Friday, September 11, 2015

மறக்க முடியாத செப்டம்பர் பதினொன்று



கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் எங்கள் வேலூர் கோட்ட இதழான சங்கச்சுடர் நான்கு பக்க வடிவிலிருந்து பதினாறு பக்க புத்தக வடிவிற்கு மாறியது. அதிலே ஒரு பகுதி “பொதுச்செயலாளர் பக்கங்கள்”. அதற்காக கடந்த வருடம் எழுதியது இன்றும் பொருத்தமாக இருப்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.




வரலாற்றில் செப்டம்பர் பதினொன்று

அன்பார்ந்த தோழர்களே,

புதுப் பொலிவோடு புத்தக வடிவில் வரும் சங்கச்சுடர் மூலமாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சங்கசுடர் இதழை புத்தக வடிவில் வெளியிடுவது என புதிதாக அமைக்கப்பட்ட ஆசிரியர் குழு முடிவெடுத்த நாள் செப்டம்பர் பதினொன்று. யதேச்சையாக அமைந்தாலும் கூட செப்டம்பர் பதினொன்று மிக முக்கியமான நாளாகவே உலக வரலாற்றில் அமைந்துள்ளது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அஹிம்சை வடிவிலான சத்யாகிரஹ போராட்ட இயக்கத்தை மகாத்மா காந்தி அறிவித்தது 1906  ம் வருடம் செப்டம்பர் 11 அன்றுதான். “பொழுதெல்லாம் என் செல்வம் கொள்ளை போவதோ? நாங்கள் சாவதோ?” என்று கண்டனக்குரல் எழுப்பிய பாரதியின் நினைவுநாளும் இந்த நாள்தான். இந்திய செல்வாதாரங்களை சுரண்டிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைப் பார்த்து பாரதி பாடிய வரிகளை இன்றும் நாம் பயன்படுத்த வேண்டியிருப்பது பெரும் துயரம். பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இந்தியாவின் செல்வங்களை அடகு வைப்பவர்களாக இந்திய ஆட்சியாளர்கள் மாறுவார்கள் என்பதை முன்பே அறிந்துதான் “நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்” என்றும் பாடினார் போலும். “பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என நினைத்தாயா?” என்று எந்த சக்திக்கும் அடிபணியாமல் இருப்பதற்கான உறுதியையும் லட்சியத்தையும்  நமக்கு பாரதி அளித்துள்ளார்.

ஊடகங்கள்  செப்டம்பர் பதினொன்று என்றால் ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் மக்களுக்கு நினைவு படுத்திக்கொண்டிருக்கும். அமெரிக்காவின் நியூயார்க் நகரத்து இரட்டை கோபுரமும் பெண்டகன் அலுவலகமும் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட  சம்பவத்தை அவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆப்கானிஸ்தானில் அமைந்த சோஷலிஸ அரசாங்கத்தை வீழ்த்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கொம்பு சீவி வளர்க்கப்பட்ட  தாலிபன், அல் கொய்தா, ஒசாமா பின் லேடன் ஆகியோர் பின்பு  அதே அமெரிக்காவிற்கு எதிராக திரும்பியதன் விளைவுதான் செப்டம்பர் பதினொன்று சம்பவம். உலகெங்கிலும் பல பேரழிவுத் தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிற, நிகழ்த்தும் இஸ்ரேல் போன்றவர்களுக்கு ஆதரவளிக்கிற அமெரிக்கா தனது மண்ணில் சந்தித்த மிகப் பெரிய அழிவு இது. இரண்டாம் உலகப் போரில் கூட சோவியத் செஞ்சேனைதான் மிகப் பெரிய இழப்பை சந்தித்து பாசிச ஹிட்லரை முறியடித்தது. ஆனால் பியர்ல் ஹார்பர் தாக்குதல் நீங்கலாக அமெரிக்கா பத்திரமாகவே இருந்தது.

இரட்டைக் கோபுர தாக்குதல் என்ற மோசமான நிகழ்வு மட்டும் வரலாற்றில் கறுப்பு தினமாக செப்டம்பர் பதினொன்றை சித்தரிக்கவில்லை. இரட்டை கோபுர தாக்குதலுக்கு முப்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இதே நாளில்தான்  அமெரிக்கா நிகழ்த்திய ஒரு பயங்கர அரசியல் படுகொலையும் நடைபெற்றது. சோஷலிச ஆட்சி முறையைக் கொண்டு வந்ததாலும் அமெரிக்க கம்பெனிகள் இயற்கை வளங்களை கொள்ளையடித்ததை தடுத்து நிறுத்தியதாலும் மக்கள் சார்ந்த திட்டங்களை அமலாக்கியதாலும் அமெரிக்காவின் வெறுப்பை சம்பாதித்த சிலி நாட்டு அதிபர் சால்வடார் ஆலண்டே ,சி.ஐ.ஏ அமைப்பின் சதியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அரசியல் படுகொலைகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வாடிக்கை என்பதை பனாமா கால்வாயைக் கைப்பற்ற பனாமா அதிபர் டோரிஜாஸ், இரானின் எண்ணெய் வளத்தை சுரண்ட மொகமது மொசாதக் என்று கடந்த கால கொலைகள் நீளும் என்றால் சதாம் ஹூசேன், முகமது கடாபி என்று அண்மைக் காலப் பட்டியல்கள் சொல்லும். சால்வடார் ஆலண்டே கொல்லப்பட்ட செப்டம்பர் 11 அன்றே இரட்டைக் கோபுரத் தாக்குதல் நிகழ்ந்த்து ஒரு வரலாற்று நகைமுரண்.

பாரதி மட்டும் செப்டம்பர் பதினோராம் நாள் மறையவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைகளுக்காக போராடி வந்த தலைவர் இமானுவேல் சேகரன் வெட்டிக் கொல்லப்பட்ட்தும் செப்டம்பர் 11 அன்றுதான். 1957 ல் முகவை மாவட்ட கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியர் நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தையில் ஆதிக்க சக்திகளுக்கு நிகராக நாற்காலியில் அமர்ந்து பேசினார் என்ற காரணத்திற்காகவே வெட்டப்பட்டார் இமானுவேல் சேகரன். பாரதி நினைவுநாள் கூட்டமொன்றில் பள்ளி மாணவர்களிடம் உரையாற்றி வீட்டுக்கு வரும் வழியில் கொல்லப்பட்டார்.

ஆதிக்க சக்திகளாக வாழ்ந்தவர்களின் நினைவு நாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு செல்கிற பல பெரிய அரசியல் கட்சித் தலைவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக விளங்கிய இமானுவேல் சேகரனின் நினைவுநாளை கண்டுகொள்வதில்லை என்பது மட்டுமல்ல, அங்கே சொல்பவர்களுக்கும் ஏராளமான கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதன் விளைவாகத்தான் 2011 ம் வருடம் செப்டம்பர் 11 அன்று பரமக்குடியில் பிரச்சினை ஏற்பட்டு காவல்துறையின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஆறு அப்பாவி உயிர்கள் பலியாகின.


ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளையான காவல்துறையை காப்பாற்றும் விதத்தில் அவர்கள் மீது எந்த தவறுமே இல்லை என்று ஒரு பூசணித் தோட்டத்தையே ஒரு பிடிச் சோற்றில் மறைத்து அறிக்கை கொடுத்தது நீதிபதி சம்பத் கமிஷன். அரசுக்கும் நீதிக்கும் மாறாத களங்கமாக செப்டம்பர் 11  பரமகுடி துப்பாக்கிச் சூட்டின் மூலமாய் தமிழக வரலாற்றில்  இடம் பெற்றிருக்கும்.


7 comments:

  1. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  2. பதிவு செய்து விட்டேன் நண்பரே

    ReplyDelete
  3. செப்டெம்பர் 11-ன் பலநிகழ்வுகளை நினைவு கூர்ந்து இருக்கிறீர்களென் வலைத்தளத்தில் ஒரு கதைப் போட்டி அறிவித்திருக்கிறேன் வாசிக்கவும் பங்கு பெறவும் அழைப்பு.

    ReplyDelete
  4. செப்டம்பர் 11 அன்று நடந்த அமெரிக்காவின் நியூயார்க் சம்பவத்தை தவிர மற்றவைகளை இப்போது அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
  5. theriyaatha pala thakavalkal sir.

    ReplyDelete
  6. //சதாம் ஹூசேன், முகமது கடாபி என்று அண்மைக் காலப் பட்டியல்கள் சொல்லும்.//
    ஈராக், லிபியா நாடுகளில் முன்னைய காலங்களில் இந்தியா உட்பட பல ஆசிய நாட்டவர்கள் வேலை பார்த்து பயனடைந்தனர் அமெரிக்கா தனதுஅழிவு வேலைகளை அங்கே தொடங்கியதில் இருந்து அந்த நாட்டுகாரர்களே அகதியாக அலைய தொடங்கிவிட்டனர்.

    ReplyDelete