Friday, April 28, 2017

நதிக்குள்ளே நடந்த . . . .

 தாமிரபரணி நதியை பன்னாட்டுக் கம்பெனிகளிடமிருந்து பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய வெற்றிகரமான போராட்டம் குறித்து நெல்லை மாவட்டச் செயலாளர் தோழர் கே.ஜி.பாஸ்கரன் அவர்கள் பதிவை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். ஊட்கங்கள் இப்போராட்டத்தை இருட்டடிப்பு செய்து தங்களின் விசுவாசத்தை நிரூபித்துக் கொண்டன.













உற்சாகத்தை பன்மடங்காக்கிய போராட்டம்

உங்களுக்கு உற்சாகத்தை தருவது எது என ஒரு கம்யூனிஸ்ட்டிடம் கேட்டால், அவர் சொல்லுவார் “போராட்டம்”. அந்த உண்மையை உணர ஏப்ரல் 24 அன்று தாமிரபரணி நதிக்கரைக்கு வந்திருந்தால், போராட்ட உற்சாகம் கரை புரண்டோடியதை நேரில் கண்டு உணர்ந்திருக்கலாம். தடைகளை தகர்த்து நாங்கள் முன்னேறுவோம் என்பதை ஆயிரக்கணக்கில் கூடியிருந்த செங்கொடியின் புதல்வர்களும், புதல்விகளும் உணர்த்தினார்கள். 

ஆற்றினுள் சாமியானா பந்தல் போட ஒத்துக்கொண்ட போலிஸ், பின்னர் பந்தல்காரரை மிரட்ட பந்தல் பாதியில் நின்றது. வெய்யில் கொளுத்தியது. போலிஸ் கெடுபிடிகளுக்கு இடையில், ஆற்றின் நடுவில் திட்டமிட்டபடி மேடை அமைக்கப்பட்டது. பந்தல்காரர் லேசாய் தயக்கம் காட்ட, தோழர்களே மேடையை போட்டார்கள். தகராறுக்கு பின் கட்டப்பட்ட ஒலிபெருக்கி இயக்கப்பட்டது. ஓங்கி முழங்கியது முழக்கங்கள். மரத்தடியில் கூடி நின்ற கூட்டம், முழக்கமிட்ட இடத்தை நோக்கி மழைக்கு முந்தைய மேக கூட்டத்தை போல நகர்ந்து வந்தது. தாமிரபரணி நதியெங்கும் எதிரொலித்தன முழக்கங்கள். 


தோழர்கள் பிருந்தாகாரத், ஜி.ராமகிருஷ்ணன், வாசுகி, வெங்கட்ராமன், கனகராஜ் ஆகியோர் மதுரை ரோட்டில் இருந்து சாலைத்தெருவுக்குள் நடந்தே வர, இருமருங்கிலும் உள்ளூர் மக்கள் திரளாக நின்று வரவேற்றார்கள். கீழத்தெருவை தாண்டி, படித்துறைக்கு வந்த போது திரண்டிருந்த தோழர்கள் உற்சாகத்தோடு செங்கொடி உயர்த்தி முழக்கமிட்டார்கள், முக்கூடலுக்கும், சீவலப்பேரிக்கும் இடையில் மற்றொரு நதி தாமிரபரணியில் கலந்ததோ என்று அதிசயிக்கும் வண்ணம், பெருங்கூட்டம் நதியை நோக்கி சென்றது. கரையெல்லாம் போலிஸ். 


ஏன் வெயிலில் மேடை என்றார்கள். ஏன் பாதியில் நிற்கிறது பந்தல் என்றார்கள். போலிஸ் தடுத்து விட்டது, மரத்தடியில் பேசுங்கள் என்கிறது போலிஸ் என்றோம். தேவையில்லை சுட்டெரிக்கும் வெய்யில் எங்களை தளர விடாது, உற்சாகமூட்டும் என்று கொளுத்தும் வெயிலில் மேடையேறினார்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள். பத்து நிமிடத்திற்கு ஒரு முறை தண்ணீர் குடித்தாலன்றி தாக்கு பிடிக்க முடியாத வெய்யிலில் செங்கொடி கூட்டம் அரசுக்கு எதிரான தாக்குதலை தொடுத்தது. தோழர் பிருந்தாகாரத் மற்றும் தோழர்கள் பேசிய பிறகு போலிசிடம் இருந்து தாக்கீது வந்தது, பந்தல் போட்டுக்கங்க சார், எதை தடுத்தாலும், அதையும் போராட்ட வடிவமா மாத்திருவீங்க சார். 


ஏப்ரல் 21ல் இருந்து போலிஸ் நம்மை பின் தொடர்ந்தது. ஆத்துக்குள்ள போராட்டம் நடத்த அனுமதி கிடையாது, மார்க்கெட், புது பஸ்ஸ்டாண்டு அப்படி எங்கயாச்சு நடத்துங்க என்றனர். வெள்ளக்காரன் காலத்திலேயே வஉசி, சிவா பேசிய கூட்டமெல்லா நடந்திருக்கு என்றதும், அந்தக் காலம் வேற, இப்ப நிலமை வேற என்றனர். பிறகு ரயில்வே ஸ்டேசனுக்கு வந்தனர். முடியாது என்றோம். சாலைத்தெருவுக்கு வந்தனர். படித்துறை வரை என்றனர். மறுத்துவிட்டோம். இதற்கிடையில் இடத்தை பார்க்க போலிஸ் அதிகாரிகள் நாலைந்து முறை படையெடுக்க சிந்துபூந்துறை புதியதோர் உற்சாகத்தை பெற்றது. இறுதியில் சுதந்திரத்திற்கு பின்பு முதல்முறையாக தாமிரபரணி ஆற்றில் செங்கொடி பட்டொளி வீசிப்பறக்க போராட்டம் துவங்கியது. 


வீசும் அனல் காற்றையும் புறமுதுகிட்டு ஓடச்செய்யும் வகையில் மிக ஆவேசத்துடன் தோழர் பிருந்தாகாரத் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். ஊருக்கு புறப்படும் வரையில் நதிக்கரையில் மக்களோடு, மக்களில் ஒருவராகவும் வீற்றிருந்தார் தோழர் பிருந்தாகாரத். 


இவ்வளவு பேர எப்பிடி சமாளிப்பீங்க என்ற போலிஸ், கட்டுக்கோப்பான அந்த கூட்டத்தை பார்த்து வாயடைத்து போனது. குறிப்பிட்ட நேரத்தில் மதிய உணவு வழங்கப்பட்டு முடிந்தது. தண்ணீர் பாக்கெட்டுக்களையும், பேப்பர் தட்டுக்களையும் தோழர்களே அப்புறப்படுத்தினார்கள். குடும்பத்தோடு வந்திருந்த தோழர்கள் குழந்தைகளோடு ஆற்றில் குளியலையும் முடித்தார்கள். போராட்டங்கள் பன்முகத்தன்மை கொண்டது. துவக்கத்தில் இருந்து முடியும் வரை போராட்டத்தில் இரண்டற கலப்பதை தோழர்களிடம் கற்க வேண்டும். 


மாலை 4 மணிக்கு போராட்டம் தொடரும் என்று தோழர் ஜி,ராமகிருஷ்ணன் அறிவித்த போது போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. அதற்கு முன்பும், பின்பும் கலைக்குழு தோழர்கள் போராட்டத்தின் வீரியத்தை ரத்தமும் சதையுமாய் முன்னெடுத்தார்கள். அத்தனை கலைஞர்களுக்கும் நமது செவ்வணக்கங்கள். ஏப்ரலின் துவக்கத்தில் பாடல், நாடக பட்டறை நடந்த போது இவ்வளவு வீரியத்தோடு இந்த படை புறப்படும் என்று கருதவில்லை. எதுவும் வீண்போகாது என்ற இயக்கவியலை மீண்டும் ஒரு முறை அவர்கள் நிருபணம் செய்தார்கள். 


குறுக்குச்சாலை சித்ராவை தோழர் வாசுகி இயக்கத்தின் சொத்து என்றார்கள். அது மிகையில்லை. அவரது குரலின் வலிமை பெரும் கூட்டத்தை தன்வசப்படுத்தியது. மாரிக்கொழுந்தே என் மல்லிகைப்பூவே பாடல் வரிகள் அவரது குரலில் இப்போதும் ரீங்காரமிடுகிறது. சங்கரன்கோவில் கல்யாணி, கீர்த்தி. குழந்தை செல்வங்கள். அற்புதமானதொரு குரல் வளம். கல்யாணி காலையிலேயே போன் செய்தாள். வேன்ல வந்தா போதுமா, சீக்கிரமா பஸ்ல வரனுமா என்று. திருவுடையானின் தம்பி தண்டபாணி, மதியழகன் ஒரு இசைக்கச்சேரியை நடத்திக் காட்டினார்கள். கலெக்டர் வாராரு காரு ஏறி தாரு ரோட்டுல, கலர் கலரா காகிதம் பார் ஆபிஸ் கேட்டுல என்று சமயோசிதமாக பல அரசியல் பாடல்களை பாடி இயக்கத்திற்கு வலிமை சேர்த்தனர். போராட்டத்திற்கென தோழர்கள் சுயமாக உருவாக்கிய பாடல்கள் அரங்கேறின. போராட்டங்கள் ஆளுமைகளை உருவாக்குகிறது. தனித்திறமைகளை செழுமைப்படுத்துகிறது. 


போராட்ட காலத்தில் உருவான நெல்லை கலைக்குழு, தூத்துக்குடி பாரதி கலைக்குழு, நெல்லை சிஐடியூ பிடிஆர் கலைக்குழு நாடகங்கள் போராட்டத்திற்கு உத்வேகமூட்டின. நாடகங்களை தோழர்கள் நடராஜன், செண்பகம் உருவாக்கி பயிற்சியளித்தனர். நாடக குழுக்களில் சிஐடியூ, வாலிபர் அமைப்புகளின் ஊழியர்களே கலைஞர்களாக பரிணாமம் எடுத்தனர். முன்னீர்பள்ளம் தோழர் முருகனின் இரு மகன்களும் நாடக குழுவில் இணைந்தனர். பத்தாம் வகுப்பு, பன்னெண்டாம் வகுப்புக்கு பரிட்சை எழுதி இருக்கிறார்கள். நாடகம் முடிந்து ஒவ்வொருவரும் பெயரையும், பொறுப்பையும் சொல்லி அறிமுகம் செய்து கொள்வார்கள். அஜித் சொன்னான், “அஜித், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்”. 


நாடக குழுக்கள் 70க்கும் மேற்பட்ட இடங்களில் நாடகம் நடத்தினர். ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்தனர். இரண்டு பறை வாங்கி பயிற்சி எடுத்து பறையாட்டம் ஆடினார்கள் வாலிபர் சங்க தோழர்கள். தோழர் குமாரவேலின் ஆட்டம் ரொம்ப பிரபலம். 4 மணிக்கு பிறகு போராட்டம் தொடரும் என்ற அறிவிப்பை தொடர்ந்து அவசர வேலை இருந்தவர்கள் கிளம்ப, 9 மணிக்கு 600க்கும் அதிகமான தோழர்களால் மைதானம் நிரம்பி வழிந்தது. உடை எடுக்க வீட்டுக்கு போனவர்கள் திரும்பி வந்து சேர்ந்தார்கள். இன்னைக்கு எப்பிடி, காலையில வாறோ என்று அலைபேசியில் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் போரட்ட களத்திற்கு வந்தனர். சிந்துபூந்துறை பொதுமக்கள் துவக்கத்தில் இருந்து நம்முடன் இருந்தனர்.
ஏப்ரல் 20ல் தீக்கதிர் சிறப்பிதழ் மூன்று மாவட்டங்களிலும் 7000 விற்பனை செய்யப்பட்டது. சமூக வலைத்தளங்களை தோழர்கள் முழுமையாக பயன்படுத்தினர். வெளிநாட்டில் இருந்த படியே தோழர் யூசுப் ஒரு 5 நிமிட ஆவணப்படத்தை உருவாக்கினார். தோழர் முத்தழகன் ஒரு ஆவணப்படத்தை உருவாக்கினார். வெகுமக்களிடம் இவையெல்லாம் நல்ல தாக்கங்களை உருவாக்கின. 


பன்னாட்டு குளிர்பான நிறுவனமான கோக் 2005ல் துவக்கப்பட்ட காலத்திலேயே மார்க்சிஸ்ட் கட்சி போராட்டங்களை துவக்கியது. அந்த போராட்டங்கள் இரண்டு ஆண்டுகள் நீடித்து நடந்தன. 2015ல் பெப்சி நிறுவனம் துவக்கப்பட்ட போதும் மார்க்சிஸ்ட் கட்சி களம் இறங்கியது. 2017 பிப்ரவரியில் நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பாக மூன்று மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்றது. மார்ச் 2ல் தீர்ப்பு வந்தது. உபரி தண்ணீரை தான் வழங்குகிறோம் என்ற தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் அறிக்கையை ஏற்று தீர்ப்பு வந்தது. மார்ச் 6ல் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. வாலிபர் மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில் பிரச்சாரங்களும், உண்ணாவிரத போராட்டமும், ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. பிரதான கட்சிகளான பிஜேபி, காங்கிரஸ், அதிமுக, திமுகவைத் தவிர இதர பல அமைப்புகளும் களம் இறங்கின. 


இப்போராட்டங்களின் நீட்சியாக மாபெரும் மக்கள் திரள் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் சத்தியாகிரக போராட்டத்தை துவக்கியது. இரவு 7 மணிக்கு கலெக்டருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கோக் பெப்சிக்கு தடை விதிப்பது குறித்து, குறிப்பாக உபரி தண்ணீர் குறித்து மாநில அரசுக்கு பரிந்துரை செய்வதாக ஒப்புக்கொண்டார். போராட்டக்குழுவோடு நடைபெற்ற பேச்சுவார்த்தை அம்சங்களையும் அக்கடிதத்தில் குறிப்பிட்டார். 


கடிதத்தில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு,


“பெருகிவருகின்ற விவசாய தேவை, பொதுமக்களுடைய தேவை ஆகியவற்றை கணக்கில் கொள்ளும் போது தற்போதைய உபரிநீர் என்று பொதுப்பணித்துறையால் செய்யப்பட்ட கணக்கீடு ஏற்றுக்கொள்ள முடியாது. அது தவறாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே புதியதாக ஒரு வல்லுநர் குழுவினை நியமித்து உபரி தண்ணீர் என்பதை ஆய்வு செய்து தாமிரபரணியில் மொத்தம் எவ்வளவு தண்ணீர் கிடைக்கிறது, எவ்வளவு தண்ணீர் தேவை, உபரிநீர் இருக்கிறதா இல்லையா என்பதை சரியாக கணக்கீடு செய்து அரசு ஆய்வு செய்து தக்க முடிவுகளை எடுக்க வேண்டுமென்று CPI(M) மாநிலச்செயலாளர் உயர்திரு ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் தண்ணீரை கச்சாப்பொருளாக பயன்படுத்தக்கூடிய பெப்சி கோகோகோலா போன்ற நிறுவன்ங்களுக்கு தண்ணீரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.


எனினும் மாவட்ட நிர்வாக தரப்பில் புதிய வல்லுநர் குழுவை நியமித்து ஒரு அறிவியல்பூர்வமான ஆய்வை மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரை செய்வது என ஒத்துக்கொள்ளப்பட்டது. எனவே இக்கடிதத்தின் மூலம் ஒரு வல்லுநர் குழுவை நியமித்து மூன்று மாவட்டங்களின் குடிநீர் மற்றும் அத்தியாவசிய நீர் தேவைகள், தண்ணீர் கிடைக்க கூடிய மொத்த அளவு ஆகியவற்றை வல்லுநர் குழு மூலமாக அறிவியல்பூர்வமாக தக்க புதிய ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை செய்ய அரசு ஆணையிட பரிந்துரை செய்கிறேன். மேலும் மேற்படி புதிய ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் தக்க முடிவுகளை அரசு மேற்கொள்ளலாம் என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்”. 


இது முதற்கட்ட போராட்டம், முதற்கட்ட வெற்றி. கோக் பெப்சிக்கு நிரந்தர தடை விதிக்கும் வரை போராட்டம் தொடரும். அது முன்னிலும் பன்மடங்கு பலமாகவும், வீரியமாகவும், பன்முகத்தோடும், மக்கள் திரளோடும் துவங்கும். அதோ தாமிரபரணி சற்றே ஆசுவாசமடைகிறாள். அவளுக்கு நம்பிக்கை பூத்துவிட்டது. உயரப்பறந்த செங்கொடி அவளில் பிரதிபலித்தது நம் முகங்களைப் போல.

K.G.Baskaran

No comments:

Post a Comment