Friday, September 23, 2016

போலிகளிடம் எச்சரிக்கை - அருகிலேயே இருப்பார்கள்





கடந்த வாரம் முக நூலில் இரண்டு சர்ச்சைகளை காண முடிந்தது. பெங்களூரைச் சேர்ந்த பதிவர் கிர்த்திகா தரனும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யாவுமே முகநூல் போலிகளின் தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள்.

திருமதி கிர்த்திகா தரன் மீதான தாக்குதல் என்பது தரம் தாழ்ந்து நாகரீகம் அற்று படு கேவலமாக இருந்தது. தனி நபர் தாக்குதல் என்பது எவ்வளவு கீழாக போக முடியும் என்பதற்கு அதுவே உதாரணம். ஊடகத்தில் இருக்கும் ஒரு பெரும்புள்ளிதான் ஆரம்பித்து வைத்தார். அதன் பின்பு களத்திற்கு வக்கிரம் ஒழுகும் நாக்கோடு போலிப் பெயர்களோடு ஒரு கோஷ்டியே வந்தது. அவர் பிரபலமாக இருப்பதும் அவரது பதிவுகளுக்கு அதிகப்படியாக விழுகிற லைக்ஸூம் பின்னூட்டங்களுமே இந்த போலிகளின் பொறாமைக்குக் காரணம்.

தோழர் ஆதவன் தீட்சண்யா பிரச்சினை வேறு. விடுதலைச் சிறுத்தைகள் என்ற பெயரில் யாரோ ஒருவன் உள்ளே நுழைந்து அபத்தமான பல பின்னூட்டங்கள் போடுகிறார். அவர் பெயர் அமைந்திருக்கிற கட்சியின் கொள்கைகளுக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் காவிகளைப் போலவே பேசிக்கொண்டிருந்தார் அவர். தீவிரவாதி என்று குற்றம் வேறு சாட்டியிருந்தார்.

ஆணாதிக்க சிந்தனையும் காவிகளின் சகிப்பின்மையுமே போலிகளின் தாக்குதல்களுக்குக் காரணம். தங்களால் இயலாத ஒன்றை வேறு ஒருவர் செய்வதை தாள முடியாத பொறாமை கூட போலிப் பெயருக்குள் புகலிடம் பெற்று தாக்குதல் நடத்த வைக்கும்.   "தீவிரவாதிகள் அசிங்கமாக முகமெல்லாம் தழும்போடு இருக்க வேண்டும் என்பதில்லை. ஸ்மார்ட்டாக டீஸண்டாகக் கூட இருப்பார்கள்" என்று  அன்பே சிவம் படத்தில் கமல் சொல்வது இந்த போலிகளுக்கும் பொருந்தும்.

எனக்கும் அப்படி ஒரு கசப்பான சம்பவம் நடந்திருக்கிறது. எப்படி “விடுதலைச் சிறுத்தைகள்” என்ற பெயரில் தோழர் ஆதவன் தீட்சண்யா மீது தாக்குதல் நடந்ததோ அது போல ஒரு மிகப் பெரிய தலைவரின் பெயரைச் சூட்டிக் கொண்டு ஒரு இழிவான தாக்குதல் என் மீது நடந்தது.

அப்படி தாக்குதல் நடத்திய நபர் யாரென்று நன்றாகவே தெரியும். சமூகத்தில் முற்போக்கு முகமூடி அணிந்து கொண்டு வலம் வந்து கொண்டிருக்கும் அந்த நபர் யாரென்று அம்பலப்படுத்தினால் பலர் அதிர்ச்சியடைவார்கள். இருப்பினும் அதை நான் விரும்பவில்லை. காலமே அப்படிப்பட்டவர்களை அடையாளம் காட்டும் என்பதில் நம்பிக்கை உள்ளவன். தரக்குறைவான தாக்குதல்கள் மூலம் எனது செயல்பாட்டை முடக்க நினைத்து யார்யாரோடோ கைகோர்த்துக் கொண்டு எப்படியெல்லாமோ முயன்றும் தொடர்ந்து தோற்றுப் போகும் தண்டனையே போதும்.

திருமதி கிர்த்திகா தரன் அவர்களுக்கும் தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களுக்கும் நான் சொல்ல விழைவது ஒன்றைத்தான்.

போலிப்பெயர்களில் உங்கள் மீது வன்மம் கக்குபவர்கள் வெளியே யாரோ முகமறியா எதிரிகள் என்று மட்டும் நினைக்க வேண்டாம். உங்களின் நண்பர் என்ற இன்னொரு முகமுடி அணிந்து கொண்டு உங்கள் அருகிலேயே இருக்கக் கூடும். 

போலிகளால் தாக்கப்படும் அனைவருக்குமான எச்சரிக்கை இது.

3 comments:

  1. உண்மைதான்
    அருகில் இருப்பவர்களால்தான் அதிக தொல்லைகள் நேரும்

    ReplyDelete
  2. thakuna
    boligala
    appdiye
    milk-la
    pottu
    saapda vendiyathuthaney
    thozhar?

    ReplyDelete
    Replies
    1. ஏன் அந்த விஷம் மூலம் பாலும் நச்சாகி நான் இறக்க வேண்டும் என்ற விருப்பமா? வெட்கம் கெட்ட அனானியே, உன்னால் கொண்டையை மறைக்கவே முடியவில்லையே!!!

      Delete