Monday, December 29, 2014

கேரட் தேங்காய் அல்வா, கடலை சுண்டல்



பால் அதிகமாக இருந்ததால் கேரட் கீர் தயாரிக்கலாம் என்று திட்டமிட்டேன். அதன் தயாரிப்பை முன்பே எழுதியுள்ளதால் மீண்டும் இங்கே எழுதவில்லை. கேரட்டை வேக வைத்து சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு அடித்ததும்தான் பாலின் அளவிற்கு மிகவும் அதிகமாக தயாரித்தது புரிந்தது. ஆகவே அந்த கலவையை வீணடிக்க வேண்டாம் என்பதற்காக மீதமிருந்த கலவையில் தேங்காயை துறுவலையும் சேர்த்து கொஞ்ச நேரம் மிக்ஸியில் ஓட விட்டு எடுத்து வைத்துக் கொண்டேன். அடுப்பில் சர்க்கரை பாகு வைத்து இந்த கலவையை போட்டு நெய் விட்டு நன்கு கிளறினால் கேரட் தேங்காய் அல்வா தயார்.

ஒரு இனிப்பும் கீரும் செய்து விட்டு காரம் இல்லையென்றால் எப்படி? அதையும் விடுவதாக இல்லை. வேர்கடலையை குக்கரில் வேக வைத்துக் கொண்டேன். ஒரு வாணலியில் எண்னெய் ஊற்றி கடுகை வெடிக்க வைத்து பாதி உளுத்தம் பருப்பை வறுத்துக் கொண்டு பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி உப்பு சேர்த்துக் கொண்ட பிறகு வேக வைத்த கடலையையும் சேர்த்து கிளறினேன். இதோடு மல்லி கடலைப் பருப்பு தூள் (எங்கள் வீட்டில் எப்போதும் தயாராக இருக்கும்) யும் சேர்த்து நன்றாக கிளறி. அதனுடைய வாசனை போன உடன் தேங்காய் துறுவலையும் தூவி ஒரு இரண்டு நிமிடம் கிளறி எடுத்தால் நிலக்கடலை சுண்டலும் தயாராகி விட்டது.


பார்ப்பதற்கு மட்டுமல்ல, சுவையும் நன்றாக இருந்தது.

பின் குறிப்பு : ஒரு தொழில் ரகசியம் சொல்கிறேன். யாருக்கும் சொல்லாதீர்கள். கேரட் தேங்காய் கேக் செய்யத்தான் முயற்சி செய்தேன். ஆனால் அது கேக்காக வரவேயில்லை. அதனால் அல்வா என்று பெயர் சூட்டி விட்டேன்.

மேலே உள்ள படம்தான் அந்த சொதப்பலுக்கான சாட்சி. இருப்பினும் விடுவதாக இல்லை. அது கேக்காக வரும் வரை விடுவதாக இல்லை. முயற்சிகள் தொடரும்.

1 comment:

  1. எப்படி காட்சியளித்தால் என்ன! செய்தது சுவையாக வந்தாலே அதுவும் வெற்றி தான்.

    ReplyDelete