Thursday, February 2, 2017

அடர் காட்டுக்குள்ளே கை பிடித்து







ஒரு முன்னணி தோழரின் புதுமனை புகுவிழாவிற்காக ஆவடி வரை போய் வந்தேன்.

கையில் எடுத்துக் கொண்ட புத்தகம் லக்ஷ்மி சரவண குமார் எழுதிய "கானகன்". வீடு வருவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்பாக முடித்து விட்டேன். என் மீது படிந்திருக்கிற காட்டின் வாசனை மறையும் முன்பாக இந்த நூல் பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இன்று எழுத திட்டமிருந்த பட்ஜெட்டைக் கூட ஒத்தி வைத்து விட்டேன்.  நடப்பு உறுப்பினர் இறந்தாலும் அது பற்றி கவலைப்படாமல் இன்றே பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று முரட்டுப் பிடிவாதமாக அராஜகமாக செயல்பட நான் ஒன்றும் மோடி அல்லவே!

புலி வேட்டையோடு தொடங்குகிறது நாவல். புலி வேட்டையாடும் தங்கப்பனுக்குப் பக்கத்தில் பரணில் அமர்ந்து வேட்டையை பார்த்தது போன்ற விவரிப்பை படிக்கையில் "என்ன ஒரு வீரன்யா!" என்ற உணர்வை உருவாக்குகிற ஆசிரியர் அடுத்த அத்தியாயத்திலேயே புலியின் வேட்டைக்காக வருத்தப்படுகிற பளியர்குடி மக்கள் மூலமாக தங்கப்பனை வில்லனாக உணர வைத்து விடுகிறார்.

காடு, அதை அழிக்கும் நகரத்து பேராசைக்காரர்கள், பாதுகாக்க நினைக்கும் பழங்குடி மக்கள், அவர்களை மிரட்டும் வனத்துறை, தங்களின் தடம் அழிக்கப்பட்டதால் தடுமாறி வெறி கொண்டு அலையும் யானைக்கூட்டம், கஞ்சா தோட்டத்தை பாதுகாக்க யானைகளை வேட்டையாட முயலும் முதலாளிகள், தங்களின் வீரதீர பிரதாபங்களை நிரூபிக்க வேட்டைக்கு வரும் பெரிய மனிதர்கள், இந்த பின்னணியில் வேகமாக நகரும் நூல் கானகன்.

வேட்டைக்காரன் தங்கப்பன், அவனது மூன்று மனைவிகள், மூன்றாவது மனைவியின் முதல் கணவன் சடையன், அவனுக்குப் பிறந்து தங்கப்பன் குடிசையில் வளரும் வாசி  ஆகிய முக்கிய பாத்திரங்கள் வழியே கதை பயணப்படுகிறது. வேட்டையில் பெரும் வெறி கொண்ட தங்கப்பனுக்கும் காட்டையும் விலங்குகளையும் பாதுகாக்க நினைக்கும் வாசிக்குமான முரண்பாடு கதையின் வேகத்தை அதிகரிக்கிறது.

காட்டின் உண்மையான பாதுகாவலர்கள், காட்டை முழுமையாக புரிந்து கொண்டிருப்பவர்கள் பழங்குடி மக்கள்தான் என்பதை "கானகன்" ரத்தமும் வேட்டையும் மாமிச சிதறல்களோடு அழுத்தமாக சொல்லியுள்ளது. ஜ்மீந்தார் நடத்தும் வேட்டையின் போதும் சரி, யானைகளை தங்கப்பன் கொல்லும் போதும் சரி நம்மை ஆசிரியர் பதற வைக்கிறார். பளியர்குடி மக்களின் இயல்பான வாழ்க்கை முறையையும் நமக்கு புரியவைக்கிறார்.

தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் உலா வருபவர்களின் நோக்கம் இயற்கை வளத்தை சூறையாடுவதுதான் என்பதையும் அப்பாவி மலை வாழ் மக்களுக்கு உண்மையிலேயே உதவ வருபவர்கள் சிவப்புச்சட்டைக் கம்யூனிஸ்டுகள் என்பதையும் கூட கதையின் போக்கில் போகிற போது சொல்லிப் போகிறார்.

கதையின் முடிவு - Poetic Justice என்று சொல்வதுதான் மிகச் சரியான வார்த்தை.  

அது என்ன என்பதை நீங்களே படித்து தெரிந்து கொள்வதுதான் சரியாக இருக்கும். 

சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருதுக்கு மிகவும் பொருத்தமான நூல்.

ஒரு ஆறு மணி நேரம் என்னை அடர்ந்த காட்டிற்குள் கை பிடித்து கூட்டிப் போன லக்ஷ்மி சரவண குமாருக்கு நன்றியும் அன்பும் ஏராளமாய். 



 

1 comment: