Monday, November 2, 2015

மோடியும் சரியில்லை, இந்த லேடியும் கூட....



சென்ட்ரலை மிஞ்சுது ஸ்டேட்




சென்ட்ரலும் சரியில்ல,
ஸ்டேட்டும் சரியல்ல.

மோடியும் சரியில்ல,
இந்த லேடியும் சரியல்ல.

கிட்டத்தட்ட ஜனகராஜ் பாணியில் இவ்வாறுதான் மக்கள் புலம்ப வேண்டும் போல இருக்கிறது. சகிப்புத்தன்மை கொஞ்சமும் இல்லாத, மாற்றுக் கருத்துக்கள் உள்ளவர்களை, மாற்று மதத்தவர்களை, இவர்களுக்கு உவப்பில்லாத உணவுகளை உட்கொள்பவர்களை இந்தியாவிலிருந்து வெளியேறு என்று சொல்கிற சர்வாதிகார அரசு மத்தியரசைக் கொண்டுள்ளோம். இந்தியா இதுவரை காணாத ஒரு மோசமான பிரதமரை இப்போது காண்கிறது.  

மோடியின் சகாக்களின் கேவலமான நடவடிக்கைகள், அவர்கள் உதிர்க்கும் அபத்தமான கருத்துக்கள், காவிகளின் சீர்குலைவு முயற்சிகளுக்கு எதிராக நாடெங்கிலும் உள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் தங்களின் கண்டனத்தை அறிக்கைகள், விருதுகளை திருப்புதல் என்று பல வடிவங்களில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். மோடி ஒரு மோசடிப் பேர்வழி என்ற உண்மையை மக்கள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கியுள்ளார்கள்.

இந்த நேரத்தில்தான் மோடிக்கு தான் கொஞ்சமும் சளைத்தவர் இல்லை என்பதை தமிழகத்து அம்மையார் நிரூபித்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி என்று ஒன்று நடக்கிறதா என்று மக்களுக்கு சந்தேகம் உண்டு. ஏனென்றால் போயஸ் தோட்டத்திலோ அல்லது கொடநாடு மாளிகையிலோ ஒரு இரும்புத்திரை அமைத்துக் கொண்டு தனது வாழ்க்கையையும் ஆட்சியையும் 110 விதியின் கீழ் நடத்துகிறவர் அல்லவா அவர்! தனது கட்சிக்காரர்களையே சந்திக்க விரும்பாதவருக்கு மக்களின் பிரச்சினைகள் பற்றி எப்படி தெரியும்? அதனால்தான் ஆட்சி நடக்கிறதா என்ற ஐயம் உள்ளது.

ஆனாலும் தானும் இருக்கிறேன், ஆட்சியும் நடக்கிறது என்பதை அம்மையார் அவ்வப்போது சில தாக்குதல்களை நிகழ்த்தி காண்பித்துக் கொள்வார்.

இப்போதும் இரண்டு தாக்குதல்களை நடத்தி தான் உயிர்ப்போடு இருப்பதை நிரூபித்துள்ளார்.

“டாஸ்மாக்கை மூடு” என்று பாடியதற்காக மகஇக பாடகர் கோவனை நள்ளிரவில் கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் தள்ளியுள்ளனர். தமிழகத்தின் அத்தியாவசியமான நிறுவனமல்லவா டாஸ்மாக்? தமிழர்களின் கலாச்சார பெருமையல்லவா தண்ணி அடித்தல்? அது எப்படி டாஸ்மாக்கை மூடச் சொல்வது? விஸ்வாமித்திரன் சாபம் கொடுப்பது போல கோவனுக்கு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறைவாசம் அளித்து விட்டார்கள்.

அம்மையார் போல வேடம் அணிந்துள்ளார்கள், அம்மையாரை பழிக்கிறார்கள், மோடியை பழிக்கிறார்கள் என்றெல்லாம் காரணம் சொல்லப் படுகிறது. உங்களால் எதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லையோ, அதற்கு எதிராக அவதூறு வழக்கு போடுங்களேன். அதுதான் உங்களுக்கு கை வந்த கலையாயிறே! அவதூறு வழக்குகள் போடுவதிலே உங்கள் கின்னஸ் சாதனையை மிஞ்ச யார் உண்டு இங்கே?

தமிழக குடிமகன்களின் போதை தெளிந்தால் உங்களின் ஆட்சிக் கட்டில் நிலைகுலைந்து போகும் என்பதால்தானே யாராவது டாஸ்மாக்கை மூடு என்று சொன்னால் கோபம் வருகிறது! டாஸ்மாக்கை நம்பி இருபத்தி நான்கு மணி நேரம் இயங்கும் மதுபான ஆலைகளுக்கு சொந்தக்காரர்கள் யார் என்பது ஊரறிந்த ரகசியமாயிற்றே! அதிலே கை வைக்க நினைக்க யாரையும் அவ்வளவு சுலபத்தில் விட்டு விட முடியுமா? அதனால்தான் ஏவல்துறை நள்ளிரவுக் கைது நடத்தியிருக்கிறது.

இந்த கைதின் விளைவாக நடந்துள்ள ஒரே ஒரு நல்ல விஷயம் அரசும் எதிர்பார்க்காதது. எந்த பாடலுக்காக கோவன் கைது செய்யப்பட்டாரோ அந்தப் பாடல் இன்று சமூக வலைத்தளங்கள் மூலமாக ஆயிரக்கணக்கான மக்களை அடைந்திருக்கிறது. பார்ப்போம் எத்தனை பேரை இவர்களால் கைது செய்ய முடியும் என்று!

அடுத்த தாக்குதல் திருவண்ணாமலையில் நடந்தது.

“எங்கள் உணவு, எங்கள் உரிமை” என்ற முழக்கத்தோடு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நேற்று மாட்டுக்கறி விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கான அனுமதியை கடைசி நிமிடத்தில் ரத்து செய்து தடை விதித்தது.

மதவெறி இயக்கங்களுக்கும் வினாயகர் சிலை ஊர்வலங்களுக்கும்  விழுந்து விழுந்து பாதுகாப்பு கொடுக்க திரள்கிற ஏவல்துறை இப்போதும் திரண்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க அல்ல. அந்த இயக்கத்தை நசுக்குவதற்கு. இயக்கத்தில் ஈடுபட்ட தோழர்களை தாக்குவதற்கு, துரத்தி துரத்தி அடிப்பதற்கு, பலவந்தமாக இழுத்துப் போய் வேனில் ஏற்றுவதற்கு, பத்திரிக்கையாளர்களை அசிங்கமாக பேசி விரட்டுவதற்கு.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் பி.சம்பத், பொதுச்செயலாளர் தோழர் கே.சாமுவேல்ராஜ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க துணைப் பொதுச்செயலாளர் தோழர் கருணா, திருவண்ணாமலை மாவட்டத்தின் முன்னணித் தலைவர்கள் தோழர்கள் வீரபத்திரன், சிவகுமார் ஆகியோர் உள்ளிட்ட பல தலைவர்களை பிடித்து இழுத்துப் போயிருக்கின்றனர்.

தமிழக அரசு போராட்டக்காரர்கள் மீது அதிகார வன்முறையை ஏவி விடுவது புதிதல்ல.

இப்போது மாட்டுக்கறி பிரச்சினையில் இவ்வளவு வன்மத்தை வெளிப்படுத்த வேண்டியதின் அவசியம் என்ன?

காவிகளின் செயல்திட்டத்தோடு அனுசரித்துப் போக தயாராக இருக்கிறேன் என்று மோடிக்கு இந்த லேடி கொடுத்துள்ள சமிஞ்ஞையா?

பேயரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று பாரதி எழுதியதை படித்துள்ளோம்.

பிணங்கள் தின்னும் பேயரசுகளுக்கு மாட்டுக்கறி உண்பது எப்படி பிடிக்கும்?   

No comments:

Post a Comment