Sunday, October 16, 2016

இனிப்பு, கார, அவல் பிடிக் கொழுக்கட்டை



இனிப்பு அவல் கொழுக்கட்டை தொடர்பாக ஒரு புத்தகத்தில் சமையல் குறிப்பு ஒன்றைப் பார்த்தேன். அதை அப்படியே முயற்சிக்காமல் என் பாணியில் முயன்றது. இனிப்போடு சேர்த்து செய்த காரக் கொழுக்கட்டை எனது கண்டுபிடிப்பாக இருந்தாலும் அதற்கு பேடண்ட், காப்பிரைட் எதுவும் பதிவு செய்யப்போவதில்லை. பதிவுலகத்திற்கே அர்ப்பணித்து விட்டேன்!

முதலில் கெட்டி அவலை நன்றாக வறுத்து ஆறிய பிறகு மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். அதை இரண்டு பங்காக பிரித்து வைத்துக் கொள்ளவும்.

முந்திரியை சின்னச் சின்னதாக உடைத்து நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.

தேங்காயை துறுவி இரண்டு பங்காக பிரித்து வைத்துக் கொள்ளவும்.

ஐந்தாறு பச்சை மிளகாய், கொஞ்சமாக இஞ்சி பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ரெடியா?

இதெல்லாம் டைட்டிலுக்கு முந்தைய காட்சிகள் போல.

இப்போது மெயின் பிக்சருக்குப் போவோம்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகை வெடிக்க விடுங்கள். பிறகு பாதி உளுத்தம்பருப்பை போட்டு வறுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சியை வதக்கவும். பிறகு தேங்காய் துறுவலை போட்டு வதக்கவும். உப்பு சேர்த்துக் கொள்ளவும். இந்த நிலையில் தண்ணீர் ஊற்றி அது கொதித்த பிறகு பொடித்து வைத்த அவலை சேர்த்து கிளறவும். நன்றாக கெட்டியாக வந்த பின்பு தனியாக எடுத்து வைக்கவும்.

படத்தில் பாட்டு வரும் நேரத்தில் வெளியே போவது போல கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு வாட்ஸப், முக நூல் எல்லாம் பார்த்து விட்டு வாருங்கள்.

அடுத்து இன்னொரு வாணலியை எடுத்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே பயன்படுத்திய வாணலியை சுத்தம் செய்து விட்டு அதையே கூட பயன்படுத்தலாம். அதெல்லாம் உங்கள் வசதி.

இதிலே பொடி செய்த வெல்லத்தைப் போட்டு பாகு தயாரியுங்கள். வழக்கமாக பாகு தயாரிக்க கொஞ்சம்தான் தண்ணீர் பயன்படுத்துவார்கள். ஆனால் இதற்கு நிறையவே தண்ணீர் பயன்படுத்துங்கள். கொதிக்கும் பாகில் தேங்காய், முந்திரி எல்லாம் சேர்த்து நன்றாக கொதித்து வருகையில் மீதமுள்ள அவல் பொடியை போட்டு நன்றாக கிளறவும். ஏலக்காய் பொடியும் போடுங்கள். நன்றாக கெட்டியாக வந்த்தும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

இப்போது இடைவேளை நேரம்.

என்ன ரிலாக்ஸாயிட்டீங்களா?

கிளறி வைத்த்தை கையில் வைத்து சின்னச்சின்னதாக கொழுக்கட்டையாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு இட்லிப் பானையில் இட்லி தட்டில் கொஞ்சமே கொஞ்சமாக நெய் தடவி பிடித்து வைத்தவற்றை போட்டு வேக வைக்கவும்.

ஆவி பறக்கிறதா?

இதுதான் கிளைமேக்ஸ் நேரம்.

கொஞ்சம் டென்ஷனாகத்தான் இருக்கிறது. மெல்ல மெல்ல திறக்கிறேன்.

அப்பா!!!!!!!!!!!!

எந்த ஒரு சின்ன குறைபாடும் இல்லாமல் நன்றாக வந்து விட்டது. அந்த நிறைவுதான் மேலே உள்ள நிம்மதிப் பெருமூச்சு.

 
இட்லி பானையிலிருந்து கொழுக்கட்டைகளை எடுத்து பரிமாறவும். தனியாக இணை உணவு (அதாங்க சைட் டிஷ்) எதுவும் தேவைப்படாது.

1 comment:

  1. //எனது கண்டுபிடிப்பாக இருந்தாலும் அதற்கு பேடண்ட், காப்பிரைட் எதுவும் பதிவு செய்யப்போவதில்லை. பதிவுலகத்திற்கே அர்ப்பணித்து விட்டேன்!// Too much

    ReplyDelete