Friday, July 7, 2017

ஒரு தேச விரோதக் கவிதை

மனுஷ்ய புத்திரனின் கவிதை இது. இதில் சொல்லப்பட்டுள்ளவை உண்மை. அதனால் மீண்டும் ஒரு முறை அவர் தேச விரோதி என்று காவிகளால் அறிவிக்கப்படுவார்.



மஞ்சள் நாட்டவருக்கு ஒரு தேசபக்தனின் திறந்த மடல்
.........................................................
மனுஷ்ய புத்திரன்
------------------
எல்லையில்
பதட்டம் நீடிக்கிறது
எல்லையில் நாங்கள்
ஒரு சிறிய யுத்தத்தை
நடத்திக்கொள்கிறோம்
1962 ல் இருந்ததுபோல இல்லை
இப்போது எங்கள் மார்புகள்
அவை 56 இஞ்சுகளாக விரிந்துவிட்டன
மஞ்சள் தேகத்தினரே
எமது இந்த சவடால்கள் கண்டு நீர்
கோவிக்க வேண்டாம்
அவை உள் நாட்டு தேவைகளுக்கானவையே தவிர
உமக்கானவையல்ல
நமக்குள் என்ன சண்டை
நாங்கள் பல் குத்தும் குண்டுசி
நீங்கள் செய்ததுதான்
நாங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி
நீங்கள் செய்ததுதான்
எங்கள் குழந்தைகள் விளையாடும்
பொம்மையும் நீங்கள் செய்ததுதான்
ஏற்கனவே முழு நாடும்
உங்கள் கையிலிருக்கும்போது
எல்லையில் ஒரு துண்டு நிலத்தை ஆக்ரமித்து
உங்களுக்கு ஆகப்போவது ஏதுமில்லை
என்பதை அறியாதவரா நீங்கள்?
எல்லையில் எங்களுக்கு
இப்போது அவசரமாக
ஒரு யுத்தம் தேவைப்படுகிறது
தேசபக்த ஒலிப்பெருக்கியின்
பேட்டரியில் சார்ஜ் குறைந்துவிட்டது
செல்லாத நோட்டுகளுக்குப்பின்
தேச விரோதிகள் அதிகரித்துவிட்டார்கள்
ஜிஎஸ்டிக்குப் பின் மக்கள்
எல்லாவற்றிற்கும் கணக்குப் பார்கிறார்கள்
மாட்டிக்கறிக்காக தோல் உறிக்கப்படும் மனிதர்கள்
அதிகமாக கூச்சல் போடுகிறார்கள்
விவசாயிகள் ஜட்டி போடாமல்
பிரதமர் அலுவலகம் முன் வந்து நிற்கிறார்கள்
எல்லையில் ஒரு சிறிய யுத்தம் வந்தால்
எல்லாப்பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்
உள் நாட்டில் அமைதி திரும்ப வேண்டுமெனில்
எல்லையில் கொஞ்சம் பதட்டம் வேண்டும்
கார்கில் போரில் பனிபடந்த மலைகளில்
வெற்றிடத்தில் பீரங்கிகள் சுடுவதை
நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தோம்
துல்லியத் தாக்குதலின் போது
இந்தியா எழுச்சியடைந்து
தனது எல்லாக் கவலைகளையும்
மறந்ததுபோல இப்போதும்
_ எழுச்சியடைய, விரும்புகிறோம்
அனுமதியுங்கள்
எல்லையில் ஒரு சிறிய யுத்தத்தை நடத்திகொள்கிறோம்
யாரோ சில அப்பாவி பலியாடுகள்
இரு புறமும் இறப்பார்கள்
நாட்டின் வளர்ச்சிக்கு அவ்வப்போது
தியாகங்கள் முக்கியம்
சமாதானத்திற்குப் பிறகு
புதிய இந்தியா இன்னொரு முறை பிறக்கும்
அரசர் புதிய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட
உங்கள் தேசத்திற்கு வெற்றி வீரனாக வருவார்
இப்போது அவசரமாக எங்களுக்கு
எல்லையில் ஒரு சிறிய யுத்தம் தேவைப்படுகிறது
நீங்கள் இப்போது எங்களை
ஒரு சிறிய யுத்த்திற்கு அனுமதித்தால்
நாங்கள் உங்களுக்குத் தேவைப்படும் போது
ஒரு சிறிய யுத்த்த்தை அனுமதிப்போம்
அண்டை நாடுகளுடனான
எங்கள் வெளியுறவுக்கொள்கையை
இதைவிட எளிமையாக
என்னால் விவரிக்க முடியாது
நல்லெண்ணத்தின் அடிப்படையில்
அன்பு கூர்ந்து
ஒரு சிறிய யுத்தத்தை எங்களுக்கு
அனுப்பி உதவுங்கள்...

1 comment:

  1. DMK கவிஞர் எப்போ தேச பக்தர் ஆனார்? சந்தோஷமாக இருக்கிறது.

    ReplyDelete