Friday, June 2, 2017

சந்திப்பில் .... முதல்வரோடு ஒரு சந்திப்பு,








ஆம், முதல்வரோடுதான் ஒரு சந்திப்பு. எடப்பாடி அல்ல. பாபா திரைப்பட முதல்வர் பாட்டையா பாரதி மணி அவர்களோடுதான். பல்வேறு பரிமாணங்கள் கொண்ட அவரோடு முக நூல் மூலமாகத்தான் அறிமுகம். கடந்த வருடம் சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கிய அவரது ஐநூறு பக்க புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்து அவருக்கும் ரசிகனானேன். நகைச்சுவை உணர்வும் நையாண்டியும் கலந்த அந்த சுவாரஸ்யமான மனிதர் திருப்பத்தூருக்கு வந்திருப்பதாக முகநூலில் எழுதியிருந்தார். அந்த நூல் குறித்த பதிவின் இணைப்பு  இங்கே. . . .

வியாழனன்று திருப்பத்தூருக்கு ஒரு திருமணத்திற்கு செல்ல வேண்டியிருந்ததால் அன்று வரை நீங்கள் அங்கே இருப்பீர்களா என்று கேட்பதற்கு பதிலாக திங்கள் கிழமை வரை இருப்பீர்களா என்று கேட்டு இன்பாக்ஸில் தொடர்பு கொண்டேன். செய்தி அனுப்பிய உடனேயே  திங்கள் கிழமை காலை அன்று பெங்களூர் புறப்படுகிறேன் என்று பதில் போட்டார். பிறகுதான் வியாழன் என்பதற்குப் பதிலாக திங்கள் என்று எழுதிய தவறு புரிந்தது. அலுவலகம் போகாத நாளுக்கு மறுநாள் திங்கள் என்றே மனதில் பதிவாகியுள்ளது. கிழமையை தவறாக எழுதி விட்டேன் என்று சொன்னால் ஆமாம், நானும்தான் என்று பதில் போட்டார். வியாழன் காலை ஜோலார்ப்பேட்டை சந்திப்பில் சந்திப்பது என்று முடிவானது.

காலையில் திருப்பத்தூர் திருமணம் முடிந்து, முக்கியமாக சாப்பிட்டு முடித்த பின்பு அவர் எங்கே இருக்கிறார் என்று கேட்க திருப்பத்தூரிலிருந்து ஜோலார்ப்பேட்டை வந்து கொண்டிருப்பதாகச் சொன்னார். நான் திருப்பத்தூர் அருகில் இருப்பதாகச் சொன்னதும் ஜோலார்ப்பேட்டைக்கு காரில் செல்வதாகவும் ஒன்றாகவே கூட போகலாம் என்றும் சொன்னார். நான் காரில் வந்திருப்பதாகச் சொன்னதும் சரி நேரில் பார்ப்போம் என்றார்.

அடுத்த பதினைந்து நிமிடங்களில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. ஜோலார்ப்பேட்டை சந்திப்பில் நான் காத்திருக்க, காரிலிருந்து இறங்கி ரயில் நிலையத்துக்கு உள்ளே வராமல் எதிர்ப்பக்கமாக வேகமாக அவர் செல்ல, துரத்திக் கொண்டே போனேன். அது ஒரு மொபைல் கடை. அவர் வந்த வேலையை பார்க்க விடவில்லை. அறிமுகம் செய்து கொண்டு பேசத் தொடங்கினேன், இல்லையில்லை அவர் பேசுவதை கேட்கத் தொடங்கினேன்.

உங்கள் நூல் என்னை மிகவும் கவர்ந்தது என்று சொன்னதற்கு

என்னைப்  எழுத்தாளன் என்று சொல்லும் போது அப்படியே கூனிக்குறுகிப் போகிறேன். நான் எழுத்தாளன் என்றால் அப்புறம் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜானகிராமன் எல்லாம் யார்?

பதில் சொன்னார்.

அவரது திரைப்பட அனுபவங்கள், டெல்லி தொடர்புகள் குறித்து பேசினார். சாகித்ய அகாடமி யாருக்கு கிடைக்கப்போகிறது என்ற தகவல் கிடைக்கும். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரப்போகிறது என்று மட்டும் சொல்வேன். ஏதோ நான்தான் முயற்சி எடுத்து வாங்கிக் கொடுத்ததாக நன்றி சொல்வார்கள் என்றார். எமி ஜாக்சனுக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததை மறக்காமல் சொன்னார். பாரதி மணி நடிக்கும் படத்திற்கு விருது கிடைக்கும் என்று லெனின் ஷங்கரிடம் சொன்னது, அதன் படியே அன்னியனுக்கு கிடைத்தது, ஊருக்கு நூறு பேர் நல்ல படமாக இருந்தாலும் ஓடாதது, ஒரு சீனாக இருந்தாலும் பளிச்சென்று இருக்கும் என முப்பத்தி ஆறு வயதினிலே படத்தில் நடிக்க ஜோதிகா அழைத்தது பற்றி சொன்னார். சுகாவின் படத்தில் நடிக்க இருப்பது என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

சந்திரா சுவாமி பற்றி எழுதியது சுவாரஸ்யமாக இருந்தது என்று சொன்னேன். நாளை அதை சுட்டு பதிவிடலாம் என்று யோசித்துள்ளேன்.

புழல் நிரம்பாமால் சென்னை வர மாட்டேன், சிறை அல்ல, ஏரி என்று முகநூலில் பதிவு போட்டதை நினைவு படுத்தி அதில் உறுதியாக இருக்கிறேன் என்றார். சிறை வேண்டுமானால் நிரம்பலாம், ஏரி நிரம்பும் வாய்ப்பு குறைவு என்றேன் நான்.

அந்த மொபைல் கடையில் அவர் வந்த வேலை நடக்கவில்லை ஆனாலும் கூட அவர் கிளம்புகையில் அந்த உரிமையாளரைப் பார்த்து “நுகர்வோருடனான உங்கள் அணுகுமுறை மிகவும் நன்றாக இருக்கிறது, காட் ப்ளெஸ் யு” என்று வாழ்த்தி விட்டுத்தான் புறப்பட்டார்.

நீங்கள் படிகளில் ஏறுவதற்கு பதிலாக ஸ்லோப்பில் செல்லுங்கள் என்று அவர் சொல்ல, எனக்கு முட்டியில் எல்லாம் பிரச்சினை இல்லை என்றும் என்னுடைய ஸ்பைனில் எல்.5, எல்6 பிரச்சினைக்கு ஸ்விம்மிங்தான் நல்லது என்று டாக்டர் சொல்கிறார். சென்னையில் எந்த ஸ்விம்மிங் பூலும் சுகாதாரமில்லாமல் நாற்றமடிக்கிறது. பெங்களூரில் இருப்பதே அதற்காகத் தான் என்று சொன்னார்.

புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். பிளாட்பார்மிற்கு புறப்பட்டார். எனக்கு முட்டியில் பிரச்சினை இருக்கிறது. அதனால் இங்கிருந்தே விடைபெற்றுக் கொள்கிறேன் என்றேன், கொஞ்சம் வெட்கத்துடன். மெல்லமாக அணைத்து “காட் பிளஸ் யு” என்று சொல்லி புறப்பட்டார். படிகளில் அவர் கொஞ்சம் வேகமாக ஏறுகையில் பொறாமையாகக் கூட இறந்தது.

பின் குறிப்பு 1 : நடுவில் அவர் பைப்பை எடுத்து புகைக்கையில் நாமும் பைப்பிற்கு மாறி விடுவோமா என்று யோசித்தேன். விரைவில் விட்டுவிடுவதாக மனைவிக்கு கொடுத்த வாக்குறுதி நினைவிற்கு வந்ததால் அந்த யோசனையை அந்த நிமிடத்திலேயே துறந்து விட்டேன். 

பின் குறிப்பு 2 : கடைசி படத்தில் இருப்பவர் எங்கள் தோழர் சி.கணேசன். "இந்த வயசுலயும் எவ்வளவு வேகமா இருக்காரு, கொஞ்சம் கூட பந்தாவே இல்லாம" என்று இன்று காலையில் சொன்னார்.

"அதனால்தான் அவரை எல்லாருக்கும் பிடிக்கிறது" என்று பதில் சொன்னேன்.

ஆமாம். அதுதானே உண்மை!

4 comments:

  1. Excellent. He covers everyone by his frankness. I met him in early 80s in the wonderful winter at his house in Delhi and still remembering themost of at even now.

    ReplyDelete
  2. அவ்ர் விட்டுக்கு பொயிருந்தாஒம் நானும் முத்து மீனாட்சியும். என் மகள் அட்வகெட் ஹன்ஸா பாட்டையா தர காப்பியும் முருக்கு தட்டை அருமையா இருக்கும் நுசொல்லீருந்தார் . குடிகலை வே ! மனுசன் "வங்கிழ்டு" ! நாகர்கொயில் காரங்களுக்கே உள்ள sharp சேட்டை அதிகம். அதே சமயம் பிரிய மனமிலாமல் தான் பிரியவேண்டியமனிதர் !

    ReplyDelete