டிச் செல்லப்படும் காதலி போல நண்பர்களை பரிதாபமாக பார்த்துக் கொண்டே அவரோடு சென்று விட்டேன். அவர்கள் வீட்டில் தூர்தர்ஷனில் ஏதோ ஹிந்தி படம் ஒடிக்கொண்டிருந்ததை வேண்டா வெறுப்பாக பார்த்ததில் சென்னையின் முதல் நாள் கழிந்தது.

மறுநாள் ஒரு வழியாக தப்பித்து வந்து தேர்வு முடிந்த பின்பு நண்பர்களோடு மெரினா பீச் போனது மட்டுமே சென்னையில் பார்த்த ஒரே இடம். மிகவும் ஆசைப்பட்ட பதினாலு மாடிக் கட்டிடத்தை பார்க்க முடியாத சோகத்தோடு மதுரை திரும்பினேன்.

எல்.ஐ.சி கட்டிடத்தை முதன் முதலில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததே நேர்முகத் தேர்விற்குச் சென்ற போதுதான். 

சிரு வயதில் அவ்வளவு பிரேமித்த, வியப்பூட்டிய, வசீகரித்த சென்னை இப்போது என்னவோ அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால் இப்போதுதான்   அடிக்கடி செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. போகிற வேலை முடிந்த பிறகு ஒரு நொடி கூட இருக்க தோன்றுவதே இல்லை. 

3 comments:

  1. சென்னை நினைவுகள் அருமை நண்பரே

    ReplyDelete
  2. ungal communisa aasiyum oru naal idhey anubhavm tharum (eg. Russia) yena ninai-kirean!!

    ReplyDelete
    Replies
    1. பேராசை உங்களுடையது. இன்றைக்கு இந்தியா சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கு சோவியத் யூனியனின் சிதைவும் ஒரு காரணம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். சோவியத் யூனியன் நம்மை நண்பனாக நடத்தியது. இன்று அமெரிக்காவின் அடிமையாய் அசிங்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம்

      Delete