Thursday, October 30, 2014

சிக்கன் பிரியாணிக்கு தடை வருகிறது...........



அசைவ உணவுக்கு இனி ஐ.ஐ.டி யில் அனுமதி கிடையாதா?

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.ஜெயின் என்ற ஆர்.எஸ்.எஸ் காரர் ஒருவர் ஐ.ஐ.டி நிறுவன விடுதிகளில் அசைவம் வழங்குவதை தடை செய்ய வேண்டும் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

வெங்காயம், பூண்டு மற்றும் மாமிசம் போன்ற உணவுகளை உண்பதால் மாணவர்கள் கெட்டுப் போய் விடுகிறார்கள். இந்த உணவுக் கலப்பால்தான் முஸ்லீம்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆகவே அவற்றை ஐ.ஐ.டி யில் தடை செய்ய வேண்டும் என்றும் பாஜக அரசாங்கம் இப்பிரச்சினையை புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். அசைவ உணவின் மூலம் மோசமான கலாச்சாரத்தை ஐ.ஐ.டி வளர்க்கிறது என்பது அவரது குற்றச்சாட்டு.

ஆர்.எஸ்.எஸ் ஆட்களின் மூளை இப்படித்தான் அபத்தமாக சிந்திக்கும் என்பது புதிதல்ல. ஆனால் அதை அமலாக்க மோடி அரசு முயற்சி எடுக்கிறது என்பதுதான் இங்கே விஷயம்.

மனித வள மேம்பாட்டுத்துறை இந்த மனிதர் அனுப்பிய கடிதத்தை இந்தியாவில் உள்ள பதினாறு ஐ.ஐ.டி நிர்வாக இயக்குனர்களுக்கும் அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு சொல்லியுள்ளது. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

சைவமா அல்லது அசைவமா என்பது அவரவர் உணவுப்பழக்கம். உரிமை. இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. கடிதம் எழுதும் உரிமை அந்த மனிதருக்கு இருக்கலாம். அதை எல்லா ஐ.ஐ.டி க்கும் அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? ஏற்கனவே டெல்லி ஐ.ஐ.டி விடுதிகளில் அசைவ உணவு நிறுத்தப்பட்டு விட்டதாம்.

இவர்களை இதை ஐ.ஐ.டி யோடு நிறுத்த மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம்.

நான் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதை முடிவு செய்ய அரசாங்கத்திற்கு என்ன உரிமை உள்ளது?

பாரதீய ஜனதா திணிக்க விரும்பும் ஒற்றைக் கலாச்சார முறையில் உணவுப் பழக்கமும் ஒன்று என்பதை மறந்து விடாதீர்கள்.


1 comment:

  1. ஹும்.. மோசம்தான்!

    இந்தச் செய்தியை எங்கும் படிக்கவில்லையே..
    இணைப்பு கொடுக்க முடியுமா?

    ReplyDelete