Wednesday, March 9, 2016

மோடியின் கருணையா?




வருங்கால வைப்பு நிதியின் முதிர்வுத் தொகைக்கு வருமான வரி விதிக்கும் முடிவை மத்தியரசு திரும்பப் பெற்றதாக நேற்று அருண் ஜெய்ட்லி அறிவித்தார். ஒட்டகத்தின் மீது ஏற்றப்பட்ட பெரும் சுமையில் சிறிய பொருள் ஒன்றை அகற்றினால் அது தனது பாரம் குறைந்ததாக ஏமாறும். அது போல நடுத்தர மக்களை ஏமாற்றி விட்டதாக பாஜக வகையறாக்கள் நம்பிக் கொண்டிருக்கலாம். 

வருமான வரி விலக்கை எதிர்பார்த்த நடுத்தர மக்களின் ஏமாற்றத்தை வருங்கால வைப்பு நிதிக்கான வருமான வரி  விதித்தலை திரும்பப் பெற்றதன் மூலமாக திசை திருப்பி விட்டதாக மனப்பால் குடிக்கிறது. மோடியை ஆதரித்த நிலையிலிருந்து மாற முடியாத நிர்ப்பந்தத்தில் உள்ள ஒரு சில அதி மேதாவிகள்  வேண்டுமானால் அப்படி இருக்கலாம். ஆனால் பெரும்பாலான நடுத்தர மக்கள் இன்று அரசின் பொருளாதாரக் கொள்கைகள் முதலாளிகளை வாழ்விப்பதற்கானது மட்டுமே என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்கள். 

தொழிலாளர்களின் ஓய்வுகால சேமிப்பை கொள்ளையடிக்கிற முடிவுதான் வருங்கால வைப்பு நிதி முதிர்வுத் தொகைக்கு வரி போடுவது என்பது. இன்று அந்த முடிவு மாற்றப்பட்டுள்ளது என்றால் அதற்கு நாடெங்கிலும் எழுந்த கடுமையான எதிர்ப்புதான் காரணமாகும். பாஜக சங்கமான பி.எம்.எஸ் கூட எதிர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

ஆனால் காவிக்கூட்ட  அதி மேதாவிகள் என்ன சொல்கிறார்கள்?

மோடி தொழிலாளர்கள் மீது கருணைப் பார்வை செலுத்தியதால்தான் வரி விதிக்கும் முடிவு திரும்பப் பெறப்பட்டதாம். அப்படியென்றால் வரி விதிக்கப்படுவது அவருக்கு தெரியாதா? மோடிக்கு தெரியாமல் சுயேட்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் அமைச்சர்களுக்கு இருக்கிறதா என்ன? அனைத்து முக்கியமான அமைச்சரவைகளிலும் குஜராத் மாநில அதிகாரிகள்தானே நிரப்பப்பட்டுள்ளனர்?

பட்ஜெட்டிற்குப் பிறகு செலுத்திய கருணைப்பார்வையை மோடி பட்ஜெட்டிற்கு முன்பே செலுத்தி அந்த முன்மொழிவே வராமல் தடுத்திருக்கலாமே? அப்போது என்ன அவர் கண் சிகிச்சை செய்து கொண்டிருந்தாரா?

பாவம் மோடிக்கு தொழிலாளர்களின் நண்பன் என்ற அடையாளத்தை கொடுக்க அருண் ஜெய்ட்லியை வில்லனாக்கி விட்டார்கள் !!!

No comments:

Post a Comment