Saturday, April 4, 2015

வரலாறுக்கும் வர்க்கம் உண்டு - இந்து கட்டுரைக்கு மறுப்பு



 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் தீக்கதிர் நாளிதழின் பொறுப்பாசிரியருமான தோழர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள் எழுதிய முக்கியமான கட்டுரையை கொஞ்சம் முழுமையாய் படியுங்கள்.




தி இந்து (தமிழ்) நாளேட்டின் நடுப்பக்கத்தில், ஏப்ரல் 1-ஆம் தேதியன்று, தங்க.ஜெயராமன் என்பவர், “மண்ணைப் பொன்னாக்கிய பண்ணையாட்கள்” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.கிழக்குத் தஞ்சை மாவட்டத்தில், ஒருகாலத்தில் நிலவிய நிலவுடமைச் சமூக- பொருளாதார அமைப்பு குறித்து, இந்த கட்டுரையில் மேலோட்டமாக சில விவரங்கள் இடம்பெற்றுள்ளன. வரலாறு போலவும் இல்லாமல், கடந்த காலத்தைக் குறித்த சிலாகிப்புப் போலவும் இல்லாமல், இந்த கட்டுரை எழுதப்பட் டுள்ளது. என்றபோதும், கிழக்குத் தஞ்சை மாவட்டத்தில் பொதுவுடமை இயக்கம் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டம், திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது; 

அல்லது திரிக்கப்பட் டுள்ளது.கிழக்குத் தஞ்சை மாவட்டத்தில் நிலவிய ஆண்டை - பண்ணையாட்கள் முறை என்பது, பண்டைய கிரேக்க அடிமைச் சமூகத்தைப் போன்றது. ஒவ்வொரு ஆண்டைக்கும் தனித்தனியாக பண்ணையாட்கள் உண்டு. அவர்கள் நினைத்தால்கூட, அந்த அடிமைத் தனத்திலிருந்து தப்பிவிட முடியாது. ஆனால் கட்டுரையாளர், ‘பண்ணையில் நிரந்தரமாக வேலை செய்தவர்கள் பண்ணையாட்கள்; கிடைத்த இடத்தில் வேலைசெய்து, சஞ்சாயக் கூலி பெறுவதை விட பண்ணையாட்களாக இருப்பதை விரும்பிய காலமும் இருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்றையச் சூழலில், சஞ்சாயக்கூலி என்பது கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். நினைக்கிற இடத்தில் யாரும் வேலைக் குப் போய்விட முடியாது. குறிப்பிட்ட பண்ணைக்கு மட்டுமே வேலைசெய்ய முடியும். பண்ணையாட்களாக இருப்பது, விருப்பத்தின் அடிப்படையிலானது அல்ல; அதுதான் அவர்களுக்கு நிலப்பிரபு விதித்த விதி.உதாரணத்திற்கு, ஒன்றைக் கூறலாம். சிக் கல் கிராமத்தைச் சேர்ந்த என்.வீராச்சாமி என்பவர் கொடுத்துள்ள வாக்குமூலம் இது: “தாழ்த்தப்பட்ட வகுப்பச் சேர்ந்தவங்கதான் விவசாயத் தொழிலாளியா இருந்தாங்க..
தண்ணி கேட்டா சொம்புல தரமாட்டாங்க.. மரக்கால்லதான் ஊத்துவாங்க.. சோறுகூட மரக்கால்லதான் போடுவாங்க.. குழம்பு கொட்டாங்கச்சியில தான் ஊத்துவாங்க.. மிராசுதாரு பண்ணைய ஒட்டி கொட்டாயிய போட்டுக்கிட்டு, அங்ககுடியிருந்துக்கிட்டு, நிலத்துக்கு பாதுகாப்பா இருக்கணும்; பண்ணையில சேரும்போது ‘சுகந்தை’ அடமானமா 50 ரூபா, 40 ரூபா கொடுப்பாங்க.. இவன் ‘சுகந்தை’ பணத்தை வாங்கிக் கிட்டு, குடும்பம் பூரா வேலை பார்க் கணும்; அப்பன் வாங்கினால், பொண்டாட்டி, புள்ளயெல்லாம் வேலை பார்க்கணும்; புள்ளங்க பள்ளிக்கூடம் போக முடியாது; 

ஆம்பளப் புள்ளன்னா மாடு மேய்க்கணும், பொம் பளப் புள்ளன்னா சாணி அள்ளணும், பிள் ளைக வளர்ந்துட்டா கொந்தனார் வேல, அது இதுன்னு வெளிவேலக்கி போகக்கூடாது; அடிமையா இருக்கணும்”.இது பண்ணை அடிமையாக இருந்த ஒருவரின் அனுபவம். இதுதான் உண்மை. பண்ணையடிமையாக இருப்பது, விருப்பத்தின்பாற் பட்டது அன்று. இவர், இன்ன பண்ணையைச் சேர்ந்தவர் என்று சூடு வைப்பது கூட உண்டு.ஒருவேளை அவர் தப்பித்துச் சென்றுவிட் டால், இந்த சூடு அடையாளத்தை வைத்தேபிடித்து விடுவார்கள். 

ஆனால், கட்டுரையாளர் நிரந்தரக் கூலி கிடைக்கும் என்பதால், விருப் பத்தின் அடிப்படையிலும் பண்ணையாளாக இருந்தார்கள் என்று எழுதியிருப்பது அபத்த மானது.“ஆள், ஆண்டை என்ற சொற்கள் ஏற்றத்தாழ்வு சமுதாயத்தைக் கட்டமைத்தவை. இவற்றின் இடத்தை விவசாயத் தொழிலாளி, விவசாயி என்பவை வென்று கைப்பற்றின. இவற்றின் விளைவாக ஏற்றத்தாழ்வின் அடையாளமாக ஆள்- ஆண்டை என்பது மறைந்து,வேலை - சம்பளம் என்ற இதர சிக்கல்கள் அற்றபுதிய சமன்பாடு வந்தது;

வரலாற்றின் போக்கே சொற்களின் போக்கும் வரத்தும் தானே!”ஆள் - ஆண்டை என்பது மறைந்து, வேலை- சம்பளம் என்று உருவானது, வெறும் சொற்களின் போக்குவரத்து அன்று. இந்த புதிய சமன்பாட்டை உருவாக்குவதற்கு, கீழத்தஞ்சை மண்ணில், செங்கொடி இயக்கம் நடத்திய அயர்வற்ற போராட்டம் ஒரு வீரகாவியம். நிலப்பிர புக்களின் குண்டர்களால் கொல்லப்பட்ட சிக்கல் பக்கிரிசாமி போன்ற தியாகிகளின் ரத்த தால்தான், கட்டுரையாளர் கூறுகிற சிக்கல் கள் அற்ற புதிய சமன்பாடு உருவானது. இதுகுறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், ஏதோ காலமாற்றத்தில் வார்த்தைகள் மாறிவிட்டது போல, எழுதிச்செல்கிறார் தங்க.ஜெயராமன். இவை வார்த்தை மாற்றமல்ல, 

வர்க்கப் போராட்டத்தையும், சமூகநீதிப் போராட்டத் தையும் இணைத்து நடத்தியதால் ஏற்பட்ட வாழ்க்கை மாற்றம். “1952ல் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் வந்தது; அதற்கு முன்பு மாயவரம் ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது; அதற்கு முன்பிருந்தே அரசாங்கம் அக்கறை காட்டி, சில ஒப்பந்தங்களை உருவாக்கியிருந்தன; பண்ணை யாட்களுக்கு வேலை கொடுக்காமல் நிறுத்திவிட்டால், பண்ணை நஷ்டஈடு தரவேண்டும் என்பது, 1952-ம் வருடத்து சட்டம்; இதன்பிறகு பண்ணையாள் ஏற்பாடு சட்டென்று மறைந்து போனது” என்று வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று வரலாறு குறித்த எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் கட்டுரையாளர் எழுதியுள்ளார்.1952 சட்டம், அதற்கு முன்பு மாயவரம் ஒப்பந்தம் என்று கட்டுரையாளர் வரலாற்றை வசதி யாக சுருக்கிவிட்டார். 

1936-ஆம் ஆண்டில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், 1943-ஆம் ஆண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உதயமானது. தமிழகத்தில் விவசாயிகள் இயக்கத்தை கட்டுவதற்கு, தோழர் நெடுங்காடி ராமச்சந்திரன் மத்தியத் தலைமையிலிருந்து வந்து வழிகாட்டினார். விவசாயிகள் சங்கத்தின் முடிவுக்கேற்ப, தோழர் பி.சீனிவாசராவ், கிழக்குத் தஞ்சைப் பகுதிக்கு பணியாற்ற வந்த பிறகுதான், வரலாற்றில் பெரும் மாற்றம் ஏற்படத் துவங்கியது.

மன்னார்குடி அருகே உள்ள தென் பரை கிராமத்தில் விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்டு, உத்திராபதி மடத்திற்குச் சொந்தமான நிலத்தின் குத்தகைதாரர்களுக்கு மூன்றில் ஒன்று; அதாவது 33 வாரம் தரவேண்டும் என்றுகோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதுவரை குத்தகைதாரர்கள் 18 வாரம்தான் பெற்று வந் தார்கள். விவசாயிகள் சங்கத்தின் செயலாள ராக தேர்வுசெய்யப்பட்ட தென்பரையைச் சேர்ந்த வீராச்சாமியிடம் இருந்த 3 ஏக்கர் குத்தகை நிலத்தை, மடம் பறித்துக் கொண்டது. 

கீழத்தஞ்சை மாவட்ட வரலாற்றில் மறக்கமுடியாத அத்தியாயம், 1944-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தம். களப்பால் கிராமத்தில் நடத் தப்பட்ட கூட்டத்தில் விவசாயிகள் சங்கத் தின் பிரதிநிதிகளாக களப்பால் குப்பு, சேரன்குளம் ஆர்.அமிர்தலிங்கம், வாலி ஓடைகி.இராஜகோபால் ஆகியோர் கலந்துகொண் டனர். மிராசுதார்கள் தரப்பில் வடபாதிமங்கலம் வி.எஸ்.தியாகராஜ முதலியார், திருக்களார் மடாதிபதி, காருவாக்குடி நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த மகாதேவன் என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் இது.

செங்கொடி விவசாயிகள் சங்கம்நடத்திய தொடர் போராட்டத்தின் வெப்ப வீச்சு காரணமாகவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதே அன்றி, மிராசுதார்களின் நல்லெண் ணம் காரணமாகவோ, அரசாங்கத்தின் முன்முயற்சி காரணமாகவோ அல்ல; இந்த கூட்டத்தில் ஏற்பட்ட உடன்பாட்டின் அம்சங்களே, அதற்கு முன்பு நிலவிய கொடுமையான சூழலை விவரிக்கும். 1. சாட்டையால் அடிப்பதும், சாணிப்பால் குடிக்கச் செய்வதும் நிறுத்தப்பட வேண்டும்; 2. பண்ணையாளுக்கு தினக்கூலியாக இரண்டு சின்னப்படி (2 லிட்டர்) நெல் வழங்க வேண்டும்; 3. அறுவடையில் ஒரு கலத்திற்கு, மூன்று சின்னப்படி கூலியும், மேக்கூலியாக ஒரு நாளைக்கு நான்கு சின்னப்படியும் தர வேண்டும்; 

4. குத்தகை விவசாயிகள் அவரவர் களத்தில் கதிரடிக்கலாம் (அதுவரை குத்தகைதாரர் சாகுபடி செய்திருந்ததை, அறுவடை செய்து, பண்ணையாரின் களம்எங்கிருக்கிறதோ, அங்கு கொண்டு வந்துதான் கண்டுமுதல் செய்ய வேண்டும் என இருந்தது ).பண்ணையாட்களை சாட்டையால் அடிக்கக்கூடாது; வாயில் சாணியைக் கரைத்து ஊற்றக்கூடாது என்பதற்கே ஒரு உடன்பாடு வரவேண்டியது இருந்தது. அப்படியென்றால், இத்தகைய இழிசெயல்களெல்லாம் ஆண்டைகள்- மடாதிபதிகள் போன்றவர்களால் தங்களது உரிமை என்று கருதப்பட்டு வந்த காலமது.இந்த உடன்பாட்டில் விவசாயிகள் சங்கம் சார்பில் கையெழுத்திட்ட பெருமை தியாகி களப்பால் குப்புவுக்கு உண்டு.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, 1948-ஆம் ஆண்டு முதல் 1951- ஆம் ஆண்டு வரைதமிழகத்தில் நான்காண்டு காலம், 144 தடையுத்தரவு இருந்தது. குறிப்பாக கிழக்குத் தஞ்சை மாவட்டத்தில் செங்கொடி இயக்கம்தடை செய்யப்பட்ட இயக்கமாக - சட்ட விரோத இயக்கமாக அறிவிக்கப்பட்டது. யாராவது சிவப்புத் துண்டு போட்டிருந்தால் கூட, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார்கள். அந்த அடக்குமுறைக் காலத்தில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாவீரன் களப்பால் குப்பு, தனது 35-ஆவது வயதில் 1948-ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று விஷம் கொடுத்து கொல்லப்பட்டார். கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ள மயிலாடு துறை ஒப்பந்தம் என்பது, செங்கொடி சங்கத் திற்குப் போட்டியாக, அரசாங்கம் உருவாக்கிய பினாமி சங்கத்தினால் செய்யப்பட்ட ஒன்றாகும். 

அதுதான் மாயவரம் ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. செங்கொடி சங்கத்தின் செல்வாக்கை குலைப்பதற்காகவே, சிலஅற்ப சலுகைகளுடன் இந்த உடன்பாடு ஏற்படுத் தப்பட்டது. இதை ஞாபகமாக குறிப்பிடும் கட்டுரையாளர், களப்பால் உடன்பாட்டை திட்டமிட்டு மறைப்பது ஏன்?மாயவரம் ஒப்பந்தத்திற்குப் பிறகும் பல்வேறு உடன்பாடுகள் எட்டப்பட்டு உள்ளன. ஒவ்வொரு ஒப்பந்தத்திற்குப் பிறகும், மிகப்பெரிய போராட்ட வரலாறு உள்ளது. உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்லலாம்.
திருத்துறைப்பூண்டி தோழர் வேதையன் வாய்மொழியாக இதைக் கேட்பது பொருத்தமாக இருக்கும். “அப்போ விவசாயத் தொழிலாளிக்கு கூலி நிர்ணயம் செய்ய மன்னார்குடி ஒப்பந்தம் ஏற்பட்டது; காலைல 6 மணியில இருந்து ராத்திரி 6 மணி வரை பேசியதில இருந்து, ஒன்றரைப்படி என்று முடிவாச்சு; ஆனா மிராசுதார்கள் யாரும் அதைஏத்துக்கல; ஆண்களுக்கு மட்டும் கூலிய ஏத்தித்தர்றோம்.. பெண்களுக்கு முடியாதுனுட் டான்.. அந்த ஒப்பந்தப்படி அமல்படுத்தச் சொல்லி, நீடாமங்கலம் டி.பி.யில முத்தரப்புக் கூட்டம் நடந்துச்சு.. அதுல விவசாய மந்திரி பாஷ்யம் வந்து கலந்துகிட்டாரு.. 

நம்ம ஜனங்க 2 ஆயிரம் 3 ஆயிரம் பேரு கூடிட்டாங்க.. மிராசுதார்களும் வந்திருந்தாங்க.. வந்து ஒப்பந்தத்த அமல்படுத்த முடியாதுனுட்டாங்க.. உடனே மந்திரி பாஷ்யம், மிராசுதார்கள் ஒத்துக்க மாட்டேனுட்டாங்க.. என்ன செய்யிறதுன்னு பி.எஸ்.ஆர தனியா கூப்பிட்டு கேட்டார்.. ‘ஏற்கெனவே கையெழுத்தான ஒப்பந்தத்த அமல்படுத்த முடியலன்னா நீ எதுக்கு?’ அப்படின்னு பி.எஸ்.ஆர். கேட்டார். உடனே மந்திரிக்கு கோபம் வந்திட்டு..’மிஸ்டர் பி.எஸ்.ஆர். நான் யாருன்னு தெரியுமா?’ என்று கேட்டார். 

உடனே ‘தெரியும் மிஸ்டர்.. நீங்க மினிஸ்டர் பாஷ்யம்‘ அப்படின்னார் பி.எஸ்.ஆர். உடனே ‘நான் நினைச்சா எட்டுமணி நேரத்துல மெட்ராஸ்ல இருந்து படைய கொண்டுவர முடியும்’ அப்படின்னார்; அதுக்கு பி.எஸ்.ஆர்.‘நான் இப்ப புரட்சின்னு சொன்னாப் போதும்,அரைமணி நேரத்துல லட்சம் பேரு குவிஞ்சுரு வாங்க.. பாக்குறீங்களா..?’ அப்படின்னார். மந்திரி கோவிச்சுக்கிட்டு போய்ட்டார்”.ஒப்பந்தம் போட மட்டுமல்ல; அந்த ஒப்பந்தங்களை நடைமுறைக்குக் கொண்டுவரவும் மிகப்பெரிய போராட்டங்களை செங்கொடி இயக்கம் நடத்த வேண்டியதிருந்தது. கீழத்தஞ்சையில் நடந்து வந்த அக்கிரமங்கள், சட்டத்தால் மறையவில்லை. 

செங்கொடி இயக்கம் சிந்திய ரத்தத்தால் மறைந்தது. வாட்டாகுடி இரணியன், ஜாம்பவானோடை சிவராமன், ஆம்பலப்பட்டு ஆறுமுகம் உள்ளிட்ட எண்ணற்ற தியாகிகள் இந்த மகத்தான போராட்டத்திற்காக தங்கள் உடலை உரமாக்கி இருக்கிறார்கள்; உயிரை ஒப்பந்தங்களில் மைத்துளியாக்கி இருக்கிறார்கள். ஆனால் கட்டுரையாளர், பண்ணையாட்கள் அனுபவித்த விலங்கினும் கீழான வாழ்க்கையை மறைத்துவிட்டு, இவர்கள் மண்வெட்டியை எடுத்து வெட்டினால், மண்ணைக் கொஞ்சுவது போல இருக்கும்.

ஒருகோட்டு சேற்றை எடுத்து, மடைவாயில் வைத்தால், மடை கனகச்சிதமாக இருக்கும். வயதானாலும் வீட்டில் இருக்காமல் நாற்றுப்பறிக்கும், அறுவடைக்கும் சென்று விடுவார்கள் என்றெல்லாம், சிலாகிக்கிறார். காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பேவயலில் இறங்கிவிட வேண்டும். சூரியன்மறைந்த பிறகுதான் கரையேற முடியும். அதிகாலையில் வயலுக்குச் செல்வதை தூங்கிக் கொண்டிருக்கும் ஆண்டைக்குத் தெரிய வைப்பதற்காக “புலருங்கால்” என்று சத்தமிட்டுவிட்டுச் செல்ல வேண்டும். நோய்வந்தோ, முதுமையின் காரணமாகவோ வேலைக்குச் செல்லவில்லை என்றால், மாடுகளைக் கட்டும் தொழுவத்தில் கட்டிவைத்து விடுவார்கள். திருக்கைவாலால் பின்னப்பட்ட சாட்டையால் அடி விழும். முதுகுத்தோல் உரிந்து ரத்தம் வந்துவிடும். அதற்குக்கூட மருத்துவம் கிடையாது; சாம்பலை எடுத்துப் பூசிக் கொள்ள வேண்டியதுதான். மாட்டுச் சாணத்தை எடுத்து, கரைத்து வாயில்ஊற்றுவார்கள் ஆண்டைகளின் அடியாட்கள்.பண்ணையாட்கள் மண்ணை பொன்னாக்கிய தாக சிலிர்த்துக் கொள்கிறார் கட்டுரையாளர். ஆனால், செங்கொடி இயக்கத்தின் போராட்டத்திற்கு முன்புவரை, அவர்களது உடலும் வாழ்க்கையும் ஆறாத புண்ணாகவே இருந்தது. பெண்களுக்கு பிரசவம் நடந்தால் கூட, அடுத்தநாளே வேலைக்குப் போய்விட வேண்டும். குழந்தைக்கு பால் ஊறினால்கூட, வயலிலிருந்து கரையேறி பால் கொடுக்க முடியாது. வலிதாங்க முடியாமல் வயலுக்கு உள்ளேயே முலைப்பாலை பீய்ச்சிவிட வேண்டும். அன்றைக்கு கீழத்தஞ்சையில் பயிர்கள் வளர்ந்தது; காவிரித் தண்ணீரால் மட்டுமல்ல; பண்ணையடிமைகளாக இருந்த தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களின் தாய்ப்பாலையும் குடித்துத்தான் பயிர்கள் விளைந்தன. ஆண்கள் தோளில் துண்டு போடுவதற் கும், பெண்கள் சேலையை கணுக்கால்வரை இறக்கி விடுவதற்கும் கூட, செங்கொடி இயக்கம் மிகப்பெரிய போராட்டங்களை நடத்த வேண்டியது இருந்தது.

 “முழங்கால் வரை இருந்த சேலையை, கணுக்கால் வரை இறக்கிவிட்டது யாரு, பி.சீனிவாசராவ் என்றே கூறு” என்ற பெண்களின் நடவுப்பாடலில் இருக்கிறது, கீழத்தஞ்சை மாவட்டத்தின் அழுக்குப் படித்த வரலாறு. இரட்டைக்குவளை முறையைக் கூட கட்டுரையாளர் போகிற போக்கில், சிலாகித்தே எழுதியுள்ளார். இந்தக் கொடுமையை அனுபவித்து இருந்தாலோ, அல்லது அனுபவித்தவரின் சந்ததியாக இருந்தாலோ; அல்லது அவர்களுக்காக போராடி இருந்தாலோதான் அந்த வலி தெரி யும். வெறும் வரிகளில் அடங்கி விடுவதல்ல இந்த வாழ்க்கை.கீழத்தஞ்சை மாவட்டத்தில் நிலவிய நிலவுடமைச் சமூகத்தின் உச்சகட்ட கொடுமைதான் வெண்மணியில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 44 தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட கொடூரமாகும். இதுகுறித்து ஒரு வரிகூட எழுதாமல்தான், கீழத்தஞ்சையைப் பற்றி எழுதியுள்ளார், இந்த மெத்தப் படித்த பேராசிரியர்.

இந்திரா பார்த்தசாரதி என்ற பேராசிரியர் வெண்மணி வரலாற்றை எழுதுவதாக கூறிக்கொண்டு, கோபாலகிருஷ்ண நாயுடு 44 பேரை எரித்துக்கொன்றதற்குக் காரணம், குழந்தை இல்லாத அவருடைய உளவியல் சிக்கல்தான் என்று உளறிக்கொட்டியிருந்தார். வெண்மணிக் கொடுமை நிகழ்ந்தபோது 44 பேர் சாவு என்று ஒற்றைக்கால செய்தி போட்ட நாளேடுகள் உண்டு. அதன் தொடர்ச்சிதான் இந்த பேராசிரியர். இவர், உமர்கயாமின் ‘ரூபாயத்’ நூலை, தமிழில் மொழிபெயர்த்துள்ளாராம். வரலாற்றை எழுதுகிறேன் என்கிற பெயரில், எதையாவது எழுதி, உண்மையான வரலாற்றைக் கொச்சைப்படுத்துவதை விட, இவர் மொழிபெயர்ப்பில் தொடர்ந்து ஈடுபடுவதே பொருத்தமாக இருக்கும். இவரது ரசனைக்கேற்ற புத்தகங்களை வேண்டுமானால், நாம்மொழி பெயர்ப்புக்கு சிபாரிசு செய்யலாம்.ஆதாரம்: விவசாய இயக்கத்தின் வீர வரலாறு- கோ.வீரய்யன் தென்பரை முதல் வெண்மணி வரை தொகுப்பு: அப்பணசாமி

நன்றி - தீக்கதிர் 04.04.2015

1 comment:

  1. நம்ம மக்களெல்லாம் சீரியலில் பிஸி.

    ReplyDelete