Friday, November 13, 2015

ஓடும் ரயிலில் . . . நடந்தது என்ன???



08.11.2015 தேதியிட்ட தீக்கதிர் நாளிதழின் இணைப்பிதழான வண்ணக்கதிரில் பிரசுரமான எனது “ஓடும் ரயிலில்” சிறுகதை, இதோ உங்களின் பார்வைக்காக, தோழர் ஸ்ரீரசா அவர்களின் அழகான ஓவியத்தோடு


ஓடும் ரயிலில்
வேலூர் சுரா




 


திருச்சி ஹௌரா விரைவு வண்டி வேகமாகவே ஓடிக் கொண்டிருந்தது. சைட் அப்பர் பெர்த்தில் படுத்துக் கொண்டே ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த நான் அதை மூடி வைத்து விட்டு சுற்றும் முற்றும் கண்களை ஓட விட்டேன். எதிரே இருந்த இரண்டு அப்பர் பெர்த்துக்களிலும் இருந்த வாலிபர்கள் இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருந்தார்கள். நேற்று ரயில் சென்னை எழும்பூரைத் தாண்டியதுமே டாய்லெட்டிற்கு வெளியே நின்று பிளாஸ்டிக் கோக் பாட்டிலில் எதையோ கலந்து கொண்டிருந்ததையும் அதை அவ்வப்போது குடித்துக் கொண்டிருந்ததையும் கவனிக்கத்தான் செய்திருந்தேன். அந்த சரக்கு இன்னும் வேலை செய்கிறது போல. பயணத்தில் மது அருந்துவது என்பது ஒரு நாகரீகமாகவே மாறிக் கொண்டிருக்கிறது. தடுக்க வேண்டிய டி.டி.ஆர் கள் கூட சில நேரம் இந்த ஜோதியில் ஐக்கியமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

மிடில் பர்த்தில் இருந்த இரண்டு பெண்கள் கீழே அமர்ந்து கொண்டு தங்கள் அலைபேசியில் ஏதோ தடவிக் கொண்டே இருந்தார்கள். அந்த காலத்தில் வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவுவது போல இந்த காலத்தில் போனை தடவிக் கொண்டிருக்கிறார்கள் என்று எப்போதோ படித்த்து நினைவுக்கு வர மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். இன்னும் இரண்டு பயணிகள் தெலுங்கில் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.  பசி வயிற்றைக் கிள்ளியது. ரயிலில் கொடுக்கும் உணவை சாப்பிடுவதற்கு பட்டினியாக இருப்பது மேல் என்று வைராக்கியம் பார்த்த்து தவறு என்று தோன்றியது.

பெர்த்திலிருந்து கீழே இறங்கி கம்பார்ட்மெண்ட் கதவை தள்ளிக் கொண்டு வெளியே வந்த்தும் சட்டென்று வெயில் தாக்கியது. வருடம் முழுதுமே வெயில் காலமாக மாறி விட்டது. மூன்றடுக்கு ஏ.சி யில் போ, இல்லையென்றால் புவனேஷ்வர் போவதற்குள் அவிந்தே போய் விடுவாய் என்று எச்சரித்த நண்பனுக்கு மனதார நன்றி சொன்னேன். நண்பனின் மகளின் திருமணத்திற்காக தனியாக ஒரு பயணம். உடன் படித்த நண்பர்கள், தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்கிற போதுதான் நமக்கும் வயதாகி விட்டது என்பது உறைக்கிறது.

மீண்டும் என் இடத்திற்கே வந்து புத்தகத்தை கையிலெடுத்தேன். சைட் அப்பர் பயணம் சிரமம் என்பார்கள். என்னைப் போன்ற உயரம் குறைவானவர்களுக்கு அது உண்மையில் வரம். யாருடைய தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக படிக்கலாம், உறங்கலாம். அப்பர் பெர்த்தை விட இறங்குவது ஏறுவதும் சுலபம். அடுத்தவர்கள் உட்காரவோ, படுக்கவோ நாம் வளைந்து கொடுக்க வேண்டாம். அடுத்த நிமிடம்தான் தோன்றியது. பசியில் புத்தி புத்தகத்தின் மீது செல்லாமல் இப்படித்தான் எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கிறது. கண்களை மூடிக் கொண்டு ஏசியின் ஜில்லிப்பை கொஞ்சம் உள்வாங்கிக் கொண்டேன். தண்ணீர் பாட்டிலைத் திறந்து கடகடவென்று அரை பாட்டில் தண்ணீரைக் குடித்து பசியை தணிக்க முயன்று தோற்றுப் போனேன். அலைபேசியை கையிலெடுத்து மணி பார்த்தேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் விசாகபட்டிணம் வந்து விடும். ரயில் ஓடிக் கொண்டிருந்தது.

லோயர் பெர்த் ஆசாமிகள், தங்கள் பெட்டிகளை ஒழுங்கு படுத்திக் கொண்டார்கள். மற்ற சில பயணிகளும் தங்கள் பெட்டி, பைகளோடு கதவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். விசாகப்பட்டிணத்தின் வரவை அவர்களை விட நான் இன்னும் அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.மிகச் சரியாக பதினொன்றே முக்காலுக்கு விசாகப்பட்டிணம் ஸ்டேஷன் வந்ததும் வேகமாக இறங்கினேன்.    அந்த மதிய நேரத்தில் கூட சூடாக இட்லியும் வடையும் விற்றுக் கொண்டிருந்தார்கள். அவற்றையும் நான்கு வாழைப்பழங்களையும் வாங்கிக் கொண்டு சைட் லோயர் பெர்த் சீட்டில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தேன். மிடில் பெர்த் பெண்கள்  அட்டை டப்பாவில் அடைத்த பீட்சாவை வாங்கிக் கொண்டு வந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். அப்பர் பெர்த் இளைஞர்கள் இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருந்தார்கள். மூன்று இருக்கைகள் காலியாக இருந்தது.

ட்ரெயின் புறப்படும் தருவாயில் ஒரு வயதான பெண்மணியும் அவரது மகனும் மருமகளும் வந்து சேர்ந்தார்கள். அந்த பெண்மணி ஏதோ திட்டிக் கொண்டே உள்ளே வந்தார். அவர்களைப் பார்த்தால் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.

“உடம்பில கொஞ்சமாவது சுறுசுறுப்பு இருக்கா? இவ்வளவு மந்தமா இருந்தா எப்படித்தான் குப்பை கொட்டுவியோ? வேகமா வா

என்று மருமகளையும்

“உங்க அப்பா அந்த காலத்துல ஒரு மூட்டை நெல்லை தலையில வைச்சுக்கிட்டு ஓடுவாரு, உனக்கு ஒரு பெட்டியை தூக்கவே மூச்சு வாங்குது

என்று மகனையும் சாடிக் கொண்டே தன் இருக்கையில் வந்து அமர்ந்தார்.

அவர்கள் கொண்டு வந்த பெட்டியையும் பைகளையும் சீட்டிற்கு கீழே வைத்து விட்டு அதை பூட்டுவதற்கு சங்கிலியையும் பூட்டையும் மருமகளிடம் கேட்க, அவளோ விழித்தாள்.

“ஞாபகமா எடுத்து வைச்சுக்க சொன்னேனே, என்ன முழிக்கிற

என்று கேட்ட மாமியாரிடம்

“ராத்திரி ஏழு மணிக்கெல்லாம் புவனேஸ்வர் போயிடுவோமே, அதுக்கப்பறம் கொல்கத்தா ட்ரெயினும் பகல் வேளை ட்ரெயின்தானே, இப்ப எதுக்கு பூட்டி வைக்கனும்?

என்று தயங்கிக் கேட்ட அவளிடம் மீண்டும் வெடித்தாள்.

“ஓஹோ, திருடனுங்க எல்லாம் இப்ப ராத்திரிலதான் வராங்களா, வழியில இன்னும் மூணு ஸ்டேஷன் இருக்கு, போற போக்குல நம்ம பைய தூக்கிட்டுப் போனா, என்ன செய்வ? இல்ல புவனேஸ்வர் வரைக்கும் நீதான் தூங்காம காவல் காக்கப் போறியா? எல்லாம் என் தலையெழுத்து, பெருசா ஆபீஸ் போய் வேலை பாக்கறீங்க, ஆனா ஒரு விவரமும் கிடையாது

“உங்க அம்மா, ஒரு உலக மகா மேதை, எப்பவும் எல்லோரையும் நொள்ளை சொல்லிக்கிட்டு

என்று பல்லைக் கடித்தபடியே கணவனிடம் மெதுவாக சொல்லிக் கொண்டே சங்கிலியையும் பூட்டையும் எடுத்துக் கொடுத்தாள். எல்லா லக்கேஜையும் இணைத்து பூட்டி சாவியை தன் கழுத்திலிருந்த செயினில் ஒரு ஊக்கு மூலம் இணைத்துக் கொண்ட அந்த மூதாட்டி பெருமூச்சு விட்டபடியே “துர்கா மா, எல்லாரையும் காப்பாத்து என்று கைகூப்பி மானசீகமாக வணங்கினார். கண்களை பெட்டி முழுவதும் சுழல விட்ட அவர் என்னைப் பார்த்து

“தம்பி, நீ உட்கார்ந்துகிட்டு இருக்கற சீட்டு எங்களோடது. சீக்கிரமா சாப்பிட்டு இடம் கொடு, என் மகன் கொஞ்ச நேரம் கட்டைய சாய்க்கட்டும்

என்று கிட்டத்தட்ட கட்டளையிட்டார்.

அடுத்து அவரது கவனம் அந்த பெண்களின் மீது திரும்பியது.

“ஏம்மா, இந்த மாதிரி சாப்பாடெல்லாம் சாப்பிட்டா உடம்புக்கு என்ன ஆகும்? ஹூம், இப்போ இருக்கிற பொண்ணுங்களாம் கண்டதை சாப்பிட்டு உடம்பு ஊதிப் போய் கிடக்குங்க, ஒரு வேலை செய்ய துப்பில்லை. 

என்றதும் நானே கொஞ்சம் பதறிப் போனேன். அந்த மருமகள் முகத்திலோ கோபம். மீண்டும் கணவன் காதில்

“இன்னிக்கு உங்க அம்மா ஊர் வம்பை வாங்காம விடப் போறதில்லை

என்று சொல்ல அவனும்

“அம்மா, உனக்கேன் இந்த வேலை? ஏன் தேவையில்லாத விஷயத்தில தலையிடற? 

எனக் கேட்க அந்தப் பெண்களோ இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.  இயர் போனில் பாட்டு கேட்டுக் கொண்டு இருந்த்தால் எதுவும் காதில் விழவில்லை போல.

“பெரியவங்க நல்லது சொல்றாங்களேனு ஏதாவது மதிக்குதுங்களா, இவங்களை பெத்தவங்க தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்களா, என்ன ட்ரெஸ் போடறாங்க

என்று அவர் புலம்பிக் கொண்டிருந்த போது  மேலே படுத்துக் கொண்டிருந்த வாலிபர்களில் ஒருவன் அப்படியே கீழே குதித்தான். அவனது போர்வை கீழே இவர் மீது விழ, அதை அலட்சியம் செய்து விட்டு அவன் பாட்டிற்கு நடந்து போக உரத்த குரலில் அவர் கூப்பிட்டார்.

“ஏய் தம்பி, நான் என்ன குளிருதுன்னு சொன்னேனா? உன் அழுக்கு போர்வையை என் மேல போர்த்தி விட்டுப் போற?

அவனோ வேகமாக திரும்பி வந்து

“இப்ப என்னாயிடுச்சுனு கத்திக்கிட்டு இருக்க? வயசானவளாச்சேனு பார்க்கிறேன். இல்லைனா மூஞ்சி முகரையெல்லாம் பேத்திடுவேன்

என்று சீற, நான் இடையில் புகுந்து சமாதானம் செய்து வைத்தேன். இதற்குள் ரயில் விஜயநகரம் ஸ்டேஷனை வந்து கடந்திருந்தது. எல்லோரும் அவரவர் இடத்தில் படுத்துக்கொள்ள நானும் எனது இடத்திற்குச் சென்று பாதியில் விட்டிருந்த புத்தகத்தை மீண்டும் படிக்க தொடங்கினேன். உண்ட களைப்பும் ஏசியின் குளிர்ச்சியும் என்னை உறங்க வைத்து விட்டது.

தடால் என்ற சத்தத்துடன் ரயில் குலுங்கி நிற்க நான் எழுந்து கொண்டேன். அதற்குள் பிரம்மபூர் வந்து விட்டதா என்ற சந்தேகத்துடன் கடிகாரத்தைப் பார்க்கும் வேளையில் அந்த மேல் பெர்த் வாலிபனின் அலறல் சத்தம் கேட்டது. அந்த பாட்டிதான் அந்த பையனை மாறி மாறி அடித்துக் கொண்டிருந்தார். மிடில் பெர்த் பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அபாயச் சங்கிலி இழுக்கப்பட்டுத்தான் ரயில் நின்றிருந்தது.  அந்த வாலிபனை காப்பாற்ற போன இன்னொரு வாலிபனை பாட்டியின் மகன் தடுத்து நிறுத்தி

“என் கிட்ட எதுவும் பேசாத, போலீஸ் வருவாங்க, அப்ப தெரியும் உன் சினேகிதன் செஞ்ச அக்கிரமம்”

என்று சொல்ல ஒட்டு மொத்த பெட்டியில் இருந்தவர்களும் அங்கே திரண்டு விட்டார்கள். டி.டி.ஆர், ரயில்வே போலீஸ் என எல்லோரும் வந்து விட்டார்கள்.

“இந்த பொண்ணு இறங்கி டாய்லெட்டுக்கு போனா. இவனும் பின்னாடியே போனான். இவன் கிட்ட ஏதோ தப்பு இருக்குனு உள் மனசு சொன்னது. அதனால நானும் பின்னாடி போனேன். கழுகு மாதிரி காத்துக்கிட்டு இருந்த படுபாவி அவ கையை பிடிச்சு இழுத்து அசிங்கமா நடக்க பார்த்தான். அதான் நாலு போடு போட்டேன். என் மருமகளும் கரெக்டா சங்கிலியை பிடிச்சு இழுத்து வண்டியை நிறுத்திட்டா”

என்று அவர் விளக்க, ரயில்வே போலீஸ் அந்த வாலிபனை இழுத்துக் கொண்டு போனார்கள்.

“நல்ல வேலை செஞ்சீங்கம்மா”

என்று டி.டி.ஆர் பாராட்ட

“நீங்க என்ன வேலை செய்யறீங்க, ரயிலில உட்கார்ந்து தண்ணி அடிக்கிறாங்க, இதை கண்டும் காணாமல் நீங்க போயிடறீங்க, அதனாலதான் இவங்களுக்கு தைரியம் வருது”

என்று இவர் சொல்ல, அவர் தலையை குனிந்து கொண்டே போய் விட்டார்.

நான் மெல்லமாய் அந்த மருமகளைக் கேட்டேன்.

“உங்க மாமியார் மேல உங்களுக்கு கோபம் இருந்தது. ஆனா இப்போ அவங்களுக்கு துணையா இருந்தீங்க? அந்த பொண்ணுங்க கூட அவங்களை அலட்சியம் செஞ்சாங்க”

நான் முடிப்பதற்குள் பாட்டியே பதில் சொன்னார்.

“என் பேரன், பேத்தி கூட சில சமயம் என்னை எடுத்தெறிஞ்சு பேசுவாங்க, அதுக்காக அவங்களுக்கு என் மேல பாசம் இல்லாம போயிடுமா? இல்லை நாந்தான் அவங்களை வெறுத்துடுவேனா? ஒரு பொண்ணுக்கு பிரச்சினை வரும் போது எனக்கென்னனு அலட்சியப் படுத்தினா, அப்புறம் நான் என்ன மனுசப் பிறவி? அந்த பொண்ணு சாப்பிடறதோ, உடுத்தறதோ எனக்கு பிடிக்காம இருக்கலாம். அதுக்காக அதை அசிங்கப்படுத்தற உரிமை எனக்கும் கிடையாது, யாருக்கும் கிடையாது”

பாட்டியின் மகனும் மருமகளும் இப்போது அவரைப் பார்த்த பார்வையில் பாசமும் பெருமிதமும் வெளிப்பட்டது.

ரயில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தது.

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. அருமையான கதை! கடைசியில் அந்த பாட்டி சொன்ன வார்த்தைகள் சூப்பர்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. அருமை சார். நன்றி.

    ReplyDelete