Friday, August 11, 2017

மீண்டும் ஒலித்திட வேண்டும் இக்குரல்

சமீப காலத்தின் நாடாளுமன்றப் பேச்சுக்களில் சிறப்பானவை என்பவற்றை பட்டியலிட்டால் அவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி பேசியவையாக மட்டுமே இருக்கும். அனைத்துத்துறைகளில் ஆழ்ந்த அறிவு கொண்ட தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் பதவிக்காலம் முடிந்து நேற்று பேசிய உரை கூட மிகவும் அற்புதமானது. 

நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதை விட கட்சியின் பொதுச்செயலாளராக அவர் மக்கள் மன்றத்தில் ஆற்ற வேண்டிய பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க, மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதை தவிர்த்து விட்டார். மாநிலங்களவைக்கு மிகப் பெரிய இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் குரல் மீண்டும் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

ஆனால் எதிர்க்கட்சி வரிசையில் இல்லாமல் ஆளும் கட்சியாக . . .

 
 
*வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவைப் பாதுகாத்திடுவோம்*
*சீத்தாராம் யெச்சூரி மாநிலங்களவையின் நிறைவுரை*

புதுதில்லி, ஆக. 11-
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவைப் பாதுகாத்திடுவோம் என்று மார்க்ச்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது. வியாழன் அன்று ஓய்வுபெறும் உறுப்பினர்களுக்குப் பிரியாவிடை அளிக்கப்பட்டது. அப்போது சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

“மாண்புமிகு தலைவர் அவர்களே, இது என்னுடைய கன்னிப்பேச்சு அல்ல. எனவே மணியை அடிக்காதீர்கள். 

என்னைப்பற்றி மாண்புமிகு அவைத்தலைவர் (அருண்ஜெட்லி), எதிர்க்கட்சித் தலைவர் (குலாம்நபி ஆசாத்), மற்றும் பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய சக உறுப்பினர்கள் ராம் கோபால் யாதவ் ஜி உட்பட அனைத்து உறுப்பினர்களும் ஆற்றிய உரைகள் என் நெஞ்சைத் தொட்டுவிட்டன. நீங்கள் அனைவருமே என் பங்களிப்பினை மிகவும் சரியானமுறையில் மதிப்பிட்டிருக்கிறீர்கள். அவற்றுக்குள் நான் இப்போது போகவில்லை. முதலாவதாக நான் கூற விரும்புவது என்னவென்றால், துணைத் தலைவர் உட்பட எனக்கு அளவுக்கு மீறிய அளவிற்கு நேரம் ஒதுக்கி நான் கூறுவதையெல்லாம் பொறுமையாகக் கேட்டமைக்காக, முதற்கண் என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல சமயங்களில் நான் தலைவரின் பொறுமையை சோதித்திருக்கிறேன். இவ்வாறு எனக்கு பல சமயங்களிலும் வாய்ப்பு அளித்தமைக்காக தலைவர் அவர்களுக்கும், இந்த அவைக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

கடந்த 12 ஆண்டு காலம் என்பது, உண்மையில் என்னைப் பொறுத்தவரை, மிகவும் முக்கியமான பல அனுபவங்களைக் கற்றுக்கொண்ட காலமாகும். நம் நாட்டின் மிகவும் முக்கியமான அரசியல் நிகழ்ச்சிப்போக்குகள் நடைபெற்ற மிகவும் முக்கியமான காலமும் இது என்றே நான் கருதுகிறேன். அத்தகையதொரு கால கட்டத்தில் என்னால் இயன்ற அளவிற்கு இந்த அவையில் என் பங்களிப்பினைச் செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது என்றே நான் கருதுகிறேன். 

நான் இந்த அவைக்கு மிகவும் தயக்கத்துடன்தான் வந்தேன். 1996இல்தான் முதன்முதலாக எனக்கு சொல்லப்பட்டது. ஒரு நிகழ்வினை தங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என விரும்புகிறேன். 

2001ஆம் ஆண்டில் குஜராத்தில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது உங்களுக்கு நினைவிருக்கும். எங்கள் கட்சியின் சார்பில் நிவாரணப்பணிகளுக்காக நான் அங்கே அனுப்பி வைக்கப்பட்டேன். நாங்கள் அங்கே ஒரு காலனியையும் கட்டினோம். நீருபென் பட்டேல் என்ற பெயரில் அமைக்கப்பட்ட அந்தக் காலனி இப்போதும் அங்கே இருக்கிறது. அங்கிருந்து நான் திரும்பியபிறகு, அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களால் சர்வகட்சிக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எங்கள் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தோழர் ஹர்கிசன்சிங் சுர்ஜித், அந்தக் கூட்டத்தில் என்னைப் பங்கேற்குமாறு அனுப்பி வைத்தார். 

நானும் இங்கே நாடாளுமன்ற வளாகத்திற்குள் வந்தேன். முதல் மாடி வரைக்கும் நடந்தே சென்றுவிட்டேன். லிப்டுக்காகக் காத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக பிரதமர் வாஜ்பாயி வெளியே வந்தார். “ஓ, சீத்தாராம் ஜி, நீங்கள் ஹவுசுக்கு வருவதாக ஹவுஸ் மேனேஜர் என்னிடம் சொல்லவே இல்லையே,” என்றார். அப்போது ‘ஹவுஸ்’ என்றால் என்ன பொருள் என்று எனக்குத் தெரியாது. மக்களவையும், மாநிலங்களவையும் ஆங்கிலத்தில் “ஹவுசஸ்(Houses)” என்று குறிப்பிடப்படும் என்று அதுவரை எனக்குத் தெரியாது. பின்பு அவருடன் சென்றுவிட்டேன். இதுதான் அன்றைய தினம் ‘ஹவுஸ்’ குறித்து எனக்கிருந்த நிலைமை. 

 ஆனால் இங்கே வந்தபின், ஏகப்பட்ட அனுபவங்கள். நான் நிறையவே கற்றுக்கொண்டிருக்கிறேன். நான் முதன்முதலாகத் தேர்வு செய்யப்பட்டபோது, பைரோன் சிங் செகாவத் மாநிலங்களவைத் தலைவராக இருந்தார். ரகுமான் கான் சாஹேப் துணைத் தலைவர். யோகேந்திர நாராயண், செக்ரடரி ஜெனரல். பின்னர் விவேக் அக்னிஹோத்ரி. அவரும் என் மாமாவும் ஐஏஎஸ் ஒன்றாகப்படித்தவர்கள். அந்தமுறையில் அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பரானார். பின்னர் சும்ஷேர் ஷெரீப். இவர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தபோதே எனக்கு நன்கு தெரியும். அடுத்து நீங்கள் (துணைத்தலைவர்). இப்போது நான் பேசும்போதுகூட மணியை அடிக்கலாமா என்று உங்கள் கைகள் அரித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். அடுத்து உங்கள் அருகே நிற்கும் ஊழியர்கள். நாங்கள் எங்கள் கைகளில் உள்ள தாளைக் காண்பித்தால், எங்கிருந்துதான் வருவார்களோ தெரியாது, வந்து, எங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவிட்டு, செல்வார்கள். மகளிர் இட ஒதுக்கீடு சட்டமுன்வடிவு இந்த அவையில் நிறைவேற்றப்பட்டபோது, மார்ஷல்கள் எந்த அளவிற்கு உதவினார்கள் என்பதை என் வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது. நான் இங்கே அரைவட்ட மேசையின்முன் அமர்ந்திருக்கிற ஊழியர்களுக்கும் தலைவணங்குகிறேன். இவர்களை நாம் நிருபர்கள் என அழைக்கிறோம். உலகின் தலைசிறந்த அதிவேக சுருக்கெழுத்தாளர்கள் என்று அவர்களை நான் மதிப்பிடுகிறேன். (உறுப்பினர்கள் மேசையைத்தட்டி ஆமோதித்தார்கள்). 

குலாம் நபி ஆசாத் (எதிர்க்கட்சித் தலைவர்): சந்தேகமில்லை, சந்தேகமில்லை.
மற்றும் பல உறுப்பினர்கள்: இதில் சந்தேகத்திற்கே இடமில்லை. 

சீத்தாராம் யெச்சூரி: என்னுடைய உரை அடுத்தநாள் திருத்தத்திற்காக என்னிடம் வரும்போது, அதில் நான் பேசும்போது ஏதாவது தவறு செய்திருந்தால் அந்த தவறுதான் இருக்குமேயொழிய, நிருபர்களின் தவறு என்று அநேகமாக எதுவும் இருக்காது. அப்படியே இருந்தாலும் மிகவும் அரிதிலும் அரிதாகத்தான் இருக்கும். அவர்கள் அனைவருக்கும் மற்றும் மாநிலங்களவை ஊழியர்கள் அனைவருக்கும் என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த சமயத்தில் உங்களிடம் ஒன்றை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஊழியர்கள் நியமனத்தை தனியாரிடம் தாரைவார்த்திடவும், அவுட்சோர்சிங் விடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிகிறேன். அவ்வாறு நாடாளுமன்றத்தையே அவுட்சோர்சிங் விடுவதற்கு கொண்டுசென்று விடாதீர்கள். அவ்வாறு நடக்காது என்றே நம்புகிறேன். இந்த ஊழியர்கள்தான், இந்த அவை, பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளானபோது, தங்கள் உயிரைப் பலி கொடுத்து, இந்தஅவையைக் காப்பாற்றியவர்கள். நாம் நன்கு செயல்பட அவர்கள் நமக்கு அனுமதி அளித்துள்ளார்கள். சில சமயங்களில் அதிகாலை 2 மணி வரைக்கும்கூட அவை நடந்திருக்கிறது. அவர்கள் நமக்கு உணவு அளித்திருக்கிறார்கள். அவர்கள் நம்மைப் பாதுகாத்திருக்கிறார்கள். ஊழியர்களின் நலன்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்று தயவுசெய்து உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் இவர்கள்தான் இந்த அவையின் முதுகெலும்பு. கண்ணுக்குத்தெரியாத வகையில் முதுகெலும்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவே என் முதல் வேண்டுகோளாகும். நமக்கு வேலை செய்த அதிகாரிகளை நாம் நன்கு வைத்துக் கொள்ள வேண்டும். 

நமது செக்ரடரி ஜெனரல் ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் பணிகளிலிருந்து வந்தவர். சர்தார் பட்டேல் அவர்களை ‘உருக்கு மனிதர்கள்’ என்று அழைப்பார். அவர்கள்தான் நம் நாட்டை ஒன்றுபடுத்தி வைத்திருக்கிறார்கள். 

இன்றைய தினம் நாம் அகில இந்திய மருத்துவ அறிவியல் இன்ஸ்டிட்யூட் (AIIMS-All India Institute of Medical Sciences) வைத்திருக்கிறோம். ராஜ்குமாரி அம்ரிதா கவுர்ஜி குறித்து நீங்கள் குறிப்பிட்டீர்கள். அவர்கள்தான் அதனை அமைத்தார்கள். அங்கே போய்ப் பாருங்கள். நாளுக்கு நாள் நோயாளிகள் வந்து குவிவதைப் பார்க்க முடியும். ஏன்? ஏனென்றால், தரமான மருத்துவர்கள் அங்கே இருக்கிறார்கள். அவர்கள் தனியார் மருத்துவமனைக்குச் சென்றாலோ அல்லது துபாய்க்குச் சென்றாலோ கோடி கோடியாகத் திரட்ட முடியும். ஆனால் அவற்றை உதறித்தள்ளிவிட்டு நாட்டுக்காகச் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் நம் விஞ்ஞானிகளான சத்யேந்திர போஸ் மற்றும் பேராசிரியர் பார்கவா ஆகியோர் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம். இன்று காலையில்கூட நம் தலைவர் அவர்கள், தனக்கு அளிக்கப்பட்ட கவுரப்பட்டமான டி.லிட். என்பதை பயன்படுத்தாததால், நாம் அவரை டாக்டர் என அழைக்க முடியவில்லை. இவ்வாறு உயரிய மாண்பினை இந்த நாடு பெற்றிருக்கிறது.

 இன்றையதினம் நாம் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் செலுத்துகிறோம் என்றால் எந்த வெளிநாட்டு விஞ்ஞானிகளின் உதவியாலும் அல்ல. நம் விஞ்ஞானிகள்தான் அந்த சாதனையைப் புரிந்திருக்கிறார்கள். இவ்வாறு நம் நாட்டின் உள்ளார்ந்த வலிமையை நாம் மேலும் அதிகப்படுத்தும் வண்ணம் இந்த அவை செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாம் எல்லாவற்றிற்கும் வெளிநாட்டவரைச் சார்ந்திருக்கக் கூடாது. நம் நாட்டு மக்களின் பெருமையை மிகச் சரிவரப்புரிந்துகொண்டால்தான் இது சாத்தியமாகும். 

ஸ்வாமி விவேகானந்தர், இஸ்லாமிய உடம்பில் வேதாந்த உள்ளம் குறித்துப் பேசுகிறார். அதுதான் எதிர்கால இந்தியா என்கிறார். இவ்வாறு *இந்தியாவின் பலம் என்பது அனைத்துத்தரப்பினரும் பின்னிப்பிணைந்த வளர்ச்சியால் ஏற்பட்டது. இதற்குப் பதிலாக, ஒரே சீரான தன்மையை (uniformity) நீங்கள் திணித்திட முயற்சிப்பீர்களேயானால் - அது மதம் சார்ந்த சீரான தன்மையாக இருந்தாலும் (religious uniformity) சரி, அல்லது மொழிசார்ந்த சீரான தன்மையாக இருந்தாலும் (linguistic uniformity) சரி, அல்லது கலாச்சாரம் சார்ந்த சீரான தன்மையாக இருந்தாலும் (cultural uniformity) சரி. நம்முடைய வேற்றுமைகளை நான் ஒன்றுபடுத்திட முடியாது. அவ்வாறு செய்ய முயற்சித்தால் வெடித்துவிடும். நம் வேற்றுமைகளில் உள்ள பொதுத்தன்மைகளிடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதன் மூலமாகத்தான் நம் நாட்டை நாம் வலுப்படுத்த முடியும். (Our country can strengthen only when we strengthen the bonds of commonality that run through our diversity.) இவ்வாறு நம்மிடையிலான பந்தத்தை வலுப்படுத்திடுவதில் நாம் கவனம் செலுத்திட வேண்டும்.* 

நாம் மிகவும் நல்லியல்புடன் இங்கே பேசிக்கொண்டிருப்பதால், நாட்டில் நடக்கும் சில மோசமான அம்சங்களுக்கு எதிரான போராட்டத்தை இதுவரை நான் கூறவில்லை. இன்று நாட்டின் எதார்த்த நிலைமைகள் என்ன? தயவுசெய்து நாம் புரிந்துகொள்ள வேண்டும். விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கிறது. இளைஞர்களுக்கு எவ்வித வேலையும் இல்லை. ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அவர்கள் உழன்றுகொண்டிருக்கிறார்கள். உலகில் அதிக இளைஞர்கள் உள்ள நாடு நம் நாடுதான். நாம் நம் இளைஞர்களுக்கு அவர்களுக்கு உரிய கல்வியையும், சுகாதாரத்தையும், வேலையையும் அளித்தோமானால், உலகில் நம்மை விஞ்ச எவராலும் முடியாது. உலகின் மிகச்சிறந்த அறிவார்ந்த சமூகமாக நாம் மிளிர்வோம். நம்மிடம் அதற்கான சக்தி உண்டு. சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிட இவற்றில் தயவுசெய்து கவனம் செலுத்துங்கள். அப்போதுதான் எதிர்காலத்தில் நாம் சிறந்ததொரு சமூகத்தையும் உருவாக்க முடியும். 

ஆம், இதற்கு ஓர் அரசியல் அணுகுமுறை தேவைதான். இதனை எப்படிச் செய்வது என்பது குறித்து ஓர் அரசியல் முடிவினை நாம் மேற்கொள்ள வேண்டும். இதற்குப் பதிலாக நாட்டின் ஒற்றுமையைக் குலைக்க விரும்புகிறவர்களுக்கு நாம் இடம் அளித்திடக் கூடாது. இதில் சமரசத்திற்கே இடமில்லை. நாட்டின் ஒற்றுமை மற்றும் சமூகத்தின் மத்தியில் நல்லிணக்கம் பேணுவதில் எவ்வித சமரசத்திற்கும் இடம் கிடையாது. தயவுசெய்து இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கி றேன். 

*பன்முகக் கலாச்சாரம் (syncretic culture) என்று பேசிக்கொண்டிருக்கிறோம். இது தொடர்பாக இந்த அவையில் நான் இதற்கு முன் பேசியதில்லை. இப்போது கூறவேண்டும் என்று கருதுகிறேன். இந்த நாட்டில் என்னைப்போன்றவர்கள் பல லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள்.* 

*நான் சென்னையில் பொது மருத்துவமமனையில் ஒரு தெலுங்கு பேசும் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவன்.* *என் தாத்தா ஒரு நீதிபதியாக இருந்ததால்,* *சென்னையில் இருந்த ஆந்திர அமர்வாயத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார்.* *பின்னர் குண்டூருக்கு மாற்றலாகிச் சென்றார். நான் 1952இல் பிறந்தேன்.* *1956இல் ஹைதராபாத்திற்கு புலம்பெயர்ந்தேன். என் பள்ளிப்படிப்பு,* *ஹைதராபாத்தில் நிஜாம் மன்னர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த ஒரு இஸ்லாமியக் கலாச்சாரப் பள்ளியில் தொடர்ந்தது. பின்னர் தில்லிக்கு வந்தேன். இங்கே படித்தேன்.* 

*பின்னர் திருமணம் செய்துகொண்டேன்.* *அவரது தந்தை ஒரு இஸ்லாமிய மதத்தில் சுஃபி பிரிவைச் சேர்ந்தவர். அவரது தாயார் மைசூரிய ராஜ்புத் இனத்தைச் சேர்ந்தவர்.* *அங்கிருந்து எட்டாவது நூற்றாண்டில் புலம்பெயர்ந்து வந்தவர். இப்போது நாம் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.* *இவ்வாறு என் மனைவியானவர் தந்தைக்கும் தாய்க்கும் பிறந்தவராவார்.* *தென்னிந்திய பிராமணன் ஒருவன் இந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறேன்*. 

*என் மகனை எப்படி விளிப்பது? அவன் யார்? அவன் பிராமணனா?* *அவன் முஸ்லீமா? அவன் இந்துவா? அவன் யார்?* *அவனை இந்தியன் என்று சொல்வதைத் தவிர வேறெப்படியும் அழைத்திட முடியாது. இதுதான் நம் தேசம். இதுவே என் எடுத்துக்காட்டு. நான் என்னை ஓர் உதாரணமாக உங்களிடம் சொல்லி இருக்கிறேன். இதுதான் இந்தியா. இத்தகைய இந்தியாவைப் பாதுகாக்க வேண்டிய அவையில் நாம் வீற்றிருக்கிறோம்.* இத்தகைய இந்தியாவை நாம் பேணிப் பாதுகாத்திட வேண்டும். இது நடைபெறும் என்று நாம் நம்புவோம். இந்த வாய்ப்பை நல்கியமைக்காக நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்.*
(தமிழில்: ச.வீரமணி)

No comments:

Post a Comment