Wednesday, October 14, 2015

வலைப்பதிவர் விழா - முத்தான மூன்று உரைகள்

புதுகை வலைப்பதிவர் விழாவில்  காலை வேளை நிகழ்ச்சிகளில் முக்கியமான அம்சமாக  முத்தான மூன்று உரைகள் அமைந்திருந்தன.


விக்கிபீடியாவின் இந்திய அமைப்பாளரான திரு ரவிசங்கர் நகைச்சுவையாகவே தனது உரையை தொடங்கினார். தான் கல்லூரி பேராசியராக பணியாற்றவே விரும்பியதாகவும் நன்றாக படித்ததால் பொறியியல் படிக்க வைத்து விட்டார்கள் என்றார். கதை, கவிதை போன்றவற்றுக்கானதல்ல விக்கிபீடியா என்பதை தெளிவு படுத்திய அவர் அதிலே கட்டுரைகள், ஆய்வுகள் இடம் பெற தொடர்ந்து எழுதுங்கள் என்றும் வலியுறுத்தினார். ஹிந்தி பேசுபவர்கள் பற்றிய புள்ளிவிபரம் மிகைப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் கோடிட்டுக் காட்டினார்.திரு ரவிசங்கர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


அடுத்த முக்கியமான உரை தமிழ் இணைய கல்விக்கழகத்தின் இணை இயக்குனர் திரு மா.தமிழ்பரிதி அவர்களுடையது. சத்தியமாகச் சொல்கிறேன். அப்படி ஒரு உரையை நான் எதிர்பார்க்கவே இல்லை. பாரதிதாசன் கவிதை வரிகளை உணர்ச்சி பொங்கக் கூறிய அவர், வலைப்பக்கத்தின் சிறப்பம்சமே அதில் அடங்கியுள்ள கருத்துச் சுதந்திரம்தான் என்ற அவர், இன்று என்ன உணவு  உண்ண வேண்டும் என்று கூட கட்டளை போடுகிறார்கள் என்பதைக் கடுமையாக விமர்சித்த அவர், ஹிந்தித் திணிப்பு முயற்சிகளையும் அவர் கண்டித்தார். அவர் பகிர்ந்து கொண்ட ஒரு இனிப்பான செய்தியானது பொங்கலுக்குள்ளாக ஒரு லட்சம் மென் நூல்களை கொண்டு வர தமிழ் இணையக் கல்விக் கழகம் முயற்சித்து வருகிறது என்பதுதான்.



காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திரு எஸ்.சுப்பையா அவர்கள் தான் இப்போதுதான் வலைப்பதிவுகளை முதன் முதலாக படிக்கத் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டு தான் ரசித்த ஒரு கவிதையையும் முழுமையாக வாசித்தார். வலைப்பதிவர் போட்டிகளில் முதல் பரிசு பெற்ற திரு செல்வகுமார் அவர்கள் எழுதிய கவிதைதான் அது என்று பின்னர் அறிவித்த போது சரியான கவிதைக்குத்தான் பரிசு கிடைத்துள்ளது என்ற நிறைவு கிடைத்தது. அடுத்த வலைப் பதிவர் விழாவில் அழகப்பா பல்கலைக்கழகமும் பங்கேற்கும் என்று கரவொலிகளுக்கு மத்தியில் அறிவித்தார். அது போல தமிழ் இணையக் கலவிக் கழகத்தின் இயக்குனர் திரு உதயச் சந்திரன் மற்றும் இணை இயக்குனர் திரு மா.தமிழ்ப்பரிதி ஆகியோர் பணியையும் அவர் பாராட்டினார். 

தென் துருவ ஆராய்ச்சிப் பணிக்கு தலைவராக இருந்த திரு கர்னல் கணேசன் அவர்களும் தானும் இனி பதிவுகள் எழுதுவேன் என்று சொன்னது குறிப்பிடத் தக்கது.

இதற்கு முன்பாக இவர்கள் உரையினை கேட்டது கிடையாது. மனதில் நிற்குமளவிற்கு முத்தான உரைகளாக அமைந்திருந்தது பதிவர் விழாவிற்கு பெருமை சேர்த்தது.

நாளை - பதிவர் அறிமுகம் மற்றும் இனிய சந்திப்புக்கள்

 

8 comments:

  1. தவணை தவணையாக, தகுந்த பதிவாகவே போடுகிறீர்கள் நண்பரே. அன்பு கூர்ந்து தொடருங்கள். அந்த ஓவியங்களைப் பார்த்தீர்களா? யாரும் அதுபற்றிப் பெரிதாகப் பேசவில்லை..நீங்கள் கவனித்திருந்தால் பகிருங்கள். நன்றி

    ReplyDelete
  2. தோழரே, நாளை பாருங்கள்

    ReplyDelete
  3. அருமையான பேச்சினை அழகாய் பதிவு செய்தீர்கள்.

    ReplyDelete
  4. உங்கள் பதிவுகளின் நீண்டநாள் வாசகன் நான்...என் பெயரும் உங்கள் பதிவில்....ம்ம்ம்ம்...காலம் செய்த கோலம்....

    ReplyDelete
  5. பல நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு, பல இனிய பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. அதனைத் தாங்கள் பகிர்வதறிந்து மகிழ்ச்சி. நன்றி.

    ReplyDelete
  6. அருமை நாளை ஆவலுடன்...

    ReplyDelete