Tuesday, February 3, 2015

ரயில் லேட்டா வரனுமே!

 

சரியான நேரத்திற்கு ரயில் வர வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான் உலக நியதி. அந்த நியதிக்கு நானும் மாறுபட்டவன் அல்ல. ரயில் காலதாமதமானால் கடுப்பாகிற சாமானிய மனிதனும் கூடத்தான். ஆனால் ரயில் லேட்டாக வர வேண்டுமே என்று பதைபதைப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணம் நேற்று  நேரிட்டது.

சோம்பேறித்தனமாக கிளம்பி அதனால் ரயில் தாமதமாக வர வேண்டும் என்று நினைத்தானோ என்று அவசரமாக என்னை நையாண்டி செய்யாதீர்கள். 

அப்படிப்பட்ட நிலையை உருவாக்கியதும் ரயில்வே துறைதான்.

ஆம், நிஜமாகத்தான்.

ஞாயிறு அன்று மதுரையிலிருந்து வேலூர் திரும்ப வேண்டும். நேரடி ரயில் எதுவும் இல்லை. மதுரையில் இரவு 11.40 மணிக்கு புறப்படும் பெங்களூர் எக்ஸ்பிரஸில் சேலத்திற்கு 3.30 மணிக்கு  வந்து விட்டு  அங்கே 04.15 மணிக்கு வரும் குருதேவ் எக்ஸ்பிரசில் வேலூர் வர வேண்டும்.

ஆனால் பெங்களூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டதோ 12.15 மணிக்கு. முதலில் ஏற்பட்ட 35 நிமிட தாமதத்தை சரி செய்வார்கள் என்று பார்த்தால்  அப்படியெல்லாம் ஒன்று நடக்கவே இல்லை. 3.30 மணிக்குப்பிறகு ஒவ்வொரு நிமிடமும் பதட்டமான நிமிடம்தான்.

04.10 மணிக்கு சேலம் சந்திப்பிற்கு வெளியே நிறுத்தி விட்டார்கள். வேறொரு டிரெயின் கடந்து செல்வதற்காக இந்த ரயில் நின்று விட்டது. கடந்து போனது நாங்கள் செல்ல வேண்டிய ரயிலாக இருக்குமோ என்ற சிந்தனையில் இருதயம் படபடவென்று அடித்துக் கொள்கிறது. பத்து மகளிர் தோழர்கள், அவர்களுக்கு நம் பதட்டம் தெரியாமல் வேறு நடிக்க வேண்டியிருந்தது.

கடைசியாக 3.30 மணிக்கு சேலம் வந்து சேர வேண்டிய ரயில் 04.20 மணிக்கு வந்து சேர்ந்தது. 

04.15 மணிக்கு செல்ல வேண்டிய ரயில்?

கண்ணில் பட்ட கடையில் கேட்ட முதல் கேள்வி அதுதான்.

சார் அது பதினைந்து நிமிடம் லேட்.

ஹப்பா......... நீண்ட நெடிய நிம்மதிப் பெருமூச்சை விவரிக்க கொஞ்சம் வார்த்தைகளைக் கடன் கொடுங்களேன்.

பின் குறிப்பு : அந்த ரயிலும் வந்தது. ஏறினோம். ஆனால்?????????????

நாளை பார்ப்போம் அந்த சோகக்கதையை

1 comment:

  1. ரயிலைப் பிடித்த பிறகும் ஒரு சோகக் கதை இருக்கிறதா?
    காத்திருக்கின்றேன் நண்பரே

    ReplyDelete