Thursday, December 18, 2014

மிரட்டுவது யார் மோடிஜி?






இன்சூரன்ஸ்துறையில் அன்னிய மூலதன வரம்பை உயர்த்தவும் பொதுத்துறை  பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்குகளை விற்கவும் வழி வகை செய்யும் இன்சூரன்ஸ் சட்ட (திருத்த) மசோதா 2008 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டால் உடனடியாக மறுநாளே எங்களின் எதிர்ப்பை பதிவு செய்கிற விதத்தில் ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்வது என்று எங்களது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

தேசத்துரோகம் செய்கிற மத்தியரசின் முயற்சியைக் கண்டித்து சட்டபூர்வமான எதிர்ப்பை பதிவு செய்வதை மிரட்டல் என்று வர்ணிக்கிறது  மோடியின்  அரசு. 

யார் செய்வது மிரட்டல்?

காவல்துறையை அழையுங்கள் என்று நிர்வாகத்திற்கு உத்தரவு போடுகிற மத்திய அரசா அல்லது அமைதியாக இயக்கங்களை அதே நேரம் அழுத்தமாக மக்களிடம் எடுத்துப் போகிற நாங்களா?

ஊதியத்தை வெட்டுங்கள் என்கிறார்கள். புத்திசாலி அரசு அதிகாரிகளே வேலை நிறுத்தம் செய்யும் நாளில் ஊதியம் வெட்டப்படும் என்று தெரியாமலா எங்களது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அறுபத்தி மூன்று வருடமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது?

ஒரு நாள் பாலிசிதாரர்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்று முதலைக் கண்ணீர் வடிப்பவர்களே, அவர்களின் உழைப்பிலும் வியர்வையிலும் உருவான சேமிப்பை பன்னாட்டுக் கழுகுகள் கொத்திக் கொண்டு போக அனுமதிக்கிறீர்களே, ஏன் இப்படி நாடகமாடுகிறீர்கள்? நாடாளுமன்றமே வராமல் அதற்கான அலவன்ஸ் வாங்கும் பிரதமரெல்லாம் வேலை செய்யாவிட்டால் ஊதியம் கிடையாது என்று உபதேசம் செய்ய வந்து விட்டார்கள்.

மிஸ்டர் மோடி, இந்த மிரட்டலுக்கெல்லாம்  பயப்படுகிற சங்கம் நாங்கள் அல்ல. நீங்கள் செய்வது தேசத் துரோகம் என்று உங்கள் முகத்தின் முன்பே சொல்லுகிற நேர்மைத்திறன் உடையவர்கள் நாங்கள். 

அவசர நிலைக் காலத்திற்கு எதிராக உறுதியோடு போராடிய சங்கம் நாங்கள். வேண்டுமானால்  உங்கள் கட்சி மூத்தவர்கள் யாராவது இருந்தால் கேட்டுப் பாருங்கள்.

உங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தூண்டுதலில் குஜராத் மாநிலத்தில் எண்பதுகளின் துவக்கத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஒரு போராட்டம் நடந்தது நினைவிருக்கிறதா? அப்போது அந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று உங்கள் அமைப்பின் குண்டர்கள் அகமதாபாத் கோட்டத்தில் எங்கள் தலைவர்களை அடித்து மிரட்டிய போது வாயில் ரத்தம் ஒழுக முடியாது என்று உறுதியாக சொன்ன பாரம்பரியம் கொண்டவர்கள் நாங்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் மிரட்டல்களை வேறு எங்காவது வைத்துக் கொள்ளுங்கள் அப்பனே, எங்களிடம் வேண்டாம்.

மோடிஜி, இன்னொரு தகவலும் உண்டு.

வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு நாங்கள் மட்டும் அறைகூவல் அளிக்கவில்லை. வளர்ச்சி அதிகாரிகள் சங்கம், முதல் நிலை அதிகாரிகள் சங்கம், மூன்றாம் பிரிவு நான்காம் பிரிவு  ஊழியர்களின் இதர சங்கங்களும் அறைகூவல் கொடுத்துள்ளனர்.

அப்படி அறைகூவல் கொடுத்தவர்களில் உங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொழிற்சங்கப் பிரிவான பி.எம்.எஸ் அமைப்போடு இணைக்கப்பட்ட அதிகாரிகள் சங்கமும் இரண்டு ஊழியர் சங்கங்களும் அடக்கம்.

உங்கள் அரசின் துரோகத்தை உங்கள் ஆட்களே எதிர்க்கிறார்கள், எங்களோடு இணைந்து.

1 comment:

  1. போராட்டம் வெல்லட்டும்
    கோரிக்கைகள் நிறைவேறட்டும்

    ReplyDelete