Monday, December 8, 2014

கிருஷ்ணன் காட்டிய வழியில் மாமல்லனா?



நேற்றைய (07.12.2014)  தீக்கதிர் இணைப்பிதழான வண்ணக்கதிர் இதழில் வெளியான எனது “அட்சயப் பாத்திரம் சிறுகதை கீழே.

எழிலான ஓவியத்தைத் தீட்டியது தோழர் ஸ்ரீரசா.




அட்சயப் பாத்திரம்
வேலூர் சுரா


அந்த சட்டமன்ற உறுபினர் அலுவலகம் அன்று பரபரப்பாக இயங்குவது போன்ற தோற்றம் காணப்பட்து. நிரம்பி வழிந்த குப்பைத் தொட்டி, சுவரெங்கும் படிந்து கிடந்த ஒட்டடை, மேஜையின் மீது இருந்த தூசிப் படலம், காம்பவுண்டின் ஓரம் மண்டிக்கிடந்த புதர்கள் இவையெல்லாம் அந்த அலுவலகம் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியிருக்கும் என்பதை சொல்லிக் கொண்டிருந்த்து

“அண்ணன் பத்து மணிக்கெல்லாம் வந்துடுவாரு. அதுக்கு முன்னாடியே தொகுதி மக்கள்  வந்து குமிஞ்சுடுவாங்க. இரண்டு பேரு காம்பவுண்டை சுத்தம் செய்யுங்க, இரண்டு பேரு உள்ளே ஆபிஸை சுத்தம் செய்யுங்க, தங்கப்பா நீ டேபிள் நாற்காலியெல்லாம் வரிசையா போட்டு வை. என்று நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டுக் கொண்டிருந்தான் பரணிதரன்.

“நல்ல வேளை நகராட்சியிலும் நம்ம கட்சியே இருக்கிறதானல ஆளுங்களை அனுப்பிச்சு வச்சாங்க. இல்லைனா கூட்டத்துக்கு கொடி கட்ட காண்ட்ராக்ட் விட்டு காசு கொடுக்கிற மாதிரி இதுக்கும் காசு கொடுக்க வேண்டியிருக்கும் என்று நிம்மதி பெருமூச்சோடு சொன்னான் துளசி. அவன் பரணிதரனுக்கு எடுபிடி.

“ஆறு மாசம் கழிச்சு அண்ணன் தொகுதிக்குள்ள வராரு. மனுக்கள் வாங்குவாருனு போஸ்டர் அடிச்சு ஊரெல்லாம் ஒட்டிட்டோம். ஜனங்க மனுவோட வருவாங்களோ இல்லை எங்கய்யா போயிட்ட இத்தனை நாளானு சண்டை போடுவாங்களோனு ஒரே டென்ஷனா இருக்கு” என்று துளசி சொல்ல “எதுவா இருந்தாலும் அண்ணன் சமாளிச்சுப்பாரு” என்று நம்பிக்கை ஊட்டினான் பரணிதரன்.

அதே நேரம் அந்த அடர்ந்த வனத்தில் அமைக்கப்பட்டிருந்த பர்ணசாலையில் யுதிஷ்டிரன் கையைப் பிசைந்து கொண்டு தவித்துக் கொண்டிருந்தான். அவனது கண்கள் தூரத்தில் ஆரவோரத்தோடு ஓடிக் கொண்டிருந்த நதியின் மீதே நிலைத்திருந்தது.

“ஆனாலும் உனக்கு இவ்வளவு அவசரம் கூடாது திரௌபதி. சூரியனிடம் வரமாகப் பெற்ற அட்சயப் பாத்திரம் இருந்தும் இப்படிப்பட்ட துர்பாக்கியம் நமக்கு வந்து விட்டது” என்று கோபமாக சொல்ல

“எனக்கு நிதானத்தை உபதேசிக்கும் தாங்கள் அன்று சூதாட்ட மண்டபத்தில் நிதானத்தை கடைபிடித்திருந்தால் நாம் இப்படி கானகத்தில் வாசம் புரியும் நிலையே வந்திருக்காதே” என்று அவளும் சூடாக பதிலுரைத்தாள்.

“அண்ணா, நமக்குள் இப்போது இந்த விவாதம் அவசியமா? தற்பொழுது எழுந்துள்ள பிரச்சினையை எப்படி எதிர்நோக்குவது என்று யோசிப்போம்” என்றான் அர்ஜூனன்.

“நாம் யோசித்து முடிவெடுப்பதற்குள் நதிக்கரையில் தனது சீடர்களோடு நீராடச் சென்றுள்ள துர்வாச முனிவர் வந்து விடுவார். ஒரு மாபெரும் விருந்தை எதிர்நோக்கி வரும் அந்த கோபக்கார முனிவரை நாம் பட்டினி போட்டால் நம்மை சபிக்காமல் விட மாட்டார். அனைத்தையும் இழந்து நாம் எங்கேயோ கானகத்தில் யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்தாலும் யாசகம் பெற எப்படியோ தேடி வந்து விடுகின்றனர்” என்றான் பீமன்.

அப்போதுதான் கட்சிக் கொடி முன்னே பறக்க புத்தம்புது எண்டவர் வாகனம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு வந்து நின்றது. டிரைவர் வேகமாக இறங்கி கார் கதவைத் திறக்க நிதானமாக இறங்கினார் மாமல்லன். பளிச்சிடும் வெள்ளையில் வேட்டி, சட்டை மின்ன கழுத்தை கட்சிக் கொடியின் நிறத்தில் ஒரு துண்டு சுற்றியிருக்க காத்திருந்த மக்களை கண்கள் அளவெடுக்க கைகளைக் கூப்பிக் கொண்டே அலுவலகத்திற்குள் நுழைந்தார். வலது கையில் அவரது கட்சித்தலைவர் படம் போட்ட பெரிய மோதிரம் கண்ணைக் கவர ஒரு வைர மோதிரமும் ஒரு நவரத்தின மோதிரமும்  இடது கையில் பிரகாசித்தது. அறையில் சுழலும் நாற்காலியில் அமர்ந்து “துளசி, அந்த டி.வி யைப் போடு என்று உத்தரவிட்டார்.

“அண்ணே, தொகுதி மக்களெல்லாம் காத்துக்கிட்டு இருக்காங்க, ஒவ்வொத்தரா மனு கொடுக்க உள்ளே அனுப்பவா? என்று பவ்யமாக பரணிதரன் கேட்க “பத்திரிக்கை, டி.விக்காரங்க வந்துட்டாங்களானு பாருய்யா, இல்லைனா மனு வாங்கி என்ன பிரயோசனம், சொல்லு என்று பதில் சொன்ன மாமல்லனின் கண்கள் தொலைக்காட்சியையே நோக்கியிருந்த்து.

சரி, சரி வரச்சொல்லு, சீக்கிரமா முடிச்சுட்டு போகலாம். மச்சான் பசங்க காதுகுத்துக்கு பனிரெண்டு மணிக்குள்ள போகனும். அதுக்காகத்தானே இந்த ஊருக்கு வந்தேன். கையில் மனுக்களோடும் மனசுக்குள் நம்பிக்கையோடும் தொகுதி மக்கள் உள்ளே வரத் தொடங்கினார்கள். முதியோர் பென்ஷன், விதவை பென்ஷன், ரேஷன் அட்டை, சாலை வசதி, குடிநீர் வசதி என்று விதம் விதமான கோரிக்கைகளோடு தங்கள் முறை வரும் வரை காத்திருந்தார்கள்.

பர்ணசாலைக்கு வெளியே பதட்ட்த்தோடு காத்திருந்த யுதிஷ்டிரனும் தம்பி சகாதேவனை அழைத்து நதிக்கரைக்குச் சென்று துர்வாசரும் அவரது சீடர்களும் என்ன செய்கிறார் என்று பார்த்து வரும்படி பணித்தான். அவர்கள் தங்கள் அன்றாட அனுஷ்டானங்களை முடித்து விட்டு நமது பர்ணசாலைக்கு புறப்பட்டால் ஏதாவது பேசிக் கொண்டு அவர்கள் வரவை தாமதப் படுத்து என்றும் உத்தரவிட்டான்.

“சே, இந்த வரமளிக்கும் தேவதைகளே மோசமானவர்கள். வரத்தோடு ஒரு நிபந்தனையையும் இணைத்து நமக்கு சிக்கல்களை உருவாக்கி விடுகிறார்கள்” என்று நகுலன் சொன்னான். சூர்ய தேவன் அட்சயப்பாத்திரத்தை அளிக்கும் போது சொன்ன நிபந்தனைதான் இன்று துர்வாச முனிவரிடம் இவர்களை சிக்க வைத்துள்ளது.

சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்து வனத்திற்கு வந்த பாண்டவர்கள் உணவிற்கு என்ன செய்வது என்று முழித்தார்கள். “பீமா, நீதான் சமையல் கலையில் விற்பன்னன் ஆயிற்றே, நீயே தினசரி அப்பணியை ஏற்றுக் கொள்” என்ற போது பீமன் மறுத்து விட்டான். “அரண்மனையில் ஏராளமான பணியாளர்கள் இருப்பார்கள். நான் அளவும் ஆலோசனையும் மட்டுமே அளிப்பேன். எனக்கு உதவ யார் இங்கே முன்வருவார்கள்?” என்று கேட்ட போது இதர பாண்டவர்களும் திரௌபதியும் பீமன் சொன்னது காதில் விழாதது போல முகத்தை எங்கோ திருப்பிக் கொண்டார்கள்.

வேறு வழியின்றி யுதிஷ்டிரன் சூரியனை நோக்கி தவம் இருந்து பெற்றது அட்சயப் பாத்திரம். எத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்கு அறுசுவை படைக்கும் வல்லமை கொண்டது. அதை அளிக்கும் போதே சூர்ய தேவனின் முகத்தில் ஒரு ஏளனம் தெரிந்தது. “இத்தனை வருடங்களாக அரண்மனையில் சுகபோக வாழ்வை அனுபவித்த உங்களால் ஒரு வேளை உணவு கூட தயார் செய்ய முடியவில்லையே, உங்களுக்கெல்லாம் உழைப்பின் அருமை எங்கே தெரியப் போகிறது? என்று கேட்டு விட்டு அட்சயப் பாத்திரத்தை அளித்தான். ஒவ்வொரு நாளும் அதனை கழுவி விட்டால் அதன் பின்பு மறுநாள்தான் அது தன் சக்தியை வெளிப்படுத்தும் என்பது சூரியன் சொன்ன ஒரு ஷரத்து.

அதுதான் இன்றைக்கு வில்லங்கத்தை கூட்டி வந்திருக்கிறது. வழக்கம் போல பீமன் சாப்பிட்டுக் கொண்டே இருக்க அவனுக்கு பரிமாற முடியாமல் களைப்பாகி அட்சயப் பாத்திரத்தை கழுவி வைத்து விட்டாள். அந்த நேரம் பார்த்து துர்வாசரும் தன் பரிவாரங்களுடன் விருந்து சாப்பிட வந்து விட்டார். “அப்படி என்ன களைப்பு உனக்கு? என யுதிஷ்டிரன் திரௌபதியை கடிந்து கொண்ட நேரத்தில்

‘முடிஞ்சுதாய்யா? இன்னும் யாராவது இருக்காங்களா? ஒரே களைப்பா இருக்கு என்று மாமல்லனும் கேட்டார். “இல்லைங்கண்ணா, எல்லோரும் போயிட்டாங்க. இந்த தொகுதி நிதி ஒதுக்கிற பைல மட்டும் நீங்க பாத்து கையெழுத்து போட்டா கிளம்பிடலாம்” என்றான் பரணிதரன்.

“சரி, பக்கத்து ஹோட்டல்லேந்து நல்லதா காபி வாங்கிட்டு வரச் சொல்லு” என்று உத்தரவு போட்ட மாமல்லன் ஒரு சிகரெட்டையும் பற்ற வைத்து ஊதிக் கொண்டே

‘எவ்வளவு ரூபாய் மீதி இருக்கு சொல்லு” என்று கேட்டார்.

“போன வருஷ நிதி ஒரு கோடி ரூபாய், இந்த வருஷ நிதி ரெண்டு கோடி ரூபாய்”

நமக்கு வந்த மனுக்களை வச்சு போர் வெல் போடறது, ரோடு போடறது. அரசு பள்ளிகளுக்கு சுற்றுச் சுவர் கட்டறது அப்படினு ஒரு லிஸ்ட் தயார் வச்சுருக்கோம்”  என்று பரணிதரன் சொல்ல மாமல்லன் இடை மறித்தார்.

“ஊருக்கு வெளியே புதுசா லே அவுட் போட்டிருக்கோமே, அந்த இடத்துல ரோடு போடுவோம். அங்க நாலு போர் போடுவோம். அந்த ஏரியாவுல கால்வாயும் கட்டிடலாம். அதுக்கு மேல காசு நின்னா ஏதாவது ஒன்னு ரெண்டு வேலை செஞ்சுக்கலாம்”

அவருக்கு என்ன பதில் சொல்வது என்று பரணிதரன் யோசித்தான்.

என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த திரௌபதி முகத்தில் திடீரென ஒரு பிரகாசம் தென்பட்டது. “ஆபத்பாந்தவா, எங்கள் நிலைமையை உணர்ந்து சரியான நேரத்தில் வந்தாயே” என்று கிருஷ்ணனை வரவேற்றாள். யுதிஷ்டிரன் தங்களது பிரச்சினையை விளக்க அவர் அட்சயப் பாத்திரத்தை கையில் எடுத்துப் பார்த்தார். அவசரத்தில் திரௌபதி அட்சயப்பாத்திரத்தை சரியாக கழுவாமல் இருக்க அதில் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு பருக்கை சோற்றையும் ஒரு துண்டு கீரையையும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.

‘அர்ஜூனா, நீ போய் இப்போது துர்வாசரை அழைத்து வா” என்று உத்தரவிட சகாதேவன் ஓட்டமும் நடையுமாக அங்கு வந்து சேர்ந்தான். “அண்ணா, என்ன ஆனது என்று தெரியவில்லை. நதிக்கரையில் நீராடி விட்டு நமது பர்ணசாலை நோக்கி வந்த துர்வாசரும் அவரது பரிவாரமும் ‘திடீரென அவர்கள் வயிறு நிறைந்து விட்டது” என்று சொல்லி கானகத்திற்கு உள்ளே சென்று விட்டார்கள்.”

“இது எப்படி சாத்தியம்?” வியப்போடு பீமன் கேட்டான்.

“இந்த மாதிரி நம்ம வேலையையே செய்யறது சாத்தியமா, சரியாக இருக்குமா?” பரணிதரன் கேட்டான்.

“நான் சாப்பிட்டால் அது உலகமே சாப்பிட்ட மாதிரி. அதனால்தான் துர்வாசர் பசியாறி இங்கு வர அஞ்சி திரும்பி விட்டார்” கிருஷ்ணன் பதிலளித்தான்.

தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த தொடரைப் பார்த்துக் கொண்டிருந்த  மாமல்லன் கிருஷ்ணனின் பதைலைக் கேட்டு சிரித்தார்.

மகாபாரதம் தொடரின் இந்த வாரக்கதை முடிவில் “தொடரும்” என்று காட்டினார்கள்.

1 comment: