Monday, April 25, 2016

கண்ணீர் துடைத்து சாட்டையெடுங்கள் யுவர் ஹானர்





“நீதித்துறையை செயல்பட அனுமதியுங்கள்” என்று கண்ணீர் பொங்க கதறியுள்ளார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு டி.எஸ்.தாகூர். நீதிபதிகளின் காலியிடங்களை நிரப்ப முடியாத நிலையை மாற்றிட ஒத்துழையுங்கள் என்று மத்தியரசிடம் மன்றாடியுள்ளார். நானூற்றுக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதென்றும் நூற்றி அறுபத்தி ஒன்பது காலியிடங்களுக்கு மத்தியரசு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் அவர் பேசினார்.

நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் மத்தியரசு எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறது என்றும் குற்றம் சுமத்திய தாகூர், அதனால் ஆயிரக்கணக்கான ஏழைகள் சிறைகளில் வாடுகின்றனர் என்றும் வருத்தப்பட்டுள்ளார்.

“சோதனை மேல் சோதனை” பாட்டின் இடையே “காய்ஞ்சு போன நதியெல்லாம் கங்கையைப் பார்த்து ஆறுதல் கொள்ளும். அந்த கங்கையே வற்றிப் போனா?” என்று வருகிற வசனம் போல் உள்ளது தலைமை நீதிபதியின் பேச்சு.

மத்திய அரசையும் கட்டுப்படுத்தும் நிலையில் உள்ளது உச்ச நீதிமன்றம். தேவைப்பட்டால் அவதூறு வழக்கு கூட தொடுக்க முடியும். மத்தியரசை கண்டிக்கவும் அதனால் முடியும். அப்படி அதிகாரம் இருக்கையில் கண்ணீர் எதற்கு யுவர் ஹானர்?

நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும் என்றும் காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்ற உங்களின் நியாயமான எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

அதே நேரம் மக்களாகிய எங்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வீர்களா யுவர் ஹானர்?

நீதிபதிகளை நீதிபதிகளே தேர்ந்தெடுக்கும் கொலோஜியம் முறையை ஏன் பிடிவாதமாக பின்பற்ற விரும்புகிறீர்கள்? நீதிபதிகள் நியமனத்தில் ஏன் வெளிப்படைத்தன்மை இருப்பதை மறுக்க நினைக்கிறீர்கள்?

நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால்தான் ஒரு நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்ற அளவிற்கு பாதுகாப்பு ஏன் தேவைப்படுகிறது?

நீதித்துறையிலும் ஊழல் மலிந்து வருகிறது என்ற குற்றச்சாட்டைப் போக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?

மரியாதைக்குரிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களே, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சாட்டையை கையிலெடுங்கள். உங்கள் நடவடிக்கைகள் நீதிபதிகளின் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரவும், புல்லுருவிகளை அகற்றி நீதித்துறையின் மாண்பையும் மக்கள் அதன் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாக்கவும் வழி வகுக்கட்டும்.

2 comments: