Saturday, May 30, 2015

மருத்துவமனை, சமுதாயக் கூடம், இப்போது ஆம்புலன்ஸ்



“என்ன தவம் செய்தனை?” என்று கிருஷ்ணனை மகனாகப்  பெற்றதற்காக யசோதாவைக் கேட்பதாக கர்னாடக இசைப்பாடல் ஒன்று உண்டு.

ஆனால் எந்த தவமும் செய்யாமலேயே எல்.ஐ.சி யில் வேலை கிடைத்த ஒரே காரணத்தாலேயே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் எனும் மகத்தான அமைப்பில் இணையவும் செயலாற்றவும் வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வின் மிக முக்கியமான திருப்பு முனை என்றுதான் சொல்ல வேண்டும்.

தனது உறுப்பினர்களின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தாண்டி வேறு எது பற்றியும் கவலைப்படுவதில்லை என்று தொழிற்சங்கங்கள் பற்றி ஒரு குற்றச்சாட்டு சொல்லப்படுவது. ஒரு தொழிற்சங்கத்தின் அடிப்படை நோக்கமே தனது உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதுதான் என்றாலும் கூட இப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது. இன்றைக்கு இடதுசாரிக் கட்சிகளைத் தாண்டி மக்கள் நலம், தேச ஒற்றுமை, தேசத்தின் பொருளாதார இறையாண்மை குறித்து கவலைப்படுவதும் போராடுவதும் தொழிற்சங்க இயக்கங்களே. தொழிற்சங்க இயக்கங்களின் போராட்டங்கள் இல்லையென்றால் இன்று நாடாளுமன்றம் கூட பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு விற்கப் பட்டிருக்கும்.

இந்திய வரலாற்றில் ஒரு நிறுவனத்தின் தோற்றத்திற்கும் அதன் பாதுகாப்பிற்கும் அங்கே இருக்கிற தொழிற்சங்கத்தின் போராட்டம்தான் காரணம் என்று சொல்ல முடியுமானால் அது இன்சூரன்ஸ் துறையில் மட்டுமே சாத்தியம். 1951 ல் உருவான அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முதல் கோரிக்கையான காப்பீட்டுத்துறை தேசியமயமாக்கப்பட வேண்டும் என்பது 1956 ல் எல்.ஐ.சி யின் தோற்றத்தால் வெற்றி பெற்றது. அதன் பின்பு எத்தனையோ தாக்குதல் வந்தாலும் இன்றும் வெற்றிகரமான பொதுத்துறை நிறுவனமாக எல்.ஐ.சி நீடிப்பதற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இயக்கங்களே காரணம்.

ஊழியர் நலன் என்பதைத் தாண்டி நிறுவன நலன் என்பதிலும் அக்கறை செலுத்துகிற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நடவடிக்கைகள் எல்.ஐ.சி யின் எல்லைகளைத் தாண்டி விரிவடைந்து கொண்டே இருக்கிறது. தன் ஊழியர்களை பொறுப்பான மக்களாக உருவாக்குவது, இதர பகுதி உழைக்கும் மக்களோடு இணைந்து செயல்பட வைப்பது, சமூக அநீதிகளுக்கு எதிரான போராட்டங்களில் முன்னணியில் நிற்பது என்று பரிணமித்துள்ளது.

இயற்கைச் சீற்றங்களால் துயருற்ற மக்களுக்கு துணை நிற்பது என்பது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பாரம்பரியமாகவே மலர்ந்துள்ளது. கண்ணீர்த்துளி மண்ணைத் தொடுவதற்கு முன்பாக களத்தில் இருப்பவனாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.

சுனாமி சமயத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நிவாரணப்பணிகள்  எப்படி அமைந்தது என்பது பற்றி முன்னரே இவ்வலைப்பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

உடனடியாக தேவைப்படும் அத்தியாவசிய உதவிகளைச் செய்வது, நீண்ட காலத்திற்கு பயன்படும் உதவிகளைச் செய்வது என்று இரண்டு விதமாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நிவாரணப் பணிகள் அமையும்.

அப்படி நீண்ட காலத்திற்கு பயன் தரும் விதமாக அமைந்த சில முக்கியப் பணிகளை இங்கே பதிவு செய்கிறேன்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரிசா மாநிலம், கேந்திரபாரா மாவட்டத்தில் பள்ளிக் கட்டிடங்கள் கட்டித்தரப்பட்டுள்ளன.

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில்  இரு மருத்துவமனைகள் கட்டித்தரப் பட்டுள்ளன. (மருத்துவமனை கட்ட அனுமதி வழங்கவும் பிறகு அதனை திறக்கவும் பாஜக அரசு படாத பாடு படுத்தியதாக ஒரு அகில இந்திய செயற்குழுக் கூட்டத்தில் அப்போதைய அகில இந்திய துணைத்தலைவரும் அகமதாபாத் கோட்டத்தைச் சேர்ந்தவருமான தோழர் கே.எம்.ராமி சொன்னது இன்னும் நினைவில் உள்ளது.)

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிரந்தர நிவாரணப்பணியாக கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் ஆழிக்கல் என்ற கிராமத்தில் சுனாமியால் இடிந்து போன பள்ளிக் கட்டிடம் மீண்டும் கட்டித்தரப் பட்டது. நாகை மாவட்டத்தில் புதுப்பட்டிணம் என்ற கிராமத்திலும் கடலூர் மாவட்டத்தில் கிள்ளை என்ற கிராமத்திலும் சமுதாயக் கூடங்கள் கட்டித் தரப்பட்டன.

பல்வேறு சந்தர்ப்பங்களில் நேரடியாக மக்களிடம் பொருட்களாக அளித்ததை பட்டியல் போடுவது சிரமம் என்பதால் அந்தப்பக்கம் நான் செல்லவில்லை.

இதோ இப்போது பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தோழர்கள் அளித்த நிதி கொண்டு ஆறு ஆம்புலன்ஸ்கள் அம்மாநில மருத்துவமனைகளுக்கு வழங்கப் பட்டுள்ளன. அது மட்டுமல்ல, ஒரு பெண்கள் பள்ளியின் இடிந்து போன கட்டிடத்தை கட்டுவதற்கான நிதியும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்ட அடிப்படையில் பனிரெண்டு குளிர்சாதன சவப்பெட்டிகளும் வழங்கப்பட்டுள்ளது. 





அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் எல்லை இந்தியாவிற்குள் சுருங்கியதும் கிடையாது. நான் பணியில் சேர்ந்த காலத்தில் தென் ஆப்பிரிக்க மக்களின் நிற வெறிக்கு எதிரான போராட்டத்திற்காக   ஊழியர்கள் அளித்த நிதியாக ரூபாய் அறுபத்தி ஓராயிரம் (எண்பதுகளில்) அளிக்கப்பட்டதும் நினைவிற்கு வருகிறது.

இப்போது நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு உதவ சங்கத்தின் நிதியிலிருந்து ரூபாய் ஐந்து லட்சம் அளிப்பது என்று சமீபத்தில் புவனேஷ்வரில் நடைபெற்ற அகில இந்திய செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு அமைப்பில் உறுப்பினராக இருக்க என்ன தவம் செய்தனை என்று கேட்டால் அது பொருத்தமாகத்தான் இருக்கும்.



2 comments:

  1. நன்று
    தொடரட்டும் உங்களது பணி பல்லாண்டு

    ReplyDelete
  2. தங்கள் அமைப்பின் பணி தொடரட்டும்
    பாராட்டிற்கு உரிய பணி
    பாராட்டுவோம் போற்றுவோம்

    ReplyDelete