Saturday, July 22, 2017

ஜெமோ . . .உடலே கொழுப்பாக . . .
உடலில் கொழுப்பு இருக்கலாம். கொழுப்பிலே உடல் இருந்தால், அதுதான் ஆசான் என்று அழைக்கப்படும் ஜெமோ/

இடங்கை இலக்கியம்” என்று அவர் சிண்டு முடிய நடத்திய முயற்சியில் அடி வாங்கியதால் வழக்கம் போல மீண்டும் தூற்றியுள்ளார். அதிலே அவரது சுய தம்பட்டம் தவிர வேறெதுவும் வெளிப்படவில்லை. அவரது அற்புத வசைகளை பார்ப்போம். அதற்கான பதிலையும் கீழே கொடுத்துள்ளேன்.

இடதுசாரிகளிலேயே பலர் என்னில் கால்வாசிகூட வாசித்திருக்க மாட்டார்கள். நான் இதே வேலையாக கால்நூற்றாண்டை கடந்திருக்கிறேன். [அதோடு பெரும்பாலானவர்கள் எனக்கு நூலை அனுப்பியும் விடுகிறார்கள்]

உங்களுக்கு வாசிப்பது மட்டும்தான் வேலை. இடதுசாரிகளுக்கு வேலை பெரும்பாலும் போராட்ட களத்தில்தான். மக்களிடம்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். உங்களின் வாசிப்பு அனுபவத்தை விட அவர்களின் கள அனுபவம் இன்னும் மேன்மையானது. பாவம் அந்த பெரும்பாலானவர்கள். உங்களுக்கு புத்தகத்தையும் அனுப்பி பிறகு உங்களிடம் வசையும் வாங்கி விடுகிறார்கள்.

இடங்கை இலக்கியம் என்றெல்லாம் பெயர் மாற்றப்படவில்லைகட்டுரைகளுக்குத் தலைப்பு வைக்கும்போது கவனத்தை ஈர்க்கும்படி, நினைவில்நிற்கும்படி தலைப்புவைப்பது இலக்கியவழக்கம்.

அது வித்தியாசமாக ஒலிப்பதனாலும், வரலாற்றுக்குறிப்பு ஒன்று இருப்பதனாலும்  கொஞ்சம் இலக்கியரசனையும் வாசிப்பும் உள்ள எவருக்கும் அத்தலைப்பு. சுவாரசியமான ஒரு சொல்லாட்சியாகவே தோன்றியது. இந்த எளிய விஷயத்தைக்கூட உணராதவர்கள் என்னதான் இலக்கியம் வாசிக்கிறார்கள்?

சமாளிக்காதீங்க ஆசானே. நீங்க யாரு, எப்பேற்பட்ட அப்பாடக்கர், சொல்வதிலும் சொல்லாமல் விடுவதிலும் நீங்கள் செய்யும் வன்ம அரசியலை நாங்கள் நன்றாகவே உணர்வோம். ஏதோ என்னைப் போல வலைப்பக்கங்களில் எழுதுபவ்ர்கள் வேண்டுமானால் மற்றவர்களை படிக்க வைக்க சுவாரஸ்யமான தலைப்பை வைக்கலாம். நீங்கள்தான் அகில உலக எழுத்தாள சக்ரவர்த்தியாயிற்றே. உங்களின் வெண்முரசு நாவலையே கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று எட்டு நண்பர்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டவராயிற்றே. உங்களுக்கும் கூட இந்த தலைப்புச் சிறை அவசியமா? செய்த தவறை ஒப்புக்கொள்ள மனமின்றி பம்முவது நன்றாகவே தெரிகிறது. 

நீங்கள் வசனம் எழுதிய ஒரு படத்தின் கதை அடிப்படையில் "மாமனாரின் இன்ப வெறி" ஆனால் வேறு ஏதோ தலைப்பு வைத்தீர்களே? கதைக்கு பொருத்தமான சுவாரஸ்யமான தலைப்பை கோட்டை விட்டு விட்டீர்களே.

இவர்கள் ஏன் இப்படி தலைப்பை வைத்துக்கொண்டு பேசுகிறார்கள்? வேறு எதையும் பேசுவதற்கான வாசிப்புத்தகுதி அல்லது அறிவுத்தகுதி இல்லை என்பதனாலேயே. இது ஒருவகை புறணிப் பேச்சு. இதுதான் இவர்களால் இயலும். சூழலின் துரதிருஷ்டம் இது
தலைப்பைப் பற்றி மட்டும் பேசுவதாக சொல்லி தப்பிக்கப் பார்க்காதீர்கள். இடதுசாரிகளைப் பற்றி எழுதுவதற்கான தகுதி உங்களுக்கு இல்லை என்பதுதான் பிரச்சினை. இதிலே நீங்கள் அடுத்தவர்களுக்கு அறிவுத்தகுதி இல்லை, வாசிப்புத் தகுதி இல்லை என்று திமிரோடு எழுதுகிறீர்கள்.
எல்லா தகுதியும் இருக்கிற நீங்கள் என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? மத வெறியை வளர்க்கிறீர்கள். கேடு கெட்டவர்களுக்கு முட்டு கொடுக்கிறீர்கள். பெண்களை இழிவு படுத்துகிறீர்கள். உங்கள் வாசிப்புத் தகுதியை வஞ்சத்தை, நச்சு பரப்ப மட்டுமே பயன்படுத்துகிறீர்கள்.
உழைப்பாளி மக்களுக்காக போராடுபவர்களை வம்புக்கு இழுத்து அதிலே அற்ப சுகம் காணும் உங்கள் அணுகுமுறையும் மாறப் போவது கிடையாது. அதனால் உங்களின் அற்ப குணத்தை அம்பலப்படுத்தும் எங்கள் பணியும் நிற்கப் போவது கிடையாது.
நகைச்சுவை என்ற பெயரில் நீங்கள் வெளிப்படுத்தியுள்ள மதவெறி பற்றித்தான் என்னுடைய அடுத்த பதிவு.

நீயும் அப்பவே செத்து தொலைச்சிருக்கலாம்எங்கள் மகளிர் மாநாட்டில் சி.ஐ.டி.யு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழ் மாநில அமைப்பாளர் தோழர் எம்.மகாலட்சுமி அவர்கள் பேசிய சில விஷயங்களை முன்னர் பதிந்திருந்தேன்.

இன்னொரு முக்கிய செய்தி இங்கே
பட்டாசுத் தொழிலாளர்கள் மத்தியில் பணி செய்து கொண்டிருக்கிறேன். ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டால் தொழிலாளி இறந்து போய் விட்டால் கரித்துண்டாக மாறிப் போய் விடுவார்கள். முதலாளிகள் தந்திரமாக தொழிற்சாலைக்கு வெளியே வைத்து விடுவார்கள்.

கரித்துண்டான அந்த உடல்களை பாயில் சுற்றி ஒரு ரிக்சாவில் ஏற்றுவோம். ரிக்சாவில் ஏற்ற அந்த ரிக்சாக்காரர் மறுத்தால் “இறந்து போனவனும் உன் வர்க்கம்” என்று சொல்லி ஏற்றுவோம். பட்டாசு ஆலையின் முதலாளி வீட்டின் முன்போ அல்லது அலுவலகத்தின் முன்போ அந்த உடலைப் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தால் இழப்பீடு கொடுப்பார்கள்.

எவ்வளவு தெரியுமா? வெறும் இரண்டாயிரம் ரூபாய். இது பதினைந்து ஆண்டுகளூக்கு முன்பு. இப்போதெல்லாம் அரசு உதவி, இழப்பீடு, காப்பீட்டுத் தொகை என்று ஏழு லட்ச ரூபாய் வரை தருகிறார்கள். சங்கம் தொடர்ந்து போராடியதன் விளைவு அது.

அதே நேரம் இன்னும் பலர் இருக்கிறார்கள். அவர்களும் கரித்துண்டுகளே. ஆனால் அவர்கள் உடலில் உயிர் ஒட்டி இருக்கும். உடலெல்லாம் வெந்து போனவர்களாக  முகம் தீய்ந்து போனவர்களாக, எந்த ஒரு வேலைக்கும் அடுத்தவர்களை நம்புபவர்களாக, உயிர் இருந்தும் இல்லாதவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். விபத்தில் அவர்கள் உயிர் பிழைத்திருந்தாலும் வாழ்க்கை அவர்களுக்கு நரகமாக மாறி விட்டது.

இப்படி வேதனை அனுபவிப்பதற்குப் பதிலாக அந்த விபத்தில் இறந்து போயிருக்கலாமே என்று நெருங்கிய சொந்தங்களே சொல்லுமளவிற்கு அவர்கள் வாழ்க்கை ரணகளமாக இருக்கிறது.

அப்படி நடைப்பிணமாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் மனிதர்கள் நிலைமை மேம்பட சங்கம் தொடர்ந்து போராடிக் கொண்டு வருகிறது.


நீயும் சாவு. உன் ஜாதியும் கூட . . .

சில தினங்கள் முன்பாக அலுவலகம் செல்கையில் என்னைக் கடந்து சென்ற வாகனத்தின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த வாலிபனின் டிஷர்ட்டில் பின்னே கீழ்வருமாறு அச்சிடப்பட்டிருந்தது.

நாங்க செத்தாலும்
எங்க ஜாதி சாகாதுடா


சத்ரியன்டா

நடுவிலே அந்த ஜாதி சங்கத்தின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. மாற்றம் முன்னேற்றம் என்று போஸ்டர் அடித்து ஒட்டியவருக்கு சொந்தமான ஜாதி சங்கம்தான்.

அதைப் பார்க்கையில் மிகவும் கவலையாக இருந்தது. வாலிபர்களை இப்படி தவறான வழியில் அழைத்துச் செல்கிறார்களே என்று கோபமும் வந்தது.

இந்த ஜாதி சங்கங்கள் வெறியூட்டப்படும் இந்த இளைஞர்களுக்கு என்ன செய்வார்கள் அல்லது இது வரை என்ன செய்திருக்கிறார்கள்?

ஜாதி சங்கத்தலைவர்களும் ஜாதிக்கட்சித் தலைவர்களும் அடிப்படையில் முதலாளிகள், பலர் கல்லூரி, பல்கலைக் கழகங்கள் நடத்தும் கல்வி வியாபாரிகள்.

தங்களின் வணிக நிறுவனங்களில் வேலை போட்டுக் கொடுத்துள்ளனரா? தங்கள் கல்லூரிகளில் காசு வாங்காமல் இடம் கொடுத்துள்ளனரா?

கூட்டங்களில் கலந்து கொள்ள குவார்ட்டரும் பிரியாணியும் தருவார்கள். கலவரங்கள் செய்யக் கற்றுக் கொடுப்பார்கள். தவறாக வழி நடத்தி அவர்களின் வாழ்க்கையை சீரழிப்பார்கள். அடுத்தவர்கள் மீது வஞ்சத்தை வளர்ப்பார்கள். பகைமைத் தீயை மனதில் பற்ற வைப்பார்கள்.

அந்த டி. ஷர்ட் வாசகத்தை பார்த்ததும் உடனடியாக தோன்றிய எதிர்வினை

அதுதான் இந்த பதிவின் தலைப்பு

சூரத் போயிட்டு வரேன்
நாளையும் நாளை மறுநாளும் சூரத்தில் எங்கள் சங்கத்தின் அகில இந்திய செயற்குழுக் கூட்டம். 

ஆகவே சூரத் நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். புதன் இரவு வேலூர் வந்து சேர்வேன்.

வலைப்பக்கத்தில் எழுத மோடியின் மாநிலத்தில் நல்ல சரக்கு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

சூரத் செல்வதால் வலைப்பக்கத்துக்கு விடுமுறையெல்லாம் விடவில்லை. சில பதிவுகள் தயாராகவே உள்ளது. அதிலே இரண்டு ஆசான் ஸ்பெஷல்.

ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால் பின்னூட்டத்துக்கு பதில் மட்டும் வீடு திரும்பிய பின்னே.

பை. பை
 

இதுதாண்டா இந்தியப் போலீஸ்நான்கு போலீஸ்காரர்கள் பற்றி விழுப்புரம் மாவட்டம் காங்கியனூர் திரௌபதி ஆலயத்தில் தலித் மக்களை கோவிலுக்குள் விடுவதில்லை. அதற்கு எதிராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆலய நுழைவுப் போராட்டம் நடத்துகிறது. போராட்டத்திற்கு தலைமை தாங்கிய அப்போதைய குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ  தோழர் ஜி.லதா உள்ளிட்டவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடக்கிறது. தோழர் ஜி.லதாவின் வயிற்றில் பூட்ஸ் காலால் உதைத்தார்கள். இத்தாக்குதலை முன்னின்று நடத்திய விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமல்ராஜிற்கு தமிழக அரசு டி.ஐ.ஜி பதவி உயர்வு கொடுத்தது.

சமீபத்தில் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய பெண்களின் மீது தாக்குதல்களை நடத்தியது தமிழக காவல்துறை. திருப்பூர் சாமளாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஈஸ்வரி  என்ற பெண்மணியை ஓங்கி அறைந்து அவரது செவித்திறனை பாதிக்க வைத்த கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனுக்கு கண்காணிப்பாளர் பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

உத்திரப் பிரதேசத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி திமிராக நடந்து கொண்ட பாஜககாரர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்த ஷ்ரேஸ்தா தாக்கூர் என்ற காவல்துறை பெண் அதிகாரியை யோகி அரசு நேபாள எல்லைக்கு மாற்றலில் தூக்கி அடித்தது.

சிறைச்சாலைக்கு உள்ளே சசிகலா, சகல வசதிகளையும் அனுபவிக்க சிறைத்துறை டி.ஜி.பி இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கினார் என்பதை அம்பலப்படுத்திய டி.ஐ.ஜி ரூபா போக்குவரத்துத்துறைக்கு மாற்றப் பட்டுள்ளார்.

கடமையை ஒழுங்காக நிறைவேற்றினால் தண்டனை.
கொடூரத் தாக்குதல் நடத்தினால் பதவி உயர்வு.

நன்றாகத்தான் இருக்கிறது நம் நாடு.