Monday, September 28, 2015

மூவர்ணக் கொடியை இழிவு படுத்துவது மோடியின் பாரம்பரியம்








பாரக் ஒபாமாவிற்கு அளிப்பதற்காக  அமெரிக்க சமையல்காரர் விகாஸ் கண்ணாவிற்காக இந்தியாவின் மூவர்ணக்கொடியில் நரேந்திர மோடி கையெழுத்திட்டுக் கொடுத்தது சர்ச்சையானது.

அப்படியெல்லாம் அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கவில்லை என்று இந்திய அதிகாரிகள் முதலில் சாதித்தார்கள். அதற்காக விகாஸ் கண்ணாவிடமிருந்த மோடி கையெழுத்திட்ட கொடியையும் வாங்கி ஒளித்து வைத்து விட்டார்கள். இப்போது மோடி கையெழுத்து போட்டது வெறும் வெள்ளைத் துணியில்தான் என்று புது பொய் ஒன்றையும் சொல்கின்றார்கள்.

கொடியின் காவி நிறப்பகுதியில் மோடி கையெழுத்துப் போட்டதன் புகைப்பட ஆதாரம் உலகெங்கும் பரவிய பின்னரும் இப்படி மாய்மாலம் செய்கின்றார்கள் என்றால் அதிலிருந்தே மோடியும் அவரது கூட்டமும் எப்பேற்பட்ட மோசடிப் பேர்வழிகள் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

நிற்க

மோடிக்கோ அவரது குரு பீடத்திற்கோ மூவர்ணக் கொடி மீது எந்த மரியாதையும் கிடையாது என்பதை அறிந்து கொள்ள கீழேயுள்ளதைப் படியுங்கள்.

“விதியின் சதியால் அதிகாரத்திற்கு வந்தவர்கள் நம் கையில் மூவர்ணக் கொடியைக் கொடுக்கலாம். ஆனால் அக்கொடி எக்காலத்திலும் ஹிந்துக்களால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மதிக்கவும் மாட்டார்கள். மூவர்ணக்கொடி என்ற  வார்த்தையே ஒரு தீய சக்தியாகும். கொடியில் மூன்று வர்ணங்கள் இருப்பது மோசமான மன நிலையை உருவாக்கும். அது நாட்டிற்கு நாசத்தை உருவாக்கும்.”

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பத்திரிக்கையான ஆர்கனைசர் இதழில் 14.08.1947 அன்றைய இதழில் வெளியான கட்டுரையில் எழுதப்பட்டதுதான் மேலே உள்ளது. இதை தோழர் பூஷண் பட்டாச்சார்யா என்ற எங்களின் போபால் கோட்டப் பொறுப்பாளர் கண்டுபிடித்து வாட்ஸப்பில் அனுப்பி வைத்தார்.

சில நாட்கள் முன்புதான் ஆர்.எஸ்.எஸ் சர்சங்சாலக் மோகன் பகவத்தும் இந்தியக் கொடியில் காவி நிறம் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று சொன்னதையும் சேர்த்துப் பாருங்கள்.

இந்தியாவின் கொடியை, மக்களை, பன்முகக் கலாச்சாரத்தை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இழிவு படுத்துவது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் பாரம்பரியம்.

ஆகவே மூவர்ணக் கொடியில் ஆட்டோகிராப் போடுவது என்பதெல்லாம் மோடிக்கு ஒரு பெரிய விஷயமே கிடையாது.

இந்த மனிதன் கையால் இன்னும் மூன்று வருடம் மூவர்ணக் கொடி ஏற்றப்படப் போகிறது என்பதுதான் மிகப் பெரிய கொடுமை.

மோடியால் ஏற்றப்படுவதையும் விட மிகப் பெரிய இழிவு தேசியக் கொடிக்கு வந்து விடப் போகிறதா என்ன?

No comments:

Post a Comment