Wednesday, January 13, 2016

ஜனாதிபதியாக முடியும். கவுன்சிலராக ??????????





ஹரியானா மாநில உள்ளாட்சி சட்டம் பற்றியும் அது நியாயமே என்று சொல்லியுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள அபத்தங்கள் குறித்தும் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு கே.சந்துரு அவர்கள் ஹிந்து நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையினை கீழே அளித்துள்ளேன்.






முழுமையான கட்டுரையை நீங்கள் படித்திருப்பீர்கள்.

படிக்காதவர்களுக்காக சிறு துளிகள்.

பத்தாவது படித்து தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்தான் பஞ்சாயத்து வார்டு மெம்பராக முடியும் என்று ஹரியானா மாநிலச் சட்டம் சொல்கிறது. வீட்டில் கழிவறை இல்லாவிட்டாலோ மின் கட்டணத்தை செலுத்தாவிட்டாலோ கூட அவர்களால் போட்டியிட முடியாது என்றும் அச்சட்டம் சொல்கிறது.  அது சட்டபூர்வமானது என்று உச்ச நீதிமன்றமும் ஒப்புக் கொள்கிறது.

இச்சட்டத்தின் மூலம் ஹரியானா மாநிலத்தில் உள்ள 96 லட்சம் வாக்காளர்களில் 42 லட்சம் பேர் போட்டியிட தகுதியிழப்பார்கள். பட்டியல் இனத்தவர்களில் ஆண்களில் 41 % மும் பெண்களில் 68 % மும் தகுதி இழப்பார்கள் என்பதை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.

பல மாநிலங்களில் சட்ட மேலவை உண்டு. அவற்றில் பட்டதாரி தொகுதிகளும் உண்டு. பட்டதாரிகள் மட்டுமே வாக்களித்து தேர்ந்தெடுக்கும் அத்தொகுதிகளில் போட்டியிடுபவர்கள் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. தாங்கள் தேர்ந்தெடுப்பவர் மேலவை உறுப்பினராக செயல்படுவதற்கான ஞானமும் அனுபவமும் உள்ளவரா என்பதை வாக்களிப்பவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று 1972 ல் உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது.

கடந்த எழுபது வருட தமிழக வரலாற்றைப் பார்த்தால் பத்தாவது வரை படிக்காத ஏழு பேர்தான் முதலமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்.

மத்தியரசு நிறைவேற்றியுள்ள சட்டத்தின் படி எட்டாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வீடே இல்லாதவர்களிடம் கழிப்பறையை எதிர்பார்ப்பது எப்படி சரியாக இருக்கும்? அதை உருவாக்கித்தர வேண்டிய பொறுப்பு உள்ளாட்சிகளுடையதுதானே?

மிக முக்கியமாக சட்டங்களை இயற்றும் இடங்களான சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு எந்த ஒரு கல்வித் தொகுதியும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதையும் நான் மனதில் கொள்ள வேண்டும்.

கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட கல்வித்தகுதி வேண்டும் என்று சொல்கிற உச்ச நீதிமன்ற நீதிபதிகளை தேர்ந்தெடுக்கிறவர், பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறவர் இந்திய ஜனாதிபதி.

ஜனாதிபதியாக எந்த ஒரு கல்வித் தொகுதியும் அவசியம் இல்லை.

ஆக மொத்தத்தில் பாஜக மாநில அரசு, பஞ்சாயத்துக்களை சாமானிய மனிதர்களுக்குப் பதிலாக மீண்டும் பண்ணையார்களிடம் ஒப்படைக்கவே விரும்புகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதற்கு உச்சநீதிமன்றமும் ஒத்துழைக்கிறது.

3 comments:

  1. பொங்கல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. விநோதமான சட்டங்கள்! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
    மகிழ்வோடு நவில்கின்றேன்
    கனிவோடு ஏற்றருள்வீர்

    ReplyDelete