Wednesday, September 9, 2015

அடுத்தவர் அந்தரங்கத்தின் மீது ஏனிந்த ஆர்வம்?




இந்த விஷயம் தொடர்பாக எழுத வேண்டிய அவசியமில்லை என்பதால் இத்தனை நாளாக மௌனத்தை கடை பிடித்திருந்தேன். ஆனால் நேற்று படித்த, இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் ஒரு நகைச்சுவை என்ற பெயரிலான  பெண்கள் மீதான ஒரு பொதுப்படையான தாக்குதல் என்னையும் அரிவாளைத் தூக்க வைத்து விட்டது.

தேசிய குற்ற ஆவணப் பிரிவின் புள்ளி விபரத்தின் படி கடந்தாண்டு மட்டும் நடந்துள்ள கொலைகளின் எண்ணிக்கை  33981. இந்த எண்ணிக்கை என்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றும் அந்த அறிக்கை சொல்கிறது.

இதிலே பதிவான அனைத்து கொலைகளும் ஊடகத்தால் பகிர்ந்து கொள்ளப் படுவதில்லை. கொலை என்பது பரபரப்பான செய்தியாக இருந்தாலும் கூட விவசாயிகளின் வரப்புப் பிரச்சினையால் ஏற்படும் கொலைகளோ, கூலித் தொழிலாளியின் கொலையோ, சொத்துக்கான தகராறால் ஏற்படும் கொலைகளுக்கோ ஊடகத்தால் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. பெரும்பாலான கொலைகள் பற்றி  சில தினசரிகள் மாவட்டப் பக்கங்களில் இரண்டோ அல்லது மூன்று பத்திகளில் செய்தி வெளியிட்டு ஒரு நாளோடு முடித்து விடுவார்கள். அதுவே பாலியல் சார்ந்த பிரச்சினைகளாக இருந்தால் பத்திகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

ஆனால் இந்த இந்திராணி முகர்ஜி விவகாரத்தை அவ்வளவு சீக்கிரமாக விடுவதற்கு தேசிய அளவிலான பத்திரிக்கைகளோ அல்லது தேசிய அளவிலான தொலைக்காட்சி சேனல்களோ தயாராக இல்லை. 

இந்த செய்தி வெளிவந்து ஒரு பதினைந்து நாட்கள் இருக்கும். அன்றிலிருந்து இன்று வரை அனேகமாக அனைத்து நாளிதழ்களும் இக்கொலை பற்றிய செய்தியை அதுவும் முதல் பக்கத்திலோ இல்லை நடுப்பக்கத்திலோ வெளியிடாமல் இருப்பதில்லை. தொலைக்காட்சிகளும் இதற்கு விதிவிலக்கில்லை. போதாக்குறைக்கு மும்பை போலீஸ் கமிஷனருக்கு பதவி உயர்வு கொடுத்து இன்னும் இரண்டு நாட்களுக்கு தீனி கொடுத்து விட்டார்கள்.

இதிலே கொலை பற்றிய செய்தியை விட இந்திராணி முகர்ஜியின் வாழ்க்கை வரலாற்றை அகவாழ்ராய்ச்சி செய்வதில்தான் ஊடகங்களுக்கு அளவு கடந்த ஆர்வம். இந்த லட்சணத்தில் முந்தைய யுகத்தில் இந்திரனுக்கு ஏராளமான இந்திராணிகள். இப்போது இந்திராணிக்கு ஏராளமான இந்திரன்கள் என்று ஜோக் வேறு உலா வருகிறது. "இந்திரன் மாறினாலும் இந்திராணி மாறமாட்டார்" என்ற புராண மொழி அவர்களுக்கு தெரியாது போலும்.

அடுத்தவரது அந்தரங்கத்தில் எட்டிப் பார்க்கும் ஆர்வம் என்பதுதான் இதற்குக் காரணம். பொது மக்களின் ஆர்வத்தால் ஊடகங்கள் இவ்வாறு இருக்கிறார்களா இல்லை ஊடகங்களால் மக்களுக்கு இந்த ஆர்வம் வந்ததா என்று பார்த்தால் இது கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என்பது போல விடை சொல்ல சிரமமான காரணம்.

சமுதாயத்தில் ஏற்பட்ட ஒரு சீரழிவை படம் பிடித்துக் காட்டுகிறோம் என்று வியாக்யானங்கள் கொடுக்கப்படலாம். ஆனால் இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி ஜாதிய வெறி காரணமாக ஆணவக் கொலைகள் பல நடந்துள்ளன. அந்த கொலைகளைப் பற்றி இந்த ஊடகங்கள் பக்கம் பக்கமாக அன்றாடம் எழுதியுள்ளதா? இல்லை தொலைக்காட்சிகள்தான் விவாதித்துள்ளதா?

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்ற பெயரில், "இந்தியாவை உருவாக்குவோம்" என்ற பெயரில் இந்திய நலன்கள் பல காவு கொடுக்கப்படுகின்றனவே, அந்த ஒப்பந்தங்களில் உள்ள அம்சங்கள் குறித்தெல்லாம் பக்கம் பக்கமாக எழுத, விவாதிக்க எந்த ஊடகம் தயாராக உள்ளது?

பங்குச்சந்தை சரிவு என்று அலறி செய்தி போடும் ஊடகங்கள் கூட "அன்னிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள்" யாரெல்லாம் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடினார்கள்? இதற்கு முன்பாக எப்போதெல்லாம் இது மாதிரி சூறையாடிக் கொண்டு சென்றார்கள் என்றெல்லாம் விரிவாக அகழ்வாராய்ச்சி செய்ததுண்டா?

இதே பிரச்சினையில் கூட கொலை செய்யப்பட்டதும் முக்கியக் குற்றவாளி ஆணாக இருந்திருந்தாலும் கூட இப்படி எழுதிக் கொண்டிருப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது. 

அதே போல இக்கொலை தொடர்பாக ஆர்வம் செலுத்துகிற வாசகப் பெருமக்களும் மேலே சொன்ன விஷயங்கள் தொடர்பான உண்மைகளை அறிந்து கொள்ள ஆர்வம் செலுத்தியிருப்பார்களா என்பதும் சந்தேகமே. 

ரசிகர்கள் விரும்புவதால்தான் மசாலா படம் தயாரிக்கிறோம் என்று அவர்கள் மீது பழி போடும் சினிமாத்துறையின் வேலையைத்தான் முதலாளித்துவ ஊடகம் செய்து கொண்டிருக்கிறது. பெண்களை வெறும் போகப் பொருளாக பார்க்கிற பிற்போக்குத்தனமும் வெளிப்படுகிறது.

லாபத்திற்காக, சர்குலேஷனுக்காக, டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக எதையும் செய்ய தயங்காத ஊடகங்கள், நாளை பரபரப்பான செய்தி எதுவும் இல்லை என்றால்?

கல்லூரி காலத்தில் படித்த ஒரு இர்விங் வாலஸ் நாவலின் (பெயர் நினைவுக்கு வரவில்லை) நாளிதழ் ஆசிரியர் போல அவர்களே கொலை, கொள்ளை, பாலியல் வன் கொடுமை ஆகியவற்றை ஏற்பாடு செய்யக் கூட தயங்க மாட்டார்கள்.




8 comments:

  1. அந்த நாவல் "The Almighty"ன்னு நினைக்கிறேன்.
    "Tomorrow Never Dies" படம் கூட அப்படித்தான் இருக்கும்...
    ஊடகங்கள் மாமா வேலை பார்க்க ஆரம்பித்து மாமாங்கம் ஆகிவிட்டது. இனிமே அவனுங்க அப்படித்தான் இருப்பானுங்க...

    ReplyDelete
  2. Why do you encourage extra marital affairs and defend Indrani?

    ReplyDelete
  3. Why you blame media when the accused is Indirani? Don't support immorals

    ReplyDelete
  4. நாம் அவற்றை படிப்பதால் தான் பிரதர் புதியதாக ஒன்றைத் தேடுவோம்

    ReplyDelete
  5. நீங்க சொன்னது சரியே.

    ReplyDelete
  6. Almighty yes, so also tomorrow never dies.

    ReplyDelete
  7. நீங்கள் எழுதியுள்ளது உண்மைதான். பெரும்பான்மையான எவரும் யோக்கியமில்லை. இதில் அடுத்தவர்களோட அந்தரங்கம் நமக்கெதற்கு. நம்ம சீரியல்கள் மாதிரி, வெட்டிச் செய்திகள் அலசப்படுகின்றன. எது முக்கியமோ, அதைக் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் ஆட்கள் இல்லை. (போதுமான)

    ReplyDelete