Sunday, September 18, 2016

வைர விழாவும் அந்த முன்னாள் டைப்பிஸ்டும்




எல்.ஐ.சி நிறுவனத்தின் வைர விழா ஆண்டு இது. இன்சூரன்ஸ் வாரம் மிகுந்த உற்சாகத்தோடு தொடங்கியது பற்றியும் மும்பையில் நடைபெற்ற விழாவில் அருண் ஜெய்ட்லி எல்.ஐ.சி க்கு எதிராகவே நன்றி கெட்டு  நடந்து கொண்டதையும் முன்னரே எழுதியுள்ளேன்.

எல்.ஐ.சி நிறுவனம் இன்று வைர விழா கொண்டாட முடிகிறது என்றால் அது மிகவும் முக்கியமானவர் தோழர் சுனில் மைத்ரா. 

எண்பதுகளின் முதல் பகுதியில் எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிளப்பதற்கான ஒரு மசோதாவை இந்திரா காந்தியின் நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் முன் வைக்கிறார்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மிகக் கடுமையான போராட்டத்தை, பிரச்சாரத்தை, மக்கள் கருத்துத் திரட்டலை இந்திய வீதிகளில் நடத்துகிறது.

அதே போராட்டத்தை நாடாளுமன்றத்திற்குள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது. மக்களவையில் வீரியம் மிகுந்த அப்போராட்டத்தை தலைமையேற்று நடத்துகிறவர் தோழர் சுனில் மைத்ரா. சுதந்திரப் போராட்டத்தில் இரண்டாண்டு சிறைத்தண்டனையை அனுபவித்தவர். தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணியில் சேர்ந்தவர். ஏ.ஐ.ஐ.இ.ஏ உருவான பின்பு அதனை வளர்த்தெடுப்பதில் வேகம் காண்பித்ததால் எல்.ஐ.சி நிர்வாகத்தால் கோயம்பத்தூர், நாக்பூர் என்றெல்லாம் கல்கத்தாவிலிலிருந்து மாறுதல் செய்யப்பட்டவர். 

அகில இந்திய இணைச் செயலாளராக இருந்த அவரை மார்க்சிஸ்ட் கட்சி மக்களவைத் தேர்தல் வேட்பாளராக கல்கத்தா வட கிழக்கு தொகுதியில் களமிறக்குகிறது.  அஜித் குமார் பஞ்சா என்ற பிற்காலத்தில் மந்திரியான காங்கிரஸ் காரரை தோற்கடித்து எம்.பி யாகிறார் தோழர் சுனில் மைத்ரா. 

எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிரிக்கிற மசோதா, நாடாளுமன்றத்தின் தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு உட்படுகிறது. அம்மசோதா குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க வேண்டுமென்று ஏராளமான ஆளுமைகள், அமைப்புக்கள் கடிதம் அனுப்புகின்றனர். அதன் பின்னணியில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கடுமையான உழைப்பு இருந்தது. 

தேர்வுக்குழுவின் செயலாளராக இருந்த தோழர் சுனில் மைத்ரா, அந்த வாய்ப்பை பயன்படுத்துகின்றார். நாடெங்கிலும் தேர்வுக்குழு பயணம் செய்து கருத்துக்களை திரட்டுகிறது. எல்.ஐ.சி நிறுவனம் ஒரே நிறுவனமாக நீடிக்க வேண்டும் என்பதுதான்  அனைவரும் வலியுறுத்தும் கருத்தாக இருந்தாலும் தேர்வுக்குழுவின் பரிந்துரை என்னவோ ஆளும் கட்சியின் முடிவை ஒட்டியே அமைகிறது.

மசோதா வாக்கெடுப்பிற்கு வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிறது. தோழர் சுனில் மைத்ரா மக்களவையில் புயலாக உரையாற்றுகிறார். அவரது ஆணித்தரமான வாதங்களுக்கு அரசால் பதிலளிக்க முடியவில்லை. வாக்கெடுப்பு நடக்காமலேயே மக்களவை ஒத்தி வைக்கப்படுகிறது. மசோதா காலாவதியாகி விடுகிறது.

அடுத்த கூட்டத் தொடர் தொடங்கும் முன்பு அரசியலில் சில எதிர்பாராத நிகழ்வுகள். இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டு ராஜீவ் காந்தி பிரதமராகிறார்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ராஜீவ் காந்தியை சந்தித்து எல்.ஐ.சி ஏன் ஒரே நிறுவனமாக நீடிக்க வேண்டும் என்பதை விபரமாக விளக்குகிறது. தோழர் சுனில் மைத்ரா அக்காரணங்களை விளக்கி கடிதமாகவும் அளிக்கிறார். 

சில தினங்களுக்குப் பிறகு பிரதமர் ராஜீவ் காந்திக்கு தோழர் சுனில் மைத்ராவிற்கு ஒரு கடிதத்தை அனுப்புகிறார். (ஆக கடிதங்களுக்கு பதில் அனுப்பும் நாகரீகம் ஒரு காலத்தில் இருந்திருக்கிறது) 

அக்கடிதம் என்ன சொன்னது?

"எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிளக்கும் திட்டத்தை நாங்கள் கைவிட்டு விட்டோம்."



அன்றைக்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் தோழர் சுனில் மைத்ராவும் நடத்திய போராட்டமே எல்.ஐ.சி யை ஒரே நிறுவனமாக பாதுகாத்திருக்கிறது. எல்.ஐ.சி யின் வளர்ச்சி, தேசத்திற்கு அதன் பங்களிப்பு, வைரவிழா எல்லாமே அதனால் மட்டுமே சாத்தியமானது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் மார்க்சிஸ்ட் கட்சியின் இதழான "பீப்பிள்ஸ் டெமாக்ரஸி" யின் ஆசிரியராகவும் தன் இறுதி மூச்சு வரை தோழர் சுனில் மைத்ரா செயல்பட்டார்.

இன்று அவரது இருபதாவது நினைவு நாள்.

தலைப்பு தொடர்பாக எதுவுமே எழுதவில்லை என்ற கேள்வி வருகிறதா? 

ராஜீவ் காந்தியை சந்தித்து பேசி விட்டு கிளம்புகையில் தோழர் சுனில் மைத்ராவைப் பார்த்து அவர் கேட்கிறார்.

எல்.ஐ.சி யில் நீங்கள் என்னவாக வேலை பார்த்தீர்கள்?

அவர் சொன்ன பதில்

டைப்பிஸ்ட்.

தோழர் சுனில் மைத்ரா நினைவு நாள் சிறப்புக் கருத்தரங்கள் நாளை நடைபெறவுள்ளது. அதற்கான அழைப்பிதழ் கீழே

 




No comments:

Post a Comment