Wednesday, December 20, 2017

மோடி படிக்க வேண்டிய ஔரங்கசீப் கடிதம்.



வாட்ஸப்பில் வந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.

ஔரங்கசீப் பற்றி உருவாக்கப்பட்ட மோசமான பிம்பங்களை தகர்ப்பதாக  அவர் எழுதிய கடிதம் அமைந்துள்ளது. நிதானமாக படியுங்கள். 

யார் படிக்காவிட்டாலும் மோடி நிச்சயம் இக்கடிதத்தை படிக்க வேண்டும். ஏனென்றால் அவரது ஆசிரியரும் இது போல மோசமான ஒருவராகக் கூட இருந்திருக்கலாம் அல்லவா?

யாருங்க அது? மோடி நிஜமாகவே படிச்சாரா இல்லையான்னு இன்னும் முடிவு தெரியாத போது அவருடைய ஆசிரியரைப் பத்தி பேசறதுன்னு சத்தம் போடறது?





ஒளரங்கசீப் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்

வரலாற்றில் இடம் பெற்ற புகழ்பெற்ற கடிதங்களில் ஒளரங்கசீப் தன் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் மிக முதன்மையானது. ஆசிரியர்கள் இன்றியமையாது படிக்க வேண்டியது; கல்வியியல் பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டியது.

1658இல் ஒளரங்கசீப் ஹிந்துஸ்தானத்தில் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டார். அவருடைய இளம் வயது ஆசிரியர் முல்லாசாஹப் தனக்கு அரசசபையில் பதவியும், பரிசும் தர வேண்டும் என்று கோரியிருந்தார். அதற்கு ஒளரங்கசீப் எழுதிய பதில் கடிதம் தான் இது.

அன்று ஒளரங்கசீப் கற்ற கல்வியைப் பற்றியும், ஆசிரியர் தனக்கு வாழ்வியலைக் கற்பிக்க வில்லையே! என்ற ஆதங்கத்தையும் அக்கடிதம் உணர்த்துகிறது. 350 ஆண்டிற்கு முன்னே கல்வி எப்படி இருந்திருக்க வேண்டும்? என்று விவாதிப்பது இன்றும் பொருத்தமுடையதாகவே இருக்கிறது. இந்தப் பின்னணியில் கடிதத்தைப் படியுங்கள்; பயனள்ள செய்திகளை (வாழ்வியல்) இளமைப் பருவத்திலேயே கற்றுக் கொடுக்காமல் போய் விட்டார்களே என்று வயிறெரிந்து எழுதுகிறார், ஒளரங்கசீப்.

கற்றவரே!

நீர் என்னிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? நான் உங்களை என்னுடைய அரசவையில் ஒரு முதன்மைப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று உங்களால் நியாயமாக எதிர்பார்க்க முடியுமா?

ஒன்று சொல்கிறேன் – நீங்கள் எனக்கு எப்படிக் கல்வி போதித்து இருக்க வேண்டுமோ, அப்படிச் செய்திருந்தால் உங்களுக்கு நான் பதவியைத் தருவது போன்று நியாயமான காரியம் வேறு எதுவுமே இருக்க முடியாது.

ஏனென்றால், நான் ஒரு செய்தியை உறுதியாக ஒப்புக் கொள்வேன். ஒரு குழந்தை தன்னுடைய தந்தைக்கு எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறதோ, அந்த அளவுக்குத் தனக்கு முறையான கல்வியைப் போதித்த ஆசிரியருக்கும் கடமைப்பட்டிருக்கிறது.

ஆனால், நீங்கள் எனக்குப் போதித்த முறையான கல்வி என்பது எங்கே இருக்கிறது? ஐரோப்பாவை ஒன்றுமில்லாத ஒரு சூன்யப் பிரதேசம் என்று போதித்தீர்கள். போர்ச்சுக்கீசிய நாட்டு மாபெரும் மன்னரைப் பற்றியோ, அவருக்கு அடுத்த ஹாலந்து மன்னரைப் பற்றியோ, இங்கிலாந்து மன்னரைப் பற்றியோ, நீர் எனக்கு ஒரு விபரமும் கூறவில்லை. பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாட்டு மன்னர்கள் எல்லாம் நமக்கு அடங்கிய, மிகச் சிறிய குறுநில மன்னர்கள் என்று கூறினீர்கள்.

ஹிந்துஸ்தான் மன்னர்களின் பெயரைக் கேட்டாலே, உலகத்தில் எந்த நாட்டு மன்னனும் நடுங்கினான் என்று கதை கட்டினீர்கள். எங்கள் பரம்பரையைப் புகழ வேண்டுமே என்பதற்காக உலகத்தில் உள்ள மற்ற நாடுகள் எல்லாம் நமக்கு அடங்கினவையே என்று கூறினீர்கள். ஆழமான வியந்து பாராட்ட வேண்டிய சரித்திர அறிவு!

எனக்கு நீங்கள் என்ன கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்? உலக நாடுகளில் எல்லாம் என்ன நடக்கிறது? அந்த நாடுகளின் பலம் என்ன? அவர்களின் போர் முறைகள் என்ன? மதக் கோட்பாடுகள் என்ன? ராஜ தந்திரங்கள் என்ன? இவற்றையெல்லாம் எனக்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருக்க வேண்டாமா?

உண்மையான சரித்திரத்தை எனக்குக் கற்றுக் கொடுத்து, பல நாட்டு மன்னர்களின் வாழ்வையும் தாழ்வையும் அவர்களது எழுச்சியையும், வீழ்ச்சியையும் நான் உணரும்படிச் செய்திருக்க வேண்டாமா?

எந்த விதமான தவறுகள் அல்லது எதிர்பாராத நிகழ்ச்சிகளால், அங்கே புரட்சிகள் தோன்றின. எந்தச் சாம்ராஜ்யங்கள் அழிந்தன என்றெல்லாம் நீங்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா?

உங்களிடம் இருந்து என்னுடைய முப்பாட்டனார்கள் பெயர்களைக் கூட நான் அறிந்து கொள்ளவில்லை. ஹிந்துஸ்தான் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த புகழ்பெற்ற என்னுடைய முன்னோர்களைப் பற்றிக்கூட உங்களிடமிருந்து நான் ஒன்றும் தெரிந்து கொள்ளவில்லை. இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த அவர்களுடைய சரித்திரத்திற்கும், நீங்கள் எனக்குக் கற்பித்ததற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி இருந்திருக்கிறது?

எனக்கு அரேபிய மொழியை எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடுக்க முனைந்தீர்கள். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு மேலாக விழுந்து விழுந்து படித்தாலும், முழுமையாகக் கற்றுக் கொள்ள முடியாத ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்ததன் விளைவாக எனது வாழ்நாளில் அவ்வளவு நேரத்தை வீணடித்ததற்காக உங்களுக்கு நான் ரொம்பவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒரு வருங்கால அரசன் பன்மொழிப் புலவனாக இருந்துதான் தீர வேண்டுமா என்ன? அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பேசும் மொழியை விடுத்து, இப்படி ஒரு கடினமான மொழியில் புலமை அடைவதுதான் ஓர் அரசனுக்குப் பெருமையா? ராஜ பரிபாலனம் செய்வதற்கான அவசியமான முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய நான், அரேபிய மொழியைக் கற்பதில் காலம் கழித்தேன்.

ஒரு மனிதன் தன்னுடைய இளம் வயதில் நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டால், அந்த நினைவு வாழ்நாள் முழுவதும் நிலைத்து, அவனைப் பெரும் சாதனை செய்யத் தூண்டும் என்பது உங்களுக்குத் தெரியாது போலும்.

சட்டம் – மத வழிபாட்டு முறைகள் – விஞ்ஞானம் – அவற்றையெல்லாம் எனது தாய்மொழியில் நான் கற்றிருக்க முடியாதா? அரேபிய மொழியை ஏன் என் தலையில் கட்டினீர்கள்?

என் தந்தை ஷாஜஹானிடம் எனக்கு மதத் தத்துவங்களைப் போதிக்கப் போவதாக நீங்கள் சொன்னது எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. அர்த்தமே இல்லாத – இருந்தாலும் புரிந்து கொள்ள முடியாத – புரிந்து கொண்டாலும் மனத் திருப்தி அளிக்காத – மனத் திருப்தி அளித்தாலும் கூட, இன்றைய சமுதாயத்தில் எந்தவிதப் பயனுமே இல்லாத புதிர்களையெல்லாம் என்னிடம் போட்டுக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் கற்றுக் கொடுத்த தத்துவங்களைப் பற்றி இப்படித்தான் புகழ முடியும். அவையெல்லாம் புரிந்துகொள்ள மிகக் கடினமானவை; மறப்பதற்கு மிக எளியவை.

நீங்கள் போதித்த மதத் தத்துவங்களைப் பற்றி என் நினைவில் மீதம் இருப்பதெல்லாம் காட்டு மிராண்டித்தனமான இருள் அடைந்த மிகப் பெரிய வார்த்தைகள்தாம்; மேதாவிகளைக் கூடக் குழப்பக் கூடிய பயங்கரமான வார்த்தைகள். உங்களைப் போன்றவர்களின் அறியாமையையும், இறுமாப்பையும் மறைக்க உங்களைப் போன்றவர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தைகள்.
உங்களுக்குத் தான் எல்லாம் தெரியும்.

உங்களைப் போன்ற மேதாவிகளுக்குத்தான் இந்தப் பயங்கர வார்த்தைகளில் அடங்கியிருக்கக் கூடிய அரிய தத்துவ ரகசியங்கள் புரியும் என்று மற்றவர்கள் நினைத்து ஏமாந்து போவதற்காக உங்களைப் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட வெறும் வார்த்தைகள்.

காரண காரியங்களை மட்டுமே பார்க்கும் மனப் பக்குவத்தை ஏற்படுத்தக் கூடிய மதத் தத்துவங்களை நீங்கள் எனக்குப் போதித்திருந்தால், மனத்தை ஒரு நிதானத்தில் அடக்கி வைக்கப் பயன்படும் அரிய தத்துவங்களை எனக்கு நீங்கள் போதித்திருந்தால்,

அதிர்ஷ்டத்தினால் தாக்கப்பட்டு, செல்வத்தில் திளைத்தாலும் சரி, துரதிர்ஷ்டத்தினால் தாக்கப்பட்டுத் தோல்வியைத் தழுவினாலும் சரி, இரண்டுக்குமே மயங்காத மனோ தைரியத்தை அளிக்கக் கூடிய தத்துவங்களை நீங்கள் எனக்குப் போதித்திருந்தால்,

நாம் யார்? உலகத்தின் மேன்மை என்ன? எப்படி இந்தப் பூமி இயங்குகிறது? என்பதையெல்லாம் நான் உணர்ந்து கொள்ள உதவி செய்யும் வகையில் நீங்கள் எனக்குக் கல்வி போதித்திருந்தால்,

இப்போதும் சொல்கிறேன்; இந்த மாதிரி விஷயங்களையும் தத்துவங்களையும் நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்திருந்தால், நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாக இருந்திருப்பேன்.

அலெக்ஸாண்டர் அவனுடைய குரு அரிஸ்டாடிலுக்கு எவ்வளவு கடமைப்பட்டிருந்தானோ அதைவிட உங்களுக்கு நான் கடமைப்பட்டிருப்பேன். அலெக்ஸாண்டர் அரிஸ்டாடிலுக்குச் செய்ததற்கும் மேலாக உங்களுக்குச் செய்திருப்பேன்; நன்றி காட்டியிருப்பேன்.

சதா என்னை முகஸ்துதி செய்து கொண்டே இருந்ததற்குப் பதிலாக, ராஜ பரிபாலனத்துக்குத் தேவையான விஷயங்களை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டாமா?

குடிமக்களுக்கு அரசன் செய்ய வேண்டிய கடமை என்ன? அரசனுக்கு குடிமக்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா?

எனது வாழ்க்கைப் பாதையில் ஒரு கால கட்டத்தில் என்னுடைய பதவிக்காகவும், உயிருக்காகவும் கூட, என்னுடைய உடன்பிறந்த சகோதரர்களுடனேயே நான் வாள் எடுத்துப் போரிட நேரிடும் என்பதையும் உணரும் அளவிற்கு நீங்கள் போதித்த கல்வி அமைந்திருக்க வேண்டாமா?

ஒரு நகரத்தை எப்படிக் கைப்பற்றுவது? ஒரு போர்ப்படையை எப்படி நடத்திச் செல்வது? என்பதையெல்லாம் நான் அறிந்து கொள்வதில் நீங்கள் அக்கறை காட்டினீர்களா?

பயனள்ள விஷயங்களை ஏதாவது நான் அறிந்து கொள்வதில் நீங்கள் அக்கறை காட்டினீர்களா? பயனள்ள விஷயங்களை எதாவது நான் இப்போது அறிந்து வைத்திருந்தால், அதற்காக நான் மற்ற பலருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்; நிச்சயமாக உமக்கல்ல.

“போங்கள்! நீங்கள் எந்தக் கிராமத்திலிருந்து வந்தீர்களோ, அந்தக் கிராமத்திற்கே போய்ச் சேருங்கள்! நீர் யார்? எங்கிருந்து வந்தீர்கள்? என்ன ஆனீர்கள்? என்பதையெல்லாம் எவருமே தெரிந்து கொள்ள வேண்டாம்.”

-ஒளரங்கசீப்

8 comments:

  1. அருமையான பதிவு

    ReplyDelete
  2. போங்கள்! நீங்கள் எந்தக் கிராமத்திலிருந்து வந்தீர்களோ, அந்தக் கிராமத்திற்கே போய்ச் சேருங்கள்! நீர் யார்? எங்கிருந்து வந்தீர்கள்? என்ன ஆனீர்கள்? என்பதையெல்லாம் எவருமே தெரிந்து கொள்ள வேண்டாம்.”

    wow....super....
    ek kalathukkum
    porundhum...

    Ek katchikkum...

    ReplyDelete
  3. கடிதம் நியாயமானது
    மோடியை தவிர்த்து பார்த்தால் கூட அவுரங்கசீப் நியாயமாக இருக்கவில்லை
    தந்தை , சகோதர்கள் விடயத்தில்
    அவுரங்கசீப் செக்குலராக இருக்கவில்லை ... ஆனால் அவர் தந்தை , தாத்தா சிறந்த அரசர்களாக இருந்தார்கள்

    அக்பரை மோடி திட்டினால் மோடியில் தான் சிக்கல் ... அவுரங்கசீப் ஒன்றும் புனிதர் அல்ல..

    எது எவ்வாறாக இருந்தாலும் உலகில் சிறந்த கடிதங்களில் இதுவும் ஒன்று
    ஆனால் இந்த கடிதமே அவுரங்கசீப் முழுமையாக வெளிப்படுத்தாது .. ஆனால் அவுரங்கசீப் ஐ நன்கு உருவாக்கிட அந்த ஆசிரியர் தவறி இருக்கார் என்பது தெரிகின்றது.

    நம்பிக்கை ராஜ்
    அ.தி.மு.க

    ReplyDelete
    Replies
    1. உங்க கட்சியின் இன்றைய நிலை போல உங்களின் பின்னூட்டமும் ஒரே குழப்பமா இருக்கே!

      Delete
  4. He is a mad guy, who refused his teacher's small obligation. By the way, this letter seems to be written by modi to his tss boss.

    ReplyDelete
  5. மோடி அவுரங்கசீப்பை எதிர்க்கின்றான் என்னும் ஒரே காரணத்துக்காக அவுரங்க சீப் புனிதன் ஆகி விட மாட்டார்
    எடுத்து காட்டு
    மோடியை சீமான் எதிர்க்கின்ற காரணத்துக்காக சீமான் போராளி / புனிதன் / சிறந்த தலைவர் ஆகிட முடியாது

    அவுரங்க சீப் எழுதியது மிக சிறந்த கடிதம் அதில் எள்ளளவும் மாற்று கருத்து இல்லை
    ஆனால் அவுரங்கசீப் அவர் வாழ்நாளில் செய்த தீமைகளே அதிகம் . அவர் தாத்தா அக் பர் கால் தூசுக்கு இணையாக மாட்டார்



    நம்பிக்கை ராஜ்
    அம்மா அ.தி.மு.க

    ReplyDelete
  6. http://tamil.thehindu.com/opinion/reporter-page/article21997239.ece?homepage=true

    For your view..

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete