Wednesday, November 5, 2014

திருச்சியிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்



நேற்று எங்கள் சங்கத்தின் சார்பில்  04.11.2014 அன்று திருச்சியில் இன்சூரன்ஸ் அன்னிய முதலீடு எதிர்ப்பு சிறப்பு மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் தலைவர்கள் பேசிய உரைகளிலிருந்து  சில முக்கியமான பகுதிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

தோழர் அ.சவுந்தரராஜன்,
தமிழ் மாநிலத் தலைவர், சி.ஐ.டி.யு,
மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்



இந்திய சுதந்திரப் போராட்டமே அடிப்படையில் அன்னிய மூலதனத்திற்கு எதிரான போராட்டம். 1947 க்கு முன்பு இந்தியாவில் செய்யப்பட்ட எல்லா முதலீடுகளுமே பிரிட்டிஷாருடையது. அந்த முதலீடுகளை அவர்கள் அதிகாரத்தின் மூலமாக பாதுகாக்க முயன்றார்கள். ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் அன்னிய மூலதனத்தை வரவேற்பது வெட்கக்கேடு

பிரிட்டிஷார் வந்திராவிட்டால் இந்தியாவில் தண்டவாளம் வந்திருக்குமா, மின்சாரம் வந்திருக்குமா  என்று கேட்கும் அறிவிஜீவிகள் இன்னும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் லத்தீன் அமெரிக்க அனுபவங்களை உணர்ந்து கொள்ள வேண்டும். அங்கே இருந்த பன்னாட்டுக் கம்பெனிகள் வெளியேறிய பின்புதான் அங்கே உள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயரத் தொடங்கியது.

எண்ணெய் உற்பத்தி தொடங்கி உருக்கு உற்பத்தி வரை பொதுத்துறை நிறுவனங்கள் ஈடுபடுவதை கண்ணுக்கு தெரியாத சக்திகள் தடுக்கின்றன. இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு நிபந்தனைகள் விதித்தால் அவைகள் அதை ஏற்றுக் கொள்ளும். ஆனால் நிபந்தனை விதிக்கும் அரசியல் உறுதிதான் ஆட்சியாளர்களுக்கு கிடையாது. அந்த அரசியல் உறுதியை நமது போராட்டங்கள்தான் உருவாக்க வேண்டும் எல்.ஐ.சியை பாதுகாக்கும் போராட்டம் இந்த தேசத்தை பாதுகாக்கும் போராட்டம்

தோழர் எம்.கிரிஜா
இணைச்செயலாளர்
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.


இன்சூரன்ஸ்துறையில் மூலதனம் அதிகரித்தால்தான் மக்களுக்கு பலன் கிடைக்கும் என்று முதலாளிகள் கூட்டமைப்பு அசோகம் சொல்கிறது. ஆனால் தனியார் கம்பெனிகளின் வரவால் வந்த்து யுலிப் திட்டங்கள்தான். அதனால் மக்கள் பலனடையவில்லை என்றார். வேலை செய்ய தகுதியுள்ள இந்திய மக்களின் எண்ணிக்கை 2011 ல் 50.7 கோடியாக உள்ளது 2021 ல் 63.7 கோடியாக உயரும். அவர்களுக்கு காப்பீடு தர அன்னிய மூலதனத்தை உயர்த்த வேண்டும் என்ற வாதம் வைக்கப்படுகிறது. வேலை செய்ய தகுதியுள்ள மக்களின் எத்தனை பேருக்கு வேலை தரப்படுகிறது? வேலை உறுதிச்சட்டமும் கூட நீர்த்துப் போகச் செய்யப்படுகிறதே?  

மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்காமல் காப்பீடு அளிப்பது பற்றி பேசுவது கேலிக்கூத்து”

“அமெரிக்காவில் 1 %  சதவிகிதம் உள்ள செல்வந்தர்களின் செல்வத்திற்கு 1 ½ சதவிகித வரி போட்டாலே 46 நாடுகளில் உள்ள 23.7 மில்லியன் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியும்”


திருமிகு சமஸ்.
நடுப்பக்க ஆசிரியர்,
தமிழ் இந்து நாளிதழ்.



“தேர்தலுக்கு முன்பாக மோடிக்கு எதிராக கட்டுரைகள் எழுதினீர்களே, அவர் வெற்றி பெற்று விட்டாரே, இனி என்ன செய்வீர்கள் என்று ஒருவர் நக்கலாக கேட்டார். இன்னும் எழுதுவோம், இன்னும் பேசுவோம், இன்னும் போராடுவோம் என்று நான் பதிலளித்தேன்

“நான் தைரியமாக செயல்படுவதற்கான ஆன்ம பலத்தை தனக்கு அளித்தது எல்.ஐ.சி. எல்.ஐ.சி முகவராக செயல்பட்டது ஒரு மிகச்சிறந்த அனுபவம்”

“இன்சூரன்ஸ் என்பது எதிர்கால பாதுகாப்பிற்கானது என்ற அடிப்படையை அது வெறும் முதலீடு என்ற அளவில் மாற்றியது தனியார் கம்பெனிகளின் வருகைதான்”

தோழர் சவுந்தரராஜன் அவர்கள் குறிப்பிட்டது போல இந்தீய ஆட்சியாளர்கள் “இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட அன்னியப் பொருட்கள்தான்”. அரசியல் நீக்கப்பட்ட சமூகமாக ஒரு புதிய தலைமுறை உருவாக்கப்படுகிறது”

நாம் நமது எண்ணங்களை ஒத்த கருத்துக்களை உடையவர்களோடே பேசிக்கொண்டு இருக்கிறோம். அதைத் தாண்டி மக்களோடு பேச வேண்டும். அரசு நிறுவனங்கள் மீது மோசமான பார்வை உருவாக்கப்படுகிறது. அதை மாற்ற வேண்டும். எல்.ஐ.சி போன்ற பணிக் கலாச்சாரம் எல்லா இடங்களிலும் தேவைப்படுகிறது.

இந்த சமூகத்திற்கு நாம் என்ன செய்துள்ளோம் என்ற கேள்வியை ஒவ்வொருவரும் தனக்குள் எழுப்பிக் கொள்ள வேண்டும் என்று மக்களை அரசியல் படுத்துவதுதான் இன்றைக்குள்ள முக்கியமான பணி “

தோழர் கே.சுவாமிநாதன்,
பொதுச்செயலாளர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு


 “இந்திய உழைப்பாளி மக்களிடம் நமது செய்தியை எடுத்துச் சென்றதன் மூலமும் ஊடகங்கள் உதவியாலும் அன்னிய மூலதனத்தை அதிகரிப்பதற்கு நம்மால் தடைகளை உருவாக்க முடிந்துள்ளது. இன்சூரன்ஸ் சீர்திருத்தம் தொடங்கி கறுப்புப் பண மீட்பு வரை காங்கிரஸ். பாஜக ஆகிய இரு கட்சிகளுமே ஒரே பொய்யை சொல்லிக் கொண்டிருக்கின்றன. நூறு கோடி ரூபாய் மூலதனம் உள்ள எல்.ஐ.சி திரட்டக் கூடிய பிரிமியத்தின் சிறு பகுதியைக் கூட ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மூலதனம் உள்ள தனியார் கம்பெனிகள் பெற முடிவதில்லை. இது மூலதனத்தை விட மூலதனத்தின் நோக்கம்தான் முக்கியம் என்று ஐ.ஆர்.டி.ஏ வின் தலைவர் திரு டி.எஸ்.விஜயன் சொன்னது சரியென்பதை நிரூபிக்கிறது. ஜாகுவார் கார் தயாரிக்க சீனாவில் 10.700 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிகிற டாடாவால் தனது இன்சூரன்ஸ் கம்பெனிக்கு 300 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடியாதா? டாடா என்றில்லை தமிழகத்தின் ஜெயவிலாஸ் நிறுவனம் தனது டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலையை 240 கோடி ரூபாய் முதலீட்டில் அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் திறந்துள்ளது. ஆக அன்னிய மூலதனம் என்பது அவசியமற்றது.

49 % என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் காவு கேட்பார்கள். ராமாயணத்தில் தசரதனிடம் பரதன் நாடாள வேண்டும் என்று வரம் கேட்கிற கைகேயி ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என்றும் வரம் கேட்பாள். ஏனென்றால் ராமன் நாட்டிலிருந்தால் பரதன் நாடாள முடியாது என்று அவளுக்கு தெரியும். அது போல பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தால் தங்கள் தொழில் செய்ய முடியாது என்று பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தெரியும். எனவே இன்சூரன்ஸ்துறையை சீரழிக்கும் முயற்சிகளுக்கு எதிராக நாம் உறுதியோடு போராடுவோம்.


மேலும் சில மாநாட்டுப் புகைப்படங்கள்








1 comment:

  1. நாம் நமது எண்ணங்களை ஒத்த கருத்துக்களை உடையவர்களோடே பேசிக்கொண்டு இருக்கிறோம். அதைத் தாண்டி மக்களோடு பேச வேண்டும். அரசு நிறுவனங்கள் மீது மோசமான பார்வை உருவாக்கப்படுகிறது. அதை மாற்ற வேண்டும்.

    ReplyDelete