Tuesday, May 19, 2015

மருத்துவமனைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

 Aruna Shanbaug

இன்றைய நாளிதழில் பார்த்த செய்தி அது. 

மனதை கனமாக்கியது அந்த மரணச் செய்தி. மனதை நெகிழ வைத்தது அந்த மரணத்தின் பின்னணிச் செய்தி.

நாற்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கொடூரம் அது. நாற்பத்தி மூன்று ஆண்டுகளாக தொடர்ந்த துயரத்திற்கு மரணம் முற்றுப் புள்ளி வைத்தது.

நோயாளிகளுக்கு பணிவிடை செய்யும் புனிதப் பணியில் இணைந்த அந்த பெண்ணை, சகோதரி என்றே அனைவராலும் விளிக்கப்படும் அந்த பெண்ணை, அருணா என்ற பெயருடைய பெண்ணை பாலியல் இச்சையுடன் பார்த்தான் உடன் பணியாற்றிய பாவி ஒருவன்.

வெறி கொண்டவன் அந்த பெண்ணை வன்முறையால் ஆட்கொண்டான். "எங்கள் விருப்பத்திற்கு உட்படாததால் அந்த பெண்ணைக் கொன்றோம்" என இப்போது ஒரு அரக்கன் இரக்கமின்றி சொன்னானே தலைநகரில் நடந்த பயங்கரத்தின் போது, அதை அப்போதே நடத்திக் காட்டினான் அந்த படுபாவி.

நாயைக் கட்டும் சங்கிலியால் கழுத்தை இழுக்க உடலுறுப்புக்கள் அனைத்தும் செயலிழக்க  உயிர் மட்டும் ஒட்டிக் கொண்டிருந்தது. கோமா என்றழைக்கப்படும் ஆழ்ந்த உறக்கத்தில் மூச்சு மட்டும் ஓடிக் கொண்டிருந்தது இத்தனை வருடங்களாய்.

காகிதம் போல, காய்கறி போல இப்படி ஒரு வாழ்வா, அவசியமா இந்த சித்திரவதை, கருணைக் கொலை செய்ய அனுமதி தாருங்கள் என்று நீதிமன்றத்தின் படிக்கட்டுக்களில் ஏறினார் ஒரு நண்பர். என்ன செய்வது என்று நீதிபதிகளும் யோசித்தார்கள். 

அப்போது அந்த மருத்துவமனையின் நிர்வாகம் உடன் பணியாற்றும் செவிலியர்களும் சாட்சியம் சொன்னாகள். 

"அந்தப் பெண் எங்களின் குழந்தை. எங்களில் ஒருவள். அவளை பராமரிக்க வேண்டியது எங்களின் கடமை. ஒவ்வொரு முறை புதிய செவிலியர்கள் பணியில் இணையும் போது அருணாவிடம் அழைத்துச் செல்வோம். அவள் நம்மில் ஒருவள் என்று அறிமுகம் செய்வோம். அவளின் உயிரைப் பறிக்க இயற்கையைத் தவிர வேறு யாருக்கும் உரியையும் இல்லை"

என்று அவர்கள் சொன்னதை உண்மையிலேயே நியாய உணர்வு கொண்ட நீதியரசர்களும் ஏற்றுக் கொண்டனர். கருணைக் கொலை கோரிய மனு தள்ளுபடியானது.

இயற்கை நேற்று அவளின் உயிரை எடுத்துக் கொண்டது. நாற்பத்தி மூன்று வருட துயரத்திற்கு துயரமான முடிவு வந்தது.

சாதாரண ஊழியர்தானே, எங்களுக்கு என்ன என்று எண்ணாமல் தங்களில் ஒருவராய் நாற்பத்தி மூன்று நீண்ட நெடிய வருடங்கள், பெரும் செலவினத்தை பொருட்படுத்தாமல் பராமரித்து வந்த மும்பையின் கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனை நிர்வாகத்திற்கும், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

 

1 comment:

  1. அறுமை
    கடவுள் என்பவர் இவர்கள் தான்

    ReplyDelete