Thursday, August 20, 2015

இன்றும் பொருந்தும் “தோட்டியின் மகன்”




இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகம் இது. நேற்று முன் தினம் படிக்கத் துவங்கி நேற்று படித்து முடித்த புத்தகம். அதன் தாக்கம் மனதை விட்டு அகலுவதற்கு முன்பாக அதைப் பற்றி பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
                                                    
நூல்                                 : தோட்டியின் மகன்
ஆசிரியர் (மலையாளம்)               : தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில்                             : சுந்தர ராமசாமி
வெளியீடு                           : காலச்சுவடு பதிப்பகம்,
                                      நாகர்கோயில்
விலை                              : ரூபாய் 150.00

கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதையாக இருப்பினும் நூலின் முதல் பதிப்பு என்னமோ 2000 மாவது ஆண்டில்தான் வெளிவந்தது. இதுவரை பத்து பதிப்புக்கள் கண்டுள்ளது என்பதே இந்நூலின் முக்கியத்துவத்தை சொல்லாமல் சொல்கிறது.

கேரள மாநிலம் ஆலப்புழை நகர்தான் கதையின் களம். அங்கே நகரசுத்தித் தொழிலாளியாக பணியாற்றும் இசக்கிமுத்து இறக்கும் தருவாயில் தன் மகன் சுடலைமுத்துவை தான் பார்க்கும் வேலைக்கு அனுப்புகிறார். மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் வேலைக்குச் செல்வதற்குச் செல்ல விருப்பமில்லாவிட்டாலும் வேறு வழியின்றி செல்கிற சுடலை முத்துவின் வாழ்க்கைதான் “தோட்டியின் மகன்”

தன்னைப் போல தன் மகனும் இந்த வேலையைச் செய்யக் கூடாது என்றும் அவனை யாரும் “தோட்டியின் மகன்” என அழைக்கக் கூடாது என்று விரும்பி அதற்காக சுடலை முத்து செய்கிற முயற்சிகள் பலித்ததா என்பதுதான் கதை.

மிகவும் சிரமமான வேலையைச் செய்கிற தொழிலாளர்களிடம் கமிஷன் அடிக்கிற ஓவர்சியர் என்று அழைக்கப்படும் கண்காணிப்பாளர், தங்கள் உரிமைகளுக்காக தொழிற்சங்கம் அமைக்க முயலும் போது அவர்களில் ஒருவரையே கருங்காலியாக்கி சங்கம் தோன்றாமல் பார்த்துக் கொள்ளும் நகரசபைத் தலைவர், இவர்களின் கைப்பாவையாகிறான் சுடலை முத்து. சங்கத்தை துவக்க முயன்ற தொழிலாளி மீது திருட்டுப்பட்டம் சுமத்தி ஊரை விட்டே துரத்தி விடுகிறார்கள்.
தன் மீது படிந்திருக்கிற மனிதக்கழிவின் நாற்றத்தால் தன் மகனையே கையில் தூக்கி கொஞ்ச மறுக்கிற சுடலை முத்து தன் வாழ்க்கை முறையை மாற்ற எவ்வளவோ முயற்சித்தாலும் சமூகம் அவனை வேறு மாதிரியாக பார்க்க தயாராக இல்லை. மகனுக்கு “மோகன் என்று நாகரீகமாக பெயர் வைத்ததைக் கூட எள்ளி நகையாடுகிறது.

தான் பார்க்கும் வேலை என்னவென்று மகனுக்கு தெரிந்து விட்டதால் நகரசபைத் தலைவருக்கு லஞ்சம் கொடுத்து சுடுகாட்டு காவலர் வேலை வாங்கும் சுடலைமுத்துவை ஊரெங்கிலும் பரவிய காலரா நோய் தாக்க, அவனின் இறப்பிற்குப் பிறகு அவனது மகனும் அதே துப்புறவுத் தொழிலாளியாக மாறுகிறான்.

தங்களின் உரிமைகளுக்காக போராடும் தொழிலாளர்களின் தலைவனாக அவன் உருமாறுகிறான் என்பதோடு கதை முடிகிறது.

துப்புறவுத் தொழிலாளர்களின் வாழ்நிலை எவ்வளவு துயரம் மிகுந்ததாய் இருக்கிறது என்பதை உணர்வு பூர்வமாய் சித்தரிக்கிற நூல் இது. அறுபது ஆண்டுகளுக்குப் பின்பும் அவர்களின் வாழ்விடங்களில் பெரிய முன்னேற்றம் இல்லை என்பதும் மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறை இன்னும் தொடர்கிறது என்பதும் நம்மை தலை குனிய வைக்கிற அவலமாகும்.

7 comments:

  1. ஆக கேரளாவில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த சிபிஎம் என்ன செய்திருக்கிறது? தேசிய அளவில் எந்த இயக்கத்தையாவது நடத்தி உள்ளதா சிபிஎம் ? சி பி எம்மின் தலைமை நிர்வாகிகள் பலர் வருணாசிரம சிந்தனை கொண்டவர்கள் என்பதனால் தான் தீண்டாமை ஒழிக்க இயக்கம் கண்டவர்களால் இதை ஒழிக்க இயக்கம் தொடங்க வில்லை

    ReplyDelete
    Replies
    1. கதை எழுதப்பட்டது 1946 ல். அப்போது சி.பி.எம் கேரளாவில் ஆட்சியில் இல்லை. துப்புறவுத் தொழிலாளர்களின் போராட்டத்தை முன்னெடுத்தது அவர்கள்தான் என்பதை கதையைப் படித்தால் தெரியும்.

      மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறை இப்போது இருப்பது மஹாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில்தான். அதைத் தவிர ரயில்வே துறையில்.

      சி.பி,எம் தலைவர்கள் வர்ணாசிரம் சிந்தனையோடு இருந்தார்கள் என்பதைப் போன்ற மிகப் பெரிய காமெடி எதுவும் இல்லை. கம்யூனிஸ்டுகளாக மாறியவர்களை அவர்களின் பிறப்பைச் சொல்லி கிண்டல் செய்வது வக்கிர புத்தி உள்ளவர்களால் மட்டும் முடியும்.

      இந்த வக்கிர புத்தி கம்யூனிஸ்ட் என்று தங்களை நினைத்துக் கொண்டுள்ளவர்களுக்கும் இருக்கிறது

      Delete
    2. //கம்யூனிஸ்டுகளாக மாறியவர்களை அவர்களின் பிறப்பைச் சொல்லி கிண்டல் செய்வது வக்கிர புத்தி உள்ளவர்களால் மட்டும் முடியும்.

      இந்த வக்கிர புத்தி கம்யூனிஸ்ட் என்று தங்களை நினைத்துக் கொண்டுள்ளவர்களுக்கும் இருக்கிறது//
      மிகவும் நேர்மையான உங்க கருத்து.

      Delete
    3. கேரளாவில் ஒரு தலித் முதல்வராக இருந்த வாய்ப்பை திட்டமிட்டே தடுத்தது பார்ப்பனிய சிபிஎம் --இது எமது கேரளா நண்பரிடம் இருந்து கிடைத்த தகவல்

      Delete
  2. சுதந்திர இந்தியா
    வல்லராகும் பாதையில் பயணிக்கும் இந்தியா
    என்று கூறி என்ன பயன்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  3. மிகவும் வெட்கபடவேண்டிய அவலம்.

    ReplyDelete
  4. பதிவு அருமை. நல்ல புத்தகங்களை அறிமுகப் படுத்தும் பணி தொடரட்டும்.

    எதைச் செய்தாலும் அதில் குறை கண்டுபிடிப்பது மனித இயல்பு. இதுவும் கடந்து போகும்.

    ReplyDelete