Wednesday, March 23, 2016

பாபர் மசூதியில் வரையப்பட்ட ஓவியம்




எழுத்தாளரும் வங்கி ஊழியர் இயக்கத் தலைவருமான தோழர் ஜா.மாதவராஜ் எழுதிய அற்புதமான பதிவை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். பாபர் மசூதியில் பகத்சிங்கின் ஓவியம் வரையப் பட்ட செய்தி நான் இன்று அறிந்து கொண்ட புதிய தகவல்.


தேசத்தின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை நீத்த உண்மையான புரட்சியாளர்களுக்கு, பிரிட்டிஷ் அரசின் தேசத் துரோகிகளுக்கு 
வீர வணக்கம்


நன்றி  தோழர் மாதவராஜ்.





சட்லெஜ் நதியின் கரையோர ஊரான பெரோஸ்பூரில் சிறுவர்கள் ஆச்சரியமாக அந்த ஹெலிகாப்டரை பார்க்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் மார்ச் 23ம் தேதி, இந்த உற்சாகத்தை அவர்களுக்கு தந்து செல்கிறது. பஞ்சாப் மாநில முதல்வர் விண்ணிலிருந்து தரையிறங்கி அந்த மூன்று பேருக்கும் வணக்கம் செலுத்தி பறக்கிறார். சிறுவர்கள் மீண்டும் விண்ணைப் பார்த்து சத்தம் எழுப்புகிறார்கள். ஓடுகிறார்கள். பகத்சிங் அங்குதான் ராஜகுருவோடும், சுகதேவோடும் அந்த மண்ணில்தான் கலந்து, அடுத்த தலைமுறையின் காலடி ஓசைகளை கேட்டபடி இருக்கிறார்.

அங்கு மட்டும் அவர்கள் இல்லை. டான் நிறுவனம் நடத்தும் பத்திரிக்கையொன்றில் ஜாவேத் நக்வி எழுதிய கட்டுரை மிக முக்கியமான ஒரு தகவலை சொல்கிறது. இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் தெற்குச்சுவரின் உட்புறத்தில் கரியால் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் படங்கள் வரையப்பட்டிருந்திருக்கின்றன. 1991ம் வருடம் அங்கு சென்றிருந்தபோது நக்வி அதை பார்த்திருக்கிறார். ஆளுயரத்திற்கு மிக நேர்த்தியாக இருந்திருக்கின்றன. யார் வரைந்தார்கள், எப்போது வரைந்தார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை. எதோ போகிற போக்கில் பகத்சிங் வரையப்பட்டிருக்க முடியாது என்பது மட்டும் தெளிவாகிறது. "நான் ஒரு மனிதன். மனித சமூகத்தை பாதிக்கும் அனைத்தும் என்னோடு சம்பந்தப்பட்டவையே" என்று சிறைக்குள் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட நோக்கத்தோடுதான் அங்கு காட்சியளித்திருக்க வேண்டும்.
தனது இருபத்தொன்றாம் வயதில் 'மதமும் விடுதலைப் போராட்டமும்' என்று வகுப்புவாதத்தின் அபாயங்களைச் சுட்டிக் காட்டிய சிந்தனையாளர் அவர். 

லாகூர் கலவரங்களுக்குப் பிறகு அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். "முழு சுதந்திரத்தின் அர்த்தம் என்பது பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து விடுபடுவது மட்டுமல்ல...அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களும் சகோதரர்களாக வாழும் இணக்கமான ஒரு சூழலை ஏற்படுத்துவது என்பதும் ஆகும்." என்ற வாக்கியம் அவரது பார்வையின் வீரியத்தையும், தெளிவையும் நமக்கு உணர்த்துகிறது.

இளமையின் துணிவும், தேசப்பற்றும், அளப்பரிய தியாகமும் கொண்ட உருவமாகவே பொதுவாக பகத்சிங் முன்வைக்கப்பட்டிருக்கிறார். அதையும் தாண்டி ஆழமான புரிதல் கொண்டவராய், பிரச்சினைகளுக்கு தீர்க்கமான முடிவுகளை யோசிக்கிறவராய் இருந்திருக்கிறார். இருபத்து மூன்று வயதில் இந்த மக்களைப் பற்றி, விடுதலையைப் பற்றி, அனைவருக்குமான தேசம் பற்றி தனது இலட்சியங்களை அறிவுபூர்வமாக முன் வைத்திருக்கிறார். அதுதான் பாபர் மசூதியின் சுவரில் அவரது உருவம் வெளிப்பட காரணமாயிருந்திருக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் குண்டுகள் வீசியதற்காகவும், சாண்டிரஸை கொலை செய்ததற்காகவும் நடந்த வழக்கு முடிந்திருக்கிறது. தீர்ப்பு எந்த நாளிலும் வரலாம். சுகதேவ் தனக்கு இருபது வருடம் ஆயுள் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கிறார். பகத்சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அப்படி ஆயுள் தண்டனை கிடைத்தால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், வாழ்வு அல்லது மரணம் என்றும் குறிப்பிடுகிறார். பகத்சிங் அவருக்கு எழுதுகிற பதில் அந்த இளைஞனின் தோளில் உட்கார்ந்து நம்மை உலகத்தை பார்க்கச் சொல்கிறது. "எனக்கு மரண தண்டனை. உங்களை நாடு கடத்தப் போகிறார்கள். நீங்கள் வாழ வேண்டும். புரட்சியாளர்கள் மரணத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு சூழலையும் எதிர்நோக்குவார்கள் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டி நீங்கள் வாழ வேண்டும். உலகத்தின் துயரங்களிலிருந்து விடுபட மரணம் ஒரு வழியாய் இருந்திட முடியாது." என்னும் அவரது வார்த்தைகளை செவிடர்களுக்கும் கேட்கும்படியாய் உரக்க வாசிக்க வேண்டும்.

1931, மார்ச் 23ம் தேதி அந்த திங்கள் கிழமை இரவு 7.33 மணிக்கு நடந்தது. "இன்குலாப் ஜிந்தாபாத்' வீர முழுக்கமிட்ட பகத்சிங்கின் குரல்வளையை இறுக்கிய தூக்குக்கயிறு அவரது கடைசி நேரத் துடிப்புகளோடு அதிர்ந்து மெல்ல அசையாமல் போனது. தேசம் தனது வீரப்புதல்வர்களை பறி கொடுத்து நின்றது. தன்னெழுச்சியாய் கடைகள் அடைக்கபட்டன. ஊர்வலங்களும், பிரார்த்தனைகளும் நடைபெற்றன. நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் லாகூர் மிண்டோ பூங்காவில் கூடி நின்று பிரார்த்தனை செய்தார்கள். சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் வங்காளத்தில் மிகப்பெரிய ஊர்வலம் நடைபெற்றது. பகத்சிங் என்னும் பேரே ஒரு சக்தி பிறக்கும் மந்திரச் சொல்லாகிப் போனது. பஞ்சாபில் பெரும்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் அன்று அடுப்பு பற்ற வைக்கவில்லை.

“பகைவர்களே இல்லை என்கிறாயா?
அந்தோ என் நண்பனே!
இப்பெருமிதம் மிகவும் அற்பமானது
உனக்கு எதிரிகள் இல்லாது போனால்
நீ செய்திருப்பது அற்ப சொற்பமானதே
துரோகி யாரையும் வீழ்த்தியிருக்க மாட்டாய்
தவறினை ஒருபோதும் சரி செய்திருக்க மாட்டாய்
போராட்டத்தில் கோழையாய் இருந்திருப்பாய்”

சார்லஸ் மகாய் எழுதிய இந்தக் கவிதையை சிறைக்குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தார் பகத்சிங். ஆத்திரமும், வேகமும் கொண்ட அவரின் பரிணாமம் மிக நிதானமானதாய் இருக்கிறது. அதே நேரத்தில் மிக உறுதியானதாய் இருந்திருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவீரமாக ஈடுபட்ட பலர் பின்னாளில் ஆன்மீக வாழ்விற்குள் தங்களை புதைத்துக் கொண்டு ஒதுங்கிப் போயிருக்கிறார்கள். பகத்சிங்கின் குரல் இந்த இடத்தில் தனித்து ஒலிக்கிறது. "நான் ஏன் நாத்திகனாய் இருக்கிறேன்' என்னும் கட்டுரையில் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பின் தொடர வைக்கின்றன. எழுப்பும் கேள்விகள் ஏற்கனவே இங்கு தயாராய் இருக்கும் பதில்களை வீழ்த்துகின்றன. "கடவுளை நம்பும் ஒரு இந்து தனது மறுபிறப்பில் ராஜாவாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். ஒரு முகம்மதியனோ, கிறிஸ்துவோ துயரங்களிலிருந்து விடுபட்டு மோட்சத்தின் செல்வங்களை அனுபவிக்கலாம் என கனவு காண்கிறான். எனக்கு, என் காலுக்கடியில் இருக்கும் இந்த கணமே இறுதியானதாய் தெரிகிறது" என்று சென்றுகொண்டே இருக்கிறார்.

கனவுகளை, இலட்சியங்களை இந்த மண்ணில் விதைத்துவிட்டுப் போயிருக்கிறார் பகத்சிங். அவைகளை இன்னும் இந்த மண் அடைகாத்துக் கொண்டு இருக்கிறது. பாபர் மசூதியில் வரையப்பட்டிருந்த பகத்சிங்கின் சித்திரம் உயிர்பெற்று, விதைகளையும் மண்ணையும் கீறிக்கொண்டு ஆயிரம் ஆயிரமாய் வெளிவரட்டும். நம் அறிவும் கண்களும் ஏங்குகிற காட்சியாக அது இருக்கட்டும்.

No comments:

Post a Comment