Tuesday, July 7, 2015

பாபனாசம் – இந்த முறை ஏமாற்றவில்லை (திரைப்படம்தான்)



http://www.tolivaartha.com/wp-content/uploads/2015/05/Papanasam-tamil-movie-3.jpg

போன மாதம் ஏமாற்றமளித்த பாபனாசம் என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அது திரைப்படம் பற்றியதல்ல. பாபனாசத்துக்குச் சென்ற பயணம் பற்றியது. இப்போது எழுதுவது பாபனாசம் திரைப்படம் பற்றித்தான்.

தஞ்சாவூர் சென்று திரும்பி சில மணி நேரங்கள் கூட ஆகாததால் களைப்பினால் உடல் ஓய்வு கேட்ட போதும் மகனின் விருப்பத்திற்காக நேற்று முன் தினம் சென்றோம். (இந்த பில்ட் அப் தேவையா என்று மகன் பின்பு சத்தம் போடப் போவது வேறு விஷயம்). கமலின் முந்தைய இரு படங்களான விஸ்வரூபத்தையும் உத்தம வில்லனையும் (திருட்டு விசிடி யில் கூட) பார்க்காததால் இந்த படத்தை தவறவிட விரும்பவில்லை.

பாபனாசம் திரைப்பட கதையை ஏராளமானவர்கள் எழுதி விட்டதால் நான் இங்கே எழுதுவது அவசியமில்லை. குடும்பத்தோடு சென்று பார்க்கக் கூடிய படமாக இருப்பது என்பதே ஒரு மிகப் பெரிய சாதனையாக இன்று வரும் பெரும்பாலான படங்கள் மாற்றி விட்டது. அந்த விதத்தில் ஒரு நல்ல படம் பாபனாசம்.

மலையாளப் படத்தை நான் பார்க்காததால் அதை கொலை செய்து விட்டார்களா என்பதும் எனக்கும் தெரியாது. அப்படி இல்லை என்று பெரும்பாலானவர்கள் கூறியுள்ளார்கள். கமலஹாசனை நேசிக்கிறவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்களோ அதே அளவில் அவர் திறமையானவர் என்பதற்காகவே எதிர்க்கிறவர்களும் இருக்கிறார்கள். தங்களால் செய்ய முடியாத ஒன்றை, செய்ய முயற்சிக்காததை வேறொருவன்  நன்றாக செய்தால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவனைப் போட்டு அடித்து துரத்துவதற்கு என்றே  ஒரு வெறி பிடித்த வீணர் கூட்டம் அலைகிற சமூகத்தில்தானே நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? கமலஹாசன் மீது வைக்கப்படுகிற பெரும்பாலான விமர்சனங்கள் கையாலாகததனத்தின் வெளிப்பாடே.

பாபனாசம் சொல்லியிருக்கிற செய்தியும் சொல்லப்பட்ட விதமும் முழுமையாகவே எனக்குப் பிடித்திருந்தது. சுயம்புலிங்கம் பாத்திரத்திற்கு கமலஹாசன் முழுமையான நியாயம் செய்திருந்தார். குடும்பத்தை நேசிப்பதிலும், பிரச்சினையை எதிர்கொள்வதில் காண்பிக்கிற புத்திசாலித்தனத்திலும், காவல்துறையிடம் அடிவாங்கும் போது வேதனைப்படுவதிலும், காவல்துறை சடலம் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டும் போது காண்பிக்கும் அலட்சியத்தின் போதும், இறுதியில் வில்லனின் பெற்றோரிடம் தன் பாவத்தை மூழ்கடிப்பேன் என்று சொல்லும் போதும் கமலஹாசனின் உடல் மொழி அபாரம்.

இரண்டு பெண்களும் பொருத்தமாக இருந்தாலும் கௌதமிதான் கொஞ்சம் பாத்திரத்தில் ஒட்டாமல் விலகி நிற்பது போல தோன்றியது. காவல்துறை அதிகாரியாக வந்த நடிகை மிகவும் கச்சிதமாக, கம்பீரமாகவும் மட்டுமல்லாமல், மகனை இழந்த தாயாகவும் நடித்திருக்கிறார். அந்த காலத்தில் ஹிந்தி சீரியலில் காமெடி நடிகராக வந்த வில்லனின் தந்தை கடைசிக் காட்சியில் அசத்தியுள்ளார். 

கமலஹாசன் மட்டுமல்லாமல் எம்.எஸ்.பாஸ்கர், கலாபவன் மணி, இளவரசு பிறகு அந்த கேபிள் டிவி சிறுவன் என மற்ற நடிகர்களுக்கும் தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது ஒரு சிறப்பு. டெல்லி கணேஷிற்கு மட்டும் இன்னும் கொஞ்சம் வாய்ப்பு கொடுத்திருக்கலாமோ? 

ஒளிப்பதிவு, இசை இவையெல்லாமும் நன்றாக இருந்தது. நிறைவான் ஒரு படத்தைக் கொடுத்த இயக்குனருக்கும் இயக்குனரின் நடிகராய் தன்னை மாற்றிக் கொண்ட கமலஹாசனுக்கும் பாராட்டுக்கள். 

இயற்கை பாபனாசம் கடந்த பயணத்தில் ஏமாற்றினாலும் திரைப்படம் பாபனாசம் கண்டிப்பாக ஏமாற்றவில்லை.

பின் குறிப்பு : பெண்கள் பட்டாளத்தோடு புடவைக்கடைக்குச் செல்லும் ஆண்களின் அவல நிலையை ஒரு முப்பது செகண்ட் காட்சியில் தத்ரூபமாய் காட்டியது யாருடைய அனுபவமோ?

 





3 comments:

  1. நன்றி நண்பரே
    அவசியம் பார்க்கிறேன்

    ReplyDelete
  2. படம் நன்றாக இருந்தது. நான் திருஷ்யம் பார்க்கவில்லை. முதல் 15-20 நிமிடங்கள் படம் எந்தத் திசையில் செல்கிறது என்பதையே கணிக்க முடியவில்லை. ரொம்பப் பாராட்டப்பட வேண்டிய விஷயம், கதைக்கு மரியாதை கொடுத்து எடுத்திருப்பது. இதில் வேறு எந்த '.... ஸ்டார்' நடித்திருந்தாலும், அறிமுகக் காட்சி போன்று பில்டப் கொடுத்து கதையைக் கந்தர்கோளமாக்கியிருப்பார்கள். நீங்கள் சொன்னதுபோல் கௌதமி மட்டும் ஒட்டாமல் தெரிந்தது (ஓரிரு காட்சிகளைத்தவிர).

    ReplyDelete
  3. நீங்க இப்படி சொன்னதால் இந்த படம் பார்க்க வேண்டும்.

    ReplyDelete