Friday, December 1, 2017

மழை நிறுத்திய விழா




கடந்த அக்டோபர் 1, 2 தேதிகளில் எங்கள் கோட்டச்சங்கத்தின் முப்பதாவது பொது மாநாடு ஆரணியில் நடைபெற்ற போது மக்கள் ஒற்றுமை கலை விழாவும் பொது வெளியில் நடைபெற்றது.

வேலூர் சாரல் கலைக்குழுவினரின் இனிய பாடல்களோடு நன்றாகவே தொடங்கியது. அற்புதமான தப்பாட்டம் தொடர்ந்தது. "யாரு மேல கீறினாலும் ரத்தம் ஒன்னுதான்" என்ற தலைப்பில் உரைவீச்சு நிகழ்த்த எழுத்தாளர் தோழர் மதுரை பாலன் மேடையேறினார். அவரோடு தூறலும் இணைந்து வர சில நிமிடங்கள் நிகழ்ச்சியை நிறுத்தினோம்.







பிறகு மீண்டும் அவர் பேச ஆரம்பிக்க மழையும் தொடர்ந்தது. குடைக்குள் நின்றவாரே அவர் பேசினார்.






அவரே முக நூலில் பதிவு செய்ததை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

"சாதி இரண்டொழிய வேறில்லை
சாற்றுங்கால்
நீதிவழுவா நெறிமுறையில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்"
என்று அவ்வை  பாடினார்.  அவ்வை பாடிய அந்த இட்டார்  என்பது  தர்மம்  இட்டார் பிச்சை இட்டார்   என்ற  அர்த்த்தில்  என்று  ரொம்பப்பேர்  புரிந்து  கொண்டிருக்கிறார்கள். அது அந்த அர்த்தத்தில் அல்ல.   யார் இந்த மண்ணைப் பொன்னாக்கு வதற்காக  தன் நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி  தன் குருதியைப் பிழிந்து கோலமாய் வரைந்து இந்த  மண்ணிற்கு  தன் உழைப்பை இடுகிறார்களோ  அந்த "இட்டார்" பெரியார் .
யார்  இந்த மண்ணிற்கு  உழைப்பை இடுவதில்லையோ  யார் அடுத்தவன்   உழைப்பைச்   சுரண்டி ஊதிக் கொழுக்கின்றார்களோ  அவர்கள்  இழிகுலத்தோர்   என்று   அவ்வை   பாடினார்.

அய்யர்  தேவர்  அகம்படியர்  வெள்ளாளர்  முதலியார்  நாயக்கர் இவர்கள் எல்லாம்  உயர்ந்தவ"ர்"களாம்

பள்ளன்  பறையன்  சக்கிலியன்  அம்பட்டையன்  வண்ணான் இவர்களெல்லாம் தாழ்ந்தவ"ன்" களாம். 

திருநெல்வேலி  பக்கத்தில்   9ஆம்  நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு கோவில் இருக்கிறது.  அங்கே முருகன் வள்ளி தெய்வானையோடு காட்சி தருகிறார்.அதில் என்ன விசேசம் என்றால் தெய்வாணை மார்புக் கச்சை அணிந்திருக்கிறார். வள்ளி  மார்புக் கச்சை அணியாமல் அரைநிர்வாணமாக  நின்று கொண்டிருக்கிறார்.  வள்ளி  தாழ்த்தப் பட்ட சாதியைச் சார்ந்தவளாம்.  அதனால்  மேலாடை  அணிவதற்கு  உரிமை இல்லையாம்.  நீ கடவுளின் பொண்டாட்டியாகவே இருந்தாலும் தாழ்த்தப்பட்டச் சாதியைச் சேர்ந்தவள் என்றால்  உனக்கு  மேலாடை அணிவதற்கு உரிமை இல்லை.



சூடான உரைக்கு பார்வையாளர்கள் தயாராகிக் கொண்டிருந்த போது அவர் உரையைக் கேட்க மழை மீண்டும் வந்து விட்டது. ஆர்வக்கோளாறில் வேகமாகவே வந்து விட, சென்று விடவும் அடம் பிடிக்க, வேறு வழியில்லாமல் நிகழ்ச்சியை கைவிட வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.

அனைத்து கலைஞர்களையும் மாநாட்டு அரங்கிற்கு அழைத்து வந்துதான் கௌரவிக்க வேண்டியிருந்தது.




இரண்டு மாதத்திற்கு முந்தைய நிகழ்ச்சி பற்றி இப்போது எதற்கு என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.

உழைப்பாளி மக்களுக்காக போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட மாநாடு  இன்று மாலை குடியாத்ததில் தொடங்குகிறது.



நேற்று முதலே மழை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

தொலைக்காட்சி விளம்பரங்கள் போல   A SMALL BREAK மழையும் எடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.

நல்லவர்களுக்கு இயற்கையும் ஒத்துழைத்தால் நல்லது.

No comments:

Post a Comment