Tuesday, March 31, 2015

போன வருடம் போலீஸ், இந்த வருடம் நாய்கள்

 http://www.thehindu.com/multimedia/dynamic/01158/CB28--STRAY_DOGS_1158408f.jpg

வீடு திரும்ப பதினோரு மணிக்கு மேலாகும் என்றால் காலையில் அலுவலகம் செல்லும் போதே ஆட்டோவில் சென்று இரவும் ஆட்டோவில் திரும்புவேன். காரணம் தெருநாய்ப் பிரச்சினை. ஆனாலும் சில சமயம் நாம் எதிர்பாராமல் நேரமாகி விட்டால் வீடு வந்து சேரும் வரை கொஞ்சம் பதட்டமாகவே இருக்கும். வீட்டிற்கு வர மூன்று வழி உண்டு. அந்த மூன்று வழிகளிலும் பட்டா போட்டு கொடுத்தது குறைந்தது நான்கு  அல்லது ஐந்து நாய்க் கூட்டங்களாவது இருக்கும். 

நேற்று  பதிவு எழுத்தர் என்ற பணிக்கான பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வு நடந்தது.  நேர்முகத் தேர்வு முடிந்த நாளே பதவி உயர்வு முடிவுகளை வெளியிடுவது என்ற நடைமுறை உள்ளதால் அதனை அறிந்து கொள்ள சங்கப் பொறுப்பாளர்களும் ஆர்வமுள்ள சில முன்னணித் தோழர்களும் அலுவலகத்தில் இருப்பது வழக்கம்.

கடந்த வருடம் இதே பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வு 30.04.2014 அன்று முடிந்து வெளியானது. இரவு பதினோரு மணியாகி விட்டது. நாய்த் தொந்தரவில் சிக்கிக் கொள்ளப் போகிறோம் என்ற அச்சத்திலேயே வீடு  திரும்பினால் வழியில் போக்குவரத்துக் காவலர்கள் மடக்கி விட்டார்கள். 

அன்றைக்கு டாஸ்மாக் கனவான் ஒருவரின் நியாயமான கேள்வியால் இன்ஸ்பெக்டர் எரிச்சலான   சம்ப்வத்தைப் பற்றி கடந்த வருடமே பதிவு செய்திருந்தேன். அதனால் வீடு திரும்ப இன்னும் தாமதமானது. அன்று என்னமோ நாய்கள் சீக்கிரமாக தூங்கி விட்டது போல. யாரும் தொல்லை கொடுக்கவில்லை.

இரவு பத்து முப்பதிற்கு அலுவலகத்திலிருந்து புறப்பட்டேன். இந்த வருடமும் மாதக் கடைசி. ஆகவே மீண்டும் ஒரு முறை டிராபிக் போலீஸ்  மடக்கப் போகிறது என்று நினைத்தால் அவர்களின் தொல்லை இல்லை. 

மாறாக இரண்டு இடங்களில் நாய் துரத்தத் தொடங்கி விட்டது. ஒரே ஒரு நல்ல விஷயம். இரண்டு இடங்களிலும் அவர்களது தெரு முனை வந்ததும் நின்று விட்டது. எல்லை தாண்டாத பயங்கரவாதம்.

அவர்களின் தனிமையை நாம் தொந்தரவு செய்யும் போது அவர்கள் நமக்கு தொல்லையாக மாறி விடுகின்றனர்.

ஆகவே நாய்களின் நேரத்தைக் கணக்கில் கொண்டு நம்முடைய வேலைகளை நாம் திட்டமிட்டாக வேண்டும். 

எல்லா புகழும் மேனகா காந்திக்கே



1 comment:

  1. தெருநாய்ப் பிரச்சினையால் நீங்க உட்பட ஏராளமானோர் துன்பபடுறாங்க. தெருநாய்களை சுடமாட்டாங்களாம், அனுமதியில்லாமல் மரம் வெட்டிய தொழிலாளர்களை காட்டு மிராண்டிதனமாக கொன்று உள்ளார்கள்

    ReplyDelete